(எம்.ஆர்.எம்.வஸீம்)

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்ரல் கமல் குணரத்னவுக்கு தெரிவித்துள்ளார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அஸாத்சாலிக்கு வழங்கப்பட்டிருந்த மெய் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீளப்பெறப்பட்டமை மற்றும் அவருக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்காமல் இருப்பதற்கான காரணம் கேட்டு தேர்தல்கள் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றுது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கையெழுத்துடன் அனுப்பப்பட்டுள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு்ள்ளதாவது, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் தலைவராகவும் முன்னாள் ஆளுநராகவும் இருந்து தற்போது அரசியல் கட்சி ஒன்றில் தேசியப்பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டிருக்கும் எம். அஸாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பல தடவைகள் அறிவுறுத்தி இருந்தது. 

அவருக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளுமாறும் அவ்வாறு முடியாது எனின் அதற்கான காரணத்தை தெரிவிக்குமாறும் கடந்த மே மாதம் 26ஆம் திகதியும் இது தொடர்பாக அறிவித்திருந்தோம். எனினும், குறித்த கடிதத்துக்கு இதுவரை தெளிவான பதில் எதுவும் வழங்கி இருக்கவில்லை. அதனால் அசாத்சாலிக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தி, தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.