ஆபாச இணையத்தளங்களில் மூழ்கிக் கிடக்கும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நியூசிலாந்து அரசாங்கம் வித்தியாசமான விளம்பரத்தை ஒளிபரப்பியுள்ளது.

இணையதளங்களில் ஆபாசப் படங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

பெற்றோருக்குத் தெரியாமல் சிறுவர்கள் செய்யும் இந்தத் தவறால் நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

இதனையடுத்து சிறுவர்கள் ஆபாசப் படங்களைப் பார்க்கக்கூடாது என்பதற்காகவும், குழந்தைகள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்பதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் நூதன பிரசாரத்தை நியூசிலாந்து அரசு கையிலெடுத்துள்ளது.

இதற்காக ஒரு வீடியோவை அவ்வரசு வெளியிட்டுள்ளது.

சுமார் ஒரு நிமிடம் வரையிலான குறித்த  விளம்பரத்தில், ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகை திடீரென ஒரு வீட்டின் கதவைத் தட்டுகின்றனர்.

அந்த வீட்டிலிருந்து வெளியே வரும் ஒரு பெண் அவர்களின் ஆபாச கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

உடனே குறித்த ஆபாச நடிகர்கள், உங்கள் மகன் எங்களை இணையத்தளத்தில் பார்க்க ஆசைப்பட்டார். அதனால்தான் நாம் நேரில் வந்தோம் எனக் கூறுகின்றனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அவரது மகனை அழைக்கிறார்.

கையில் மடிக்கணனியுடன் வரும் அந்தச் சிறுவன், இணையத்தளத்தில் பார்த்த உருவம் நேரில் வந்ததைக் கண்டு பதறிப் போகிறான்.

இதனைத் தொடர்ந்து இணையத்தில் சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதைக் கவனித்துக்கொள்ள வேண்டுமெனத் தாயிடம் நடிகர் அறிவுறுத்துகிறார்.

ஆபாசப் படத்தைச் சிறுவர்கள் பார்ப்பதால் அவர்களின் எதிர்காலம் சிதைய வாய்ப்பிருப்பதாக நடிகை எச்சரிக்கிறார்.

உடனே அந்தப் பெண், அவரது மகனிடம் இணையத்தில் பார்ப்பதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என அறிவுரை கூறுகிறார். அத்துடன் அந்த வீடியோ முடிகிறது.