மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ளது. அதாவது கொரோனா வைரஸ் தாக்கம் இனிமேல்தான் வர உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்திருக்கிறார். தற்போதைய சூழலில் அரசாங்கம் சரியான கொள்கைகளை செயல்படுத்த  தவறினால் இந்த வைரஸ் இன்னும் பலரையும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்றே தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளையும் உலுக்கி வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது நீங்கியமைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாத போதிலும் தொடர்ந்தும் மக்கள் கவனயீனமாக  இருந்தால் அதன் கொடூர தன்மைக்கு முகம்கொடுக்க வேண்டியதை தவிர்க்க முடியாது போகும். அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் கருத்திற்கொண்டு ஊரடங்கை முழுமையாக நீக்கி உள்ளது. 

எனினும் மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதை எந்த வகையிலும் தவிர்க்கக் கூடாது என அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிதல் மற்றும் கையைக் கழுவிய நிலையில் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களுக்குப் பிரவேசித்தல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் முகக்கவசம் அணியாத நிலையில் கடந்த இரு தினங்களில் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . தொடர்ந்தும் அரசாங்கம் முகக்கவசம் அணியாத நிலையில் பொது இடங்களில் பயணிப்போரை கைதுசெய்து தனிமைப்படுதலுக்கு உட்படுத்த பொலிசார் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாட்டில் கொரோனா தொற்றுப் பரவாமல் இருப்பதை உறுதி செய்யவும் அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு பொதுமக்களை சார்ந்ததாகும்.  

இதேவேளை மக்கள் அதிகமாகக்கூடும் சந்தைகள் மற்றும் போக்குவரத்து சாலைகள் போன்ற இடங்களில் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும் .  குறிப்பாக பொதுப்போக்குவரத்துகளில் பெரும் எண்ணிக்கையான மக்கள் பயணித்து வருகின்றனர். எனினும் நடத்துநர்களும் சாரதிகளும் முகக்கவசத்தை சரியான முறையில் அணியாமல் வெறுமனே கழுத்துப் பகுதியில் தொங்க விட்டவாறு நடந்து கொள்வதாகவும் இதனால் எந்தவித பயனும் இல்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.

முகக்கவசங்களை பயன்படுத்துவோர் எதற்காக அதனை அணிய வேண்டும் என்பதை உணர்ந்து பயன்படுத்துவது மிகவும் அத்தியாவசியமாகும். அதனைவிடுத்து பொலிஸாருக்கு அஞ்சியோ  அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமையவோ அதனை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் சட்டைப் பைகளில் வைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை. 

எனவே இவ்வாறு முகக்கவசங்களை உரிய முறையில் பயன்படுத்தத் தவறுவோர் விடயத்திலும் உரிய நடவடிக்கை எடுத்தல் அவசியமாகும்.

தமதும் சமூகத்தினதும் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டே அரசாங்கம் சுகாதார செயற்பாடுகளை பின்பற்றுமாறும் முகக்கவசத்தை அணியுமாறும் வலியுறுத்தி வருவதுடன் தவறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தும் வருகின்றது.

எனவே மக்கள் அதனைக் கருத்தில் கொண்டு செயல்படுவது மிகவும் இன்றியமையாததாகும். இன்றேல் கொரோனா பிடியில் இருந்து ஒருபோதும் விடுபட முடியாத நிலைமையே மிஞ்சுவதாக இருக்கும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்