பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் புரிகங்கா ஆற்றில் 100 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 32 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது படகை செலுத்தியவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து என்று சந்தேகிப்பதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

டாக்காவின் ஷியாம்பஜார் பகுதியில் புரிகங்கா ஆற்றில் ஏறக்குறைய 100 பயணிகளுடன் காலை வேளையில் மூழ்கிய படகுக்குள் பல பயணிகள் சிக்கியுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

"இதுவரை முப்பத்திரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை மீட்புபு்பணியாளர்கள் தேடி வருகின்றனர் என பங்களாதேஷ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பலியானவர்களில் ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. பலியானவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

முன்ஷிகஞ்சில் இருந்து டாக்காவுக்கு ஆட்களை ஏற்றிகொண்டு சென்ற '' மோர்னிங் பேர்ட் '', படகு ஒன்று, மற்றொரு 'மோயூர் -2' படகுடன் மோதி கவிழ்ந்ததுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து, சுமார் 1,000 பயணிகளை ஏற்றிச் சென்ற மோயூர் -2 படகை செலுத்தியவர் மற்றும் பிற ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.