இந்த நாட்டில் வரலாற்றை திரித்துக் கூறுவதும் தமக்கு ஏற்ற வகையில் அதனை மாற்றி அமைப்பதும் புதிய விடயமல்ல.
அதுவும் விசேடமாக இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் தொடர்பிலும் இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் தொடர்பிலும் வரலாறு மறைக்கப்படுவதும் ஆதாரங்கள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இலங்கையின் பூர்வீக வரலாற்றை உற்று நோக்கினால் இரண்டாம் நூற்றாண்டின் காலப்பகுதியிலேயே தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்ந்துள்ளனர்.
நிலைமை இவ்வாறிருக்க வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீக பிரதேசம் இல்லை எனவும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே அவ்வாறான பிரகடனத்தை செய்தார் என்றும் எனவே இலங்கையில் தமிழர்களுக்கென்று இல்லாத பூர்வீக பிரதேசத்தை இருப்பதாககூறி இனவாதத்தையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கக் கூடாது என்றும் கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் கூறியுள்ளார் .
ஏற்கனவே தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணி தொடர்பில் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதனை நிரூபிப்பது போன்று எல்லாவல மேதானந்த தேரரின் கூற்று இங்கு அமைந்துள்ளது.
உண்மையில் இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்துவது மாத்திரமன்றி இனரீதியான பிளவுகளுக்கும் வன்முறைகளுக்கும் வழி வகுக்கின்றது.
இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒரு பிரதேசத்தில் எந்த இனத்தவர்கள் அதிகளவில் வாழ்கின்றார்களோ அங்கு அந்த இனமே பெரும்பான்மையினமாகக் கருதப்படும். தெற்கில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்கின்றமையினால் அம்மாகாணங்களை பெரும்பான்மையினத்தவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். அதேபோல தான் வடக்கு மற்றும் கிழக்கிலும்.
வடக்கில் தமிழ் மக்கள் வரலாற்று காலம் தொடக்கம் வாழ்ந்துள்ளமைக்கான ஆதாரங்கள் மத தலங்களின் ஊடாகவும், மத வழிப்பாடுகளுடனும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான தன்மையே கிழக்கிலும் காணப்படுகிறது. இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு அனைத்து இன மக்களின் உரிமை மற்றும் கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் பூர்வீகம் வடக்கு மற்றும் கிழக்கு என்பது அனைவரும் அறிந்த விடயமே . நாட்டை பிரித்தாள வேண்டும் என்ற எண்ணத்தினால் யுத்தம் தோற்றமடைந்தது. நாடுபிளவு படுவதற்கு எப்போதும் அனுமதி வழங்க முடியாது. இருப்பினும் அவரவர் உரிமைகள் முரண்படாத வகையில் வழங்கப்படுதல் அவசியமாகும்.
தொல்பொருள் தொடர்பில் செயலணி நியமிக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதை செயலணியின் உறுப்பினர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று உண்மை நிலையை எடுத்துக் கூறியுள்ளார் வாசுதேவநாணயக்கார.
இதனைக் கருத்தில் கொண்டு வடக்கு, கிழக்கில் தற்போது மக்கள் மத்தியில் தோன்றியுள்ள இன ரீதியான ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்டவர்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டியது அவசியம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM