(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பில் இருந்து உருவாகிய பிரதமர்கள்  செய்த சேவைகளைவிட பலமடங்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வடகொழும்பில் நேற்று  இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக கொழும்பு மாவட்டத்திலே நான் போட்டியிடுகின்றேன். தேர்தலுக்கு பின்னர் நாங்கள் அமைக்கும் புதிய அரசாங்கத்தில் நான் பிரதமராகி, கொழும்பு மாவட்டத்துக்கும் குறிப்பாக கொழும்பு மாநகர தொகுதிக்கும் விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்வேன். இந்த பிரதேசத்தில் அதிகமான படித்த இளைஞர் யுவதிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

அரசாங்கம் கொராேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் 5 ஆயிரம் ரூபாவை மாத்திரம் வழங்கி, மக்களை ஏமாற்றி இருக்கின்றது. அந்த 5 ஆயிரம் ரூபாவையும் மொட்டு கட்சி உறுப்பினர்களிடம் கையேந்தியே பெற்றுக்கொள்ள வேண்டி இருந்தது. நாட்டு மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

ஆனால் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்று அமைக்கும் அரசாங்கத்தில் அடிமை நிலையில் இருந்து மக்களை மீட்டெடுப்போம். வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 20 ஆயிரம் ரூபாவை நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.