(எம்.மனோசித்ரா)

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படம் , விருப்பு இலக்கம் கொண்ட பதாதைகளை காட்சிப்படுத்தக் கூடாது என்பது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயமாகும்.

இது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் என்று பலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். பழைய முறைமைக்கு பழகியுள்ளதன் காரணமாகவே அவர்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அத்தோடு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கே வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். தபால் மூல வாக்குகளையும் அன்றைய தினமே எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை 4 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவினை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தபால் மூல வாக்களிப்பு

தபால் மூல வாக்கெடுப்பு ஜூலை 13 , 14, 15, 16, 17 இடம்பெறவுள்ளன. 14 மற்றும் 15 ஆம் திகதிகள் சாதாரண அலுவலகங்களும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கச்சேரிகள் , பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் என்று முன்னர் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் சுகாதாரத்துறையுடன் இணைந்த அரச ஊழியர்களுக்காக 13 ஆம் திகதி வாக்கெடுப்பினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காரணம் ஏனைய தினங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படும் போது சுகாதார பாதுகாப்பு குறித்து இவர்களே கண்காணிக்க வேண்டியுள்ளது என்பதனால் ஆகும். தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு ஜூலை 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கச்சேரிகளுக்குச் சென்று வாக்களிக்க முடியும்.

சுகாதார வழிகாட்டல்கள்

சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அவை தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படவில்லை. அடுத்த வாரமளவில் இதனை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.

வாக்காளர்கள் முகக் கவசம் அணிய வேண்டியது அவசியமாகும். அத்தோடு கைகளைக் கழுவி செனிடைசர் பாவிப்பது மற்றும் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுதல் என்பதும் கட்டாயமாகும்.

உத்தியோகபூர்வ தேர்தல் அட்டைகள்

உத்தியோகபூர்வ தேர்தல் அட்டைகளில் சில சந்தர்ப்பங்களில் பெயர் , பாலினம் , அடையாள அட்டை இலக்கம் என்பவற்றில் பிழைகள் அல்லது மாற்றங்கள் காணப்படலாம். எனினும் அவை வாக்களிப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது. அடையாள அட்டை இலக்கத்தில் மாற்றங்கள் காணப்படுமாயின் அவையும் தேர்தலில் வாக்களிப்பதில் பாதிப்பை உண்டாக்காது.

பிரசாரங்கள்

ஆகஸ்ட் மாதம் 3 , 4 ஆம் திகதிகளில் பிரசார நடவடிக்கைகள் அல்லது விளம்பரங்களை முன்னெடுத்தல் நிறுத்தப்படும். அரசியல் கட்சிகள் பிரசாரங்களை முன்னெடுக்கும் போது 100 ஆதரவாளர்கள் மாத்திரமே காணப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறையினரே தீர்மானித்தனர். எனினும் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாகத் தெரிவித்து எம்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். 10 ஆதரவாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டமாக இருந்தாலும் அதில் கலந்து கொள்பவர்களுடைய பெயர்ப்பட்டியலை கூட்டத்தை ஏற்பாடு செய்பவர் வைத்திருக்க வேண்டும்.

கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு 500 பேரை அனுமதிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தோடு தேர்தல் தொகுதிகளில் இடம்பெறும் கூட்டங்களுக்கு 300 பேரை அனுமதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காகவே தேர்தல் நடத்தப்படுகின்றது. தேர்தலை நடத்துவதற்கு நாட்டு மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதை இவ்வாறான கோரிக்கைகளை முன்வைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் சட்டம்

வேட்பாளரொருவர் தான் செல்லும் வாகனம் தவிர ஏனைய வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தால் அவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு. அதனை நடைமுறைப்படுத்துமாறு நாம் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். புகைப்படம் மற்றும் விருப்பு இலக்கத்துடன் கூடிய பதாதைகள் தேர்தலின் போது காட்சிப்படுத்தப்படக் கூடாது என்பது ஆணைக்குழு தனித்து எடுத்த தீர்மானம் அல்ல என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயமாகும். அதனையே தற்போது நாம் நடைமுறைப்படுத்துகின்றோம். ஆரம்பத்தில் இந்த தேர்தல் சட்டங்களை பெருமளவானவர்கள் பின்பற்றுவதில்லை. எனினும் கடந்த காலங்களில் நாம் இதனை வரையறைப்படுத்தியிருந்ததோடு தற்போது முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளோம்.

எனினும் கட்சி அலுவலகங்களில் 40 தொடக்கம் 50 அடி வரையில் கட்சியின் சின்னம் பெயர் என்பவற்றோடு பதாதைகளை காட்சிப்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விருப்பு இலக்கங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமெ எண்ணுபவர்கள் குறுகிய மக்கள் சந்திப்புக்களை நடத்த முடியும். வீடுகளுக்குச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகிக்க முடியும். எனினும் அனைவரும் பழைய முறைமைக்கு பழகியிருப்பதனால் இதனை ஏற்க மறுக்கின்றனர்.

மதஸ்தலங்களில் அரசியல்

எந்தவொரு மதஸ்தலத்திலும் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படக் கூடாது. அவ்வாறு முன்னெடுக்கப்பட்டால் அது கைது செய்யப்படக் கூடிய குற்றமாகும். இந்த குற்றம் நிரூபிக்கப்படுபவர்களது ஆசனத்திலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

தேர்தல் வன்முறைகள்

இம்முறை பாரியளவிலான தேர்தல் வன்முறைகள் பதிவாகவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். எனினும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஆதரவாளர்களுக்கு பொருட்களை பகிர்ந்தளிப்பதாகவும் அமைச்சின் வாகனங்களை பயன்படுத்துவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் குறித்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

வாக்களிக்கும் நேரத்தை அதிகரித்தல்

வாக்களிப்பதற்கான நேரத்தை அதிகரிப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை. மீண்டும் ஒரு முறை அனைத்து தேர்தல் மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து நிலைமையினை ஆராயந்த பின்னர் இது குறித்து அறிவிக்கப்படும்.

சீருடையில் பிரசாரங்களில் ஈடுபடல்

முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தமது சீருடையில் பிரசாரங்களில் ஈடுபடுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. வேட்பாளர்களின் ஒழுக்க விதிமுறைகள் இன்னமும் சட்டமாக்கப்படவில்லை. எனவே வேட்பாளர்களால் சில முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் அது தேர்தலில் தாக்கம் செலுத்துகின்றதா என்பதை ஆணைக்குழு பிரத்தியேகமாக ஆராய வேண்டும்.

வாகனங்களை கையளிக்கவும்

முன்னாள் அமைச்சர்கள் கையளிக்காத ஐந்திற்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்களை வாகனங்களைக் கையகப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், கையளிக்கப்பட்டிருக்க வேண்டிய சில வாகனங்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இதுவரை கையளிக்கவில்லையென முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இராஜாங்க அமைச்சுப் பதவிகள் தற்போது இல்லையென்பதால், உத்தியோகபூர்வ வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டிருக்க வேண்டும் .

வாகனங்கள் கையகப்படுத்தப்பட்ட பின்னர் சட்டம் மீறப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், எதிர்வரும் பொதுத்தேர்தலில் குறித்த அரசியல்வாதிகளின் ஆசனங்கள் பறிபோகும் சந்தர்ப்பமுள்ளது.