அதிர்ச்சிக்குள்ளாகி உள்ள தமிழ் மக்கள்

30 Jun, 2020 | 12:17 PM
image

தமிழ் மக்களை ஆச்சரியப்படுத்தும் அதிர்ச்சி கொள்ள வைப்பது மான செய்திகளே அண்மைக்காலமாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

இதனால் தமிழ் மக்கள் மிகுந்த குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர். அண்மையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் இல்லை என்றால் அவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டனர் என்று கூறியுள்ளார் .

இராணுவத் தளபதியின்  இந்தக்கூற்று பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பின்னரும் காணாமல்போன தமது உறவுகளை எண்ணி அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

 அவர்களுக்கு என்ன ஆனது என்ற உண்மை தெரிவிக்கப்பட வேண்டும் என்று கூறியே பாதிக்கப்பட்ட அவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக கண்ணீர் வடித்து வருகின்றனர். அத்துடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக அரசின் வேண்டுகோளுக்கு அமைய சரணடைந்தவர்கள் மட்டும் பெற்றோரால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்னவானது என்பது  தொடர்பாகவும் அவர்களின் பெற்றோர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர் .

இந்த நிலையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் கூற்று அவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதேவேளை முன்னாள் முதல்வரும் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி .வி .விக்னேஸ்வரன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்து இருக்கலாம் என்றால் இராணுவத்தில் சரணடைந்த தமிழ் மக்கள் எங்கே ? என இராணுவத் தளபதி கூறியாக வேண்டும். அவர்களும் இறந்துவிட்டனரா?  என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் .

அத்துடன் இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்றால் அந்தக் காரணிகள் குறித்து விசாரணை நடத்தி உண்மை நிலையை இராணுவத்தளபதி அறிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில் யாரால் கொல்லப்பட்டார்கள் என்ற முழு விவரங்களையும்  மக்கள் முன் வைக்க வேண்டும்.

இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் மக்கள் குறித்த ஆதாரங்கள் உள்ளன என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் அரச தரப்பும் இராணுவமும் கூறும் கருத்துக்களை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் நம்பவும் தயாராக இல்லை. இவ்விடயம் உணர்வு பூர்வமான விவகாரம் என்பதால் இது தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலையை கண்டறிந்து கூறுவது இன்றியமையாதது.

இன்றும் கூட காணாமல்போன தமது உறவுகள் மீண்டும் வருவார்கள் என்ற ஏக்கத்திலும் எதிர்பார்ப்பிலும் அவர்களின் உற்றார் உறவினர்கள்  வாழ்ந்து வருகின்றனர்.

 எனவே அரசாங்கம் இவ் விடயத்தை மிகுந்த மனிதாபிமான ரீதியில்  கையாள்வது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right