21 ஆம் நூற்றாண்டின் அதிசிறந்த கிரிக்கெட் வீரராக, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானும் உலகளாவிய ரீதியில் அதிக டெஸ்ட் விக்கட்களை கைப்பற்றியவருமான முத்தையா முரளிதரன் விஸ்டன் மாதாந்த சஞ்சிகையால் பெயரிடப்பட்டுள்ளார்.

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் தரவுப் பகுப்பாய்வு நிறுவனமான CricViz மற்றும் விஸ்டன் சஞ்சிகை ஆகியன இணைந்து இந்த நூற்றாண்டின் தலைசிறந்த 30 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

"2000 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை விளையாடிய போட்டிகளின் தரவுகளைக்கொண்டே, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது" என்கிறார் விஸ்டன் சஞ்சிகையின் முகாமையாளர் சாம் ஸ்டவ்."முரளியின் சிறப்புக்களை சொல்ல அவரின் தரவு இலக்கங்கள் மட்டுமே போதுமானது.

ஆனால் CricViz நிறுவனம் தன்னுடைய ஆழமான ஆய்வின் பின்னர் அதனை மேலும் நேர்த்தியாக்கியிருக்கிறது.

இது கடந்த 20 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் முரளியின் ஆதிக்கத்தை பறைசாற்றுகிறது" என்கிறார் விஸ்டன் சஞ்சிகை ஆசிரியர் ஜோ ஹார்மன்.

முரளி மற்றும் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மக்ராத் ஆகிய இருவருமே இந்த கணிப்பில் முன்னிலை வகித்திருந்தனர்.

ஆனால், ஒரு சுழற்பந்து வீச்சாளராக தொடர்ச்சியாக அதிகமாக பந்து வீசிய இலங்கையின் தலை சிறந்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியிருந்தார் என்று நாம் நம்புகிறோம்" என்கிறார் CricViz ஆய்வாளர் பிரெடி வைல்டே.