(நா.தனுஜா)

நாட்டில் அன்றாட வாழ்வியல் சார்ந்து காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்துவதைத் திசை திருப்புவதற்காகத் தற்போதைய அரசாங்கம்  உலகக்கிண்ண ஆட்டநிர்ணயம், கருணா அம்மானின் சர்ச்சைக்குரிய கருத்து, மிலேனியம் செலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை போன்ற பல்வேறு புதிய நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. 

மக்கள் இந்த திசை திருப்பல் செயற்பாடுகளில் ஏமாறாமல், இம்முறை தேர்தலில் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஆளுந்தரப்பின் கைகளில் மட்டுமீறிய அதிகாரங்களைக் கொடுத்துவிட்டால், பின்னர் அதனைத் திருத்திக்கொள்வதற்கு ஒரு வாய்ப்புக்கிட்டாமல் போகலாம் என்பதை மனதிலிருத்திச் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது, அண்மைக்காலமாக அரசாங்கம் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. நாட்டிலுள்ள உண்மையான பிரச்சினைகளைப் புறந்தள்ளி, அவற்றின் மீது மக்களின் கவனம் திரும்பாது இருப்பதற்காகவே அரசாங்கம் இத்தகைய புதிய நாடகங்களை நடத்துகின்றது. அத்தகைய முதல் நாடகமாக 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தொடரின் போது ஆட்ட நிர்ணயம் செய்யப்பட்டதாகக் கூறினார்கள். பின்னர் தாம் கிரிக்கெட் வீரர்கள் பற்றி இதில் குறிப்பிடவில்லை என்றார்கள். பின்னர் கருணா அம்மான் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே சிலகாலம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அதேபோன்று தற்போது மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தத்தைப் பேசுபொருளாக்கியிருக்கிறார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் இவ்வொப்பந்தம் தொடர்பில் விளக்கமற்ற பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட்டு, அதனை மிகவும் ஆபத்தான விடயம் போன்று சித்தரித்தார்கள். அதன் பின்னர் அதுபற்றி ஆராய்வதற்கு என்று ஒரு குழுவை நியமித்தார்கள். ஆரம்பத்திலிருந்தே அக்குழுவின் மீது எமக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆளுந்தரப்பின் தேவையின் நிமித்தமே அந்தக் குழு நியமிக்கப்பட்டது என்பது சிறுகுழந்தைக்குக் கூடத் தெரியும். தற்போது மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தத்தில் நாங்கள் ஏற்கனவே கைச்சாத்திட்டுவிட்டதாகக் கூறுகின்றனர். உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்புவதற்காக இத்தகைய பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாமென்று ஆளுந்தரப்பிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்ததாக தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை சீரமைப்பதற்கு பணத்தை அச்சடித்து வழங்குவோம் என்று அரசாங்கம் கூறுகின்றது. இதுபற்றி சாதாரண மக்களுக்குப் போதிய தெளிவு இருக்காது. ஆனால் அவ்வாறு செய்வதால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பது பொருளியலைக் கற்றவர்களுக்கு நன்கு புரியும். எமது அரசாங்கத்தில் நாம் அரச சேவையாளர்களின் ஊதியத்தை அதிகரித்த அதேவேளை, பொருட்களின் விலைகளையும் குறைத்தோம். அதுமாத்திரமன்றி வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்தோம். ஆனால் இந்த அரசாங்கமோ ஒரு முறையான பொருளாதாரத் திட்டமிடலின்றி செயற்படுகிறது. பொருளாதாரம் குறித்த அடிப்படை அறிவற்ற இவ்வரசினால் ஒருபோதும் அதனைச் சீரமைக்க முடியாது.

இப்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, அதனால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாவிட்டாலும் பசியினால் அவர்கள் மரணிக்கும் நிலையேற்படப் போகின்றது.