புதுடில்லி / கொழும்பு , ( த இந்து ) தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடன் செலுத்துவதற்கான தவணையை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோள் தொடர்பில் இன்னமும் இந்தியா தீர்மானமொன்றை எடுக்கவில்லை என்ற போதிலும், அந்த வேண்டுகோள் இன்னமும் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச 4 மாதங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாகத் தனிப்பட்ட முறையில் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.
கடந்த சனிக்கிழமை கொழும்பில் ஐக்கிய நாடுகள் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது வளர்முக நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குமாறு சர்வதேச நிதி நிறுவனங்களிடமும் இந்தியா உட்பட கடன் பங்காளி நாடுகளிடமும் ஏற்கனவே விடுத்திருந்த வேண்டுகோளை பிரதமர் ராஜபக்ச மீண்டும் முன்வைத்தார் என்று பிரதமரின் அலுவலகம் கூறியது.
96 கோடி டொலர்கள் கடன்
இந்தியாவுக்கு இலங்கை வழங்க வேண்டிய மொத்தம் 96 கோடி டொலர்கள் கடனை மீளச் செலுத்துவதை தாமதிப்பது குறித்தும் நாணய பரிமாற்ற ஏற்பாடுகளுக்காக இலங்கையினால் தனித்தனியாக விடுக்கப்பட்ட இரு வேண்டுகோள்கள் குறித்தும் இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக டில்லியிலும் கொழும்பிலுமுள்ள அதிகாரிகள் மூலம் அறியக்கிடைக்கிறது.
மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே வீடியோ மகாநாடொன்றை நடத்த இப்போது இந்திய வெளிவிவகார அமைச்சு யோசனையொன்றை முன்வைத்திருந்தது என்று கூறிய அந்த அமைச்சின் அதிகாரிகள் தவணை நீடிப்புக்கான ராஜபக்சக்களின் கோரிக்கை இன்னமும் ஏன் தீர்த்து வைக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கமளிக்கவில்லை. ' எப்போது பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்து இலங்கைத் தரப்பு இன்னமும் பதில் கூறவில்லை. ' என்று ஒரு இந்திய அதிகாரி 'த இந்து'விடம் கூறினார்.
கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழுவொன்றை சந்தித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மேலும் கடன் உதவிக்கு பதிலாக புதிய முதலீடுகள் இலங்கைக்கு தேவைப்படுகிறது என்று கூறியதுடன் கடன்களை மீளச் செலுத்துவதுவதற்கான தவணையை நீடிக்குமாறும் கேட்டுக் கொண்டார். கடந்த மார்ச்சிலும் ஏப்ரலிலும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருந்த நேரத்தில் இதே வேண்டுகோளை அவர் சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களிடம் விடுத்திருந்தார்.
பொருளாதாரப் பிரச்சினைகளாலும் கடந்த வருட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் விளைவாகவும் ஏற்கனவே இடர்நிலைக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையின் அந்நிய செலாவணிக் கையிருப்பு - கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவத் தொடங்கிய பிறகு மேலும் குறைவடைந்தது. இலங்கைக்கு வருவாய் ஈட்டித்தருக்கின்ற பிரதான துறைகளான தேயிலை மற்றும் ஆடை வகைகள் ஏற்றுமதியும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணமும் சுற்றுலாத்துறையும் கடுமையாக பாதிப்படைந்த நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு மேலும் ஆபத்துக்குள்ளாகக் கூடிய நிலை இருக்கிறது.
இலங்கை அதன் மொத்த வெளிநாட்டு கடன்களில் 890 கோடி டொலர்களை இவ்வருடம் மீளச் செலுத்த வேண்டும். ஆனால் அது இந்தியாவிடம் இது வரையில் 3 கோரிக்கைகளை விடுத்திருக்கிறது. ஒன்று கடன் தவணை நீடிப்புக்கானது. மற்றையவை இரண்டும் நாணய பரிமாற்ற ஏற்பாட்டுகளுக்காக தனித்தனியாக விடுக்கப்பட்டவை.
சீனா நோக்கி திரும்புகிறது இலங்கை
இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்கோள்களுக்கு மற்றைய தரப்புக்களிடமிருந்து அனுகூலமான பதில்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் மங்கலாக இருக்கும் நிலையில், 2016 ஆம் ஆண்டு செய்ததைப் போன்று அது மீண்டும் ஒரு தடவை சீனாவை நோக்கி திரும்ப வேண்டியிருக்கலாம். ஆனால் அதற்கு புதுடில்லியில் ஆட்சேபனை கிளம்பக் கூடும். மே 13 ஆம் திகதி சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்கிற்கும் ஜனாதிபதி ராஜபக்சவுக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி சம்பாசனையை அடுத்து வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தை சமாளிப்பதற்கு உதவியாக பெய்ஜிங் அதன் அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலதிகமாக 50 கோடி டொலர்கள் கடன் உதவியை ஏற்கனவே அங்கீகரித்திருக்கிறது.
கடன் தவணை நீடிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் பற்றி கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் இரு நாடுகளுமே வௌ;வேறான வழிமுறைகள் மற்றும் ஏற்பாடுகளிகளின் ஊடாக நிதித்துறையில் ஒத்துழைப்புக்கள் குறித்து சேர்ந்து செயற்பட்டு வருவதை உறுதி செய்தார்கள். ' எதிர்வரும் வாரங்களில் மேலும் நடைமுறைச் சாத்தியமான முன்னேற்றம் காணப்படும் என்று சீன தூதரகத்தின் பேச்சாளர் லுவோ ஷொங் 'த இந்து'விடம் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலுக்கு முன்னதாகக் கூட பெப்ரவரியில் புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கடன் தவணை நீடிப்புக்கான வேண்டுகோளை பிரதமர் ராஜபக்ச இந்தியாவிடம் முன்வைத்தார். 'இந்து'வுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அதை அவர் உறுதி செய்திருந்தார். கடந்த ஏப்ரலில் இலங்கை மத்திய வங்கி ' சார்க் ' ஏற்பாடுகளின் கீழ் இந்திய ரிசேர்வ் வங்கியுடன் 40 கோடி டொலர்கள் நாணய பரிமாற்றத்திற்கு கோரிக்கை விடுத்தது.
பிறகு மே மாதத்தில் வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மீண்டும் 110 கோடி டொலர்கள் நாணய பரிமாற்ற விசேட ஏற்பாடொன்றுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
உத்தேச இலகு ரயில் போக்குவரத்து திட்டம் ஒன்றுக்கான நிதி வழங்கலை ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் நிறுத்தி வைத்திருப்பதால் இலங்கை அரசாங்கம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக வேண்டியேற்படலாம். ஏன் என்றால் இலங்கையின் கடன்கள் அதிகரிப்பு குறித்து பிரச்சினைகள் தோன்றும் நிலை இருக்கிறது. இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் அண்ணளவாக 5500 கோடி டொலர்களாகும். இது நாட்டின் நிகர உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 80 சதவீதமாகும் என்று கடந்த வருடம் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ விபரங்கள் மூலம் தெரியவந்தது. அந்த கடனில் சீனாவும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் தலா 14 வீதத்தை கொடுத்திருக்கின்றன. ஜப்பான் 12 வீதத்தையும் உலக வங்கி 11 வீதத்தையும் கொடுத்த அதே வேளை இந்தியா சுமார் 2 வீதத்தையே வழங்கியது.
பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளும் கூட இப்போது கடன் மீள் செலுத்துகையில் நிவாரணத்தைக் கோருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ராஜபக்சவுடன் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வைரஸ் தொற்று நோயின் பொருளாதார தாக்கத்தை தணிப்பதற்கு கடன் நிவாரணம் தொடர்பான உலகலாவிய செயற்திட்டம் ஒன்றில் இணைவது குறித்து ஆலோசித்தார் என்று கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மாலைத்தீவில் ஜனாதிபதி சோலீயின் அரசாங்கம் அதன் சகல இருதரப்பு பங்காளி நாடுகளுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த தொற்று நோயின் பொருளாதார விளைவுகளுக்கு முகங்கொடுப்பதற்கு முழு உலகமும் முயற்சித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், நாம் எமக்கிருக்கக் கூடிய தெரிவுகள் குறித்து ஆராயவிருக்கின்றோம். எமது நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான இந்தியாவிடமும் உதவி கோரவிருக்கின்றோம் என்று மாலைத்தீவு ஜனாதிபதியின் பேச்சாளர் இப்ராஹிம் ஹூட் 'த இந்து'வுக்குக் கூறினார்.
மாலைத்தீவு மிகவும் சிறியளவு கடன்களையே இந்தியாவிடமிருந்து பெற்றிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை கூடுதலானளவுக்கு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கும் நிதியுதவி செய்யவே விரும்புகிறது என்று அரசாங்க வட்டாரங்கள் கூறின.
ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கும் போது மாலைத்தீவு சீனாவிடம் சுமார் 180 கோடி டொலர்களை கடனாகப் பெற்றிருக்கிறது. இதில் அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கம் பெற்ற 60 கோடி டொலர்களும் அடங்கும். இதன் விளைவாக சீனாவுடனான கடன் விவகாரங்களில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த சோலீ அரசாங்கம் அதிலிருந்து தளர்வை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கப்படக் கூடும்.
சீன ஜனாதிபதியின் பேரார்வம் மிக்க ' மண்டலமும் பாதையும் செய்திட்டத்தின் விளைவாக சீனா நாடுகளை கடன் பொறிக்குள் தள்ளுகிறது' என்று சோலீ அரசாங்கம் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தது. மாலைத்தீவு சீனாவுக்கான அதன் கடன்களில் ஒரு பகுதியை மாத்திரம் மீளச் செலுத்துவதற்கு இப்போது பெய்ஜிங் இணங்கியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது இவ்வருடம் மீளச் செலுத்த வேண்டிய 10 கோடி டொலர்களை 7 கோடியே 50 இலட்சமாகக் குறைப்பதற்கு இந்த ஏற்பாடு உதவும். இந்த நிலைவரத்தை புதுடில்லி மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும்.
கஹாசினி ஹைதர் / மீரா ஸ்ரீனிவாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM