(செ.தேன்மொழி)

மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?  என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க , அரசாங்கம் ஒப்பந்தத்தை காண்பித்து தேர்தல் சூதாட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவிலாயர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தல் பிரசார காலங்களிலே தங்களது ஆட்சியில் எம்.சி.சி ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக தெரிவித்தவர்கள். ஆட்சிக்கு வந்ததும் ஒப்பந்தத்தை ஆராய்ந்து பார்ப்பதற்காக குழுவொன்றை நியமித்திருந்தனர்.

அந்த குழுவின்ற அறிக்கை கிடைக்கப் பட்டுள்ளதாக அறிவித்த இவர்கள். கடந்த அரசாங்கம் ஒப்பந்தத்தை இரு கட்டங்களாக கைச்சாத்திட்டுள்ளதாகவும் , அதற்காக அமெரிக்க நிதி வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்க தூதரகம் தாங்கல் இவ்வாறு எந்தவொரு நிதியையும் ஒப்பந்தம் தொடர்பில் பெற்றுக் கொடுக்கவில்லை என்று அறிவித்துள்ளது. அப்படியொன்றால் பொதுத் தேர்தலை இலக்கு வைத்துதான் இவர்கள் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த முயற்சிக்கின்றார்களா?

எம்.சி.சி. ஒப்பந்தத்தில் நாட்டுக்கு சிக்கல்களை தோற்றுவிக்கம் ஏற்பாடுகள் இருப்பதாக  ஆளும் தரப்பினரே தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அரசாங்கம் ஒப்பந்தத்தை காண்பித்து தேர்தல் சூதாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றது. இந்த செயற்பாடுகளை உடனே தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தும் இத்தகைய ஒப்பந்தங்களை கைச்சாத்திட போகின்றார்களா? அல்லது  நிராகரிக்க போகின்றார்களா?  என்பதை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.