(செ.தேன்மொழி)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச சதித்திட்டம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.

அது எவ்வகையான சதித்திட்டம் என்பதை அவர் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க , பிரதமர் நாட்டுக்காக சிறப்பு அறிக்கையொன்றை வெளியிடுவதாக குறிப்பிட்டு தனது தேர்தல் பிரசாரத்தையே வெளியிட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை தேர்தல் சட்டவிதிகளை மீறி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருவதாகவும். இவர் தொடர்பில் கவனம் செலுத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோளும் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளயர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். நாட்டுக்காக அவர் வெளியிட்ட அறிக்கையினூடாக அவர் தேர்தல் பிரசாரத்தையே செய்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பாதுகாப்பதற்கே இந்த அறிக்கையின் ஊடாக அவர் மேலும் முயற்சி செய்துள்ளார்.

இதன்போது சர்வதேச மட்டத்திலான சதித் திட்டம் தொடர்பிலும் அவர் தெரிவித்திருந்தார். அது எவ்வகையான சதித்திட்டம் என்பதை மஹிந்த நாட்டுக்கும் , நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

பொதுத் தேர்தல் வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தி வருகின்றார்.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சட்டவிதிகளை அனைத்து கட்சிகளும் பின்பற்ற வேண்டும். இந்நிலையில் ஆளும் தரப்பினருக்கு ஒருவகையிலும் எதிர் தரப்பினருக்கு இன்னொருவகையிலும் சட்டம் செயற்பட்டால் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாகவும் தேர்தல் சட்டவிதிகள் வழமையை விடவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அனைவரும் வரையறுக்கப்பட்ட பிரசார நடவடிக்கைகளிலேயே ஈடுப்பட முடியும்.

இதனால் ஆளும் தரப்பு உறுப்பினர்களை விட எதிர்தரப்பு உறுப்பினர்களே பெரிதும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்தரப்பினருக்கு துணைபோவதாக தெரிவித்திருக்கின்றார். ஆணைக்குழுவின் செயற்பாட்டினால் எமக்கு எந்தவித வரபிரசாதங்களும் கிடைக்கவில்லை.

இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழு நடுநிலையிலான செயற்பாடுகளையே மேற்கொள்ள வேண்டும். வைரஸ் பரவலின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்திடம் முறையான கொள்கைத்திட்டம் எதுவும் இல்லை. நாளாந்தம் ஊதியம் பெற்று வாழ்பவர்களை போலவே அரசாங்கத்தின் செயற்பாடுகளும் காணப்படுகின்றது.