(எம்.எப்.எம்.பஸீர்)

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்ததானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்போது இலங்கை கிரிக்கெட்டின் தேர்வுக் குழு தலைவராக செயற்பட்ட அரவிந்த டி சில்வவைடம் நாளை பொலிசார் விசாரிக்கவுள்ளனர்.

நாளைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு, விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணை பிரிவின் முன்னிலையில் ஆஜராக அரவிந்த டி சில்வவௌக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக  குறித்த விசாரணைப் பிரிவின்  பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜகத் பொன்சேகா தெரிவித்தார்.

குறிப்பாக தொலைக்காட்சிகளுக்கு மஹிந்தானந்த அளுத்கமகே வழங்கிய பேட்டிகளில், இறுதிப் போட்டிக்கு விஷேடமாக தனது அனுமதியின்றி நான்கு வீரர்கள் இலங்கையிலிருந்து அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் நாளைய தினம் அரவிந்த டி சில்வாவிடம் விஷேடமாக விசாரணை செய்யப்படவுள்ளதாக விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணை பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் குறித்த போட்டித் தொடரில் பங்கேர்ற வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் தமது விசாரணைப் பிரிவு விசாரணைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான விசாரணை திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணை பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜகத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே  முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் விஷேட விசாரணைகள்  நடாத்தப்பட்டன. 

இதுவரை விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் 20 இற்கும் அதிகமான ஆவணங்களை பொறுப்பேற்று  கொழும்பில் உள்ள விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணைப் பிரிவின் தலைமையகத்துக்கு எடுத்துவந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே, குறித்த 2011 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்ற வீரர்கள், அதிகாரிகளின் வாக்கு மூலங்களைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க விளையாட்டுகளுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் சட்டத்தின் கீழ்  குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் இடம்பெற்றுள்ளனவா என முதல்கட்டமாக ஆராயப்பட்டு வருவதாக விசாரணைத் தகவல்கள் தெரிவித்தன.