தமிழரை நசுக்கப் பயன்படும் ஆயுதம்

28 Jun, 2020 | 10:38 PM
image

-என்.கண்ணன்

இலங்கை பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாடு என்ற  உண்மை, ஆட்சியாளர்களுக்கு பலவேளைகளில் மறந்து போய் விடுகிறது.

சிறுபான்மையினரின் உரிமைகளை நிராகரிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டும் எப்போதெல்லாம் வருகிறதோ,  அப்போதெல்லாம் அவர்களுக்கு, இலங்கை பல்லின சமூகங்கள் வாழுகின்ற ஒரு நாடு என்ற உண்மை நினைவுக்கு வந்து விடுகிறது.

குருநாகல் மாவட்டத்திலுள்ள தலவத்தேகெதரவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் கூட,  பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு,  இந்த உண்மை நினைவுக்கு வந்திருக்கிறது.

ஆனால், கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணி,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட போது,  அவருக்கு இந்த உண்மை நினைவுக்கு வந்திருக்கவில்லை.

இது ஒரு பல்லின சமூகங்கள் வாழும் நாடு என்பதை ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ புரிந்து கொண்டிருந்தால்  அவர்கள் தனியொரு இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியை அமைத்திருக்க மாட்டார்கள்.

கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணி அமைக்கப்பட்டதற்குப் பின்னர், அது முற்றிலும் பௌத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாக  இருப்பதாக சுட்டிக்காட்டிய போதும் கூட, அதனை நியாயப்படுத்துவதிலேயே,  அரசாங்கம் கவனம் செலுத்தியதே தவிர, அந்த தவறை திருத்த முற்படவில்லை.

ஆனால்,  இப்போது தேர்தல் வந்து விட்ட நிலையில்,  சிங்கள மக்கள் மத்தியில், சிறுபான்மையினருக்கு உள்ள உரிமையை நிராகரிக்கும் ஒரு வழிமுறையாக,  பல்லின சமூகங்கள் வாழும் நாடு என்ற  கோஷத்தை முன் நிறுத்த முற்பட்டிருக்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.

எந்த ஒரு மாகாணத்தையும்  எந்த ஒரு இனமும் உரிமை கொண்டாட முடியாது  எதுவும் எந்த இனத்துக்கும் உரியது அல்ல என்று அவர் உறுதிபடக் கூறியிருக்கிறார்.

அவர் அவ்வாறு கூறியது வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் அடிப்படையாகக் கொண்டு தான் என்று யாரும் கூறி தெரிய வேண்டியதில்லை.

ஏனென்றால், வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம் என்ற நிலைப்பாட்டை, நிராகரிப்பதற்கு  சிங்கள பௌத்த பேரினவாதம், முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இப்போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

வடக்குஇ கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல, அதுவும் சிங்கள பூமி தான் என்றுஇ அண்மையில், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கூறியிருந்தார்.

அதனை வேறொரு முறையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் கூறியிருக்கிறார்.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் தனித்துவமான பிரதேசமோ, தாயகமோ அல்ல என்பதே அது.

வடக்கில் பிறந்தவர் தெற்கில் வாழ்வதற்கும் தெற்கில் பிறந்தவர் வடக்கில் வாழ்வதற்கும் உரிமை உள்ளது என்று பிரதமர் மகிந்த கூற முனையும் நியாயம், எல்லா இனங்களுக்குமான சமத்துவம், சம உரிமை என்ற  அடிப்படையிலானது அல்ல.

அதுஇ வடக்கு, கிழக்கில் சிங்கள பௌத்த மயப்படுத்தலை நியாயப்படுத்திக் கொள்வதற்காக முன்வைக்கப்படும் வாதமாகவே கொள்ளப்படத்தக்கது.

எந்த ஒரு மாகாணத்துக்கும் எந்த ஒரு இனமும் உரிமை கொண்டாட முடியாது என்ற பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கருத்து சரியானதாக இருந்தால், அவரது அரசாங்கம்,  ஒவ்வொரு மாகாணத்திலும் எல்லா இனங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் கட்டமைப்புக்களை உருவாக்கி இருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறான எந்த ஒரு வேலைத்திட்டமும் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலத்திலும் சரிஇ இப்போதுள்ள ஆட்சியிலும் சரி முன்னெடுக்கப்படவில்லை.

இதற்கெல்லாம் நீண்டகால உதாரணங்களை தேட வேண்டிய தேவையும் கிடையாது. கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணி உருவாக்கப்பட்ட போது கூட,  அந்தப் பல்லின சமூக சூழல் பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை.

கிழக்கில் தமிழர்களும்,  முஸ்லிம்களும் தான்  பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தார்கள்.

இருபதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் தான் அங்கு சிங்களவர்கள் பெரிய அளவில் குடியேற்றப்பட்டு கிழக்கின்,  இனத்துவ பரம்பல் மாற்றியமைக்கப்பட்டது.

இப்போதும் கூட சிங்களவர்கள் அங்கு சனத்தொகை அடிப்படையில் மூன்றாம் நிலையில்தான் இருக்கிறார்கள்.

ஆனால் பண்டைய காலத்தில் கிழக்கில் சிங்கள பௌத்தம் தழைத்தோங்கி இருந்தது என்பதை காட்டும் வகையில், அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் சிங்கள மயப்படுத்துவதை விட,    தொல்பொருள் சின்னங்களை வைத்து  கிழக்கின் வரலாற்றை மாற்றியமைக்கவே அரசாங்கம் முற்படுகிறது.

இதன் மூலம் கிழக்கு மாகாணம் சிங்கள பௌத்தர்களின்  பாரம்பரிய வாழ்விடமாக  தற்போதைய அரசாங்கம்  அடையாளப்படுத்த முற்படுகிறது.

கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணி உருவாக்கத்தில்,  கிழக்கை பாரம்பரிய தாயகமாகக் கொண்ட தமிழ் பேசும் மக்கள் முற்றுமுழுதாக  ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.

எந்தவொரு மாகாணத்தையும்  எந்த ஒரு இனமும் உரிமை கோர முடியாது என்றால்,  இலங்கை ஒரு பல்லின சமூகங்கள் வாழும் நாடு என்றால்,  பல்லின சமூகங்கள் வாழும் ஒரு மாகாணத்தில் ஒற்றை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு செயலணியை உருவாக்குவது எந்த வகையில் நியாயமானது.?

இந்த நியாயத்தை மகிந்த ராஜபக்சவோ,  கோத்தாபய ராஜபக்சவோ,  புரிந்து கொள்ளாதவர்களோ, தெரிந்து கொள்ளாதவர்களோ அல்ல.

அவர்கள் தமக்கென ஒரு நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறார்கள். சிங்கள பௌத்த தேசியவாதத்தை,  நிலைப்படுத்தும்,  சிறுபான்மை சமூகங்களை அடிமைப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப,  அவர்கள் பல்லின சமூக சூழல்,  பன்மைத்துவ அரசியல்,  சம உரிமை, சமத்துவம் பற்றிப் பேசுவார்கள்.

தமிழர்கள் தமக்கான தாயகப் பிரதேசத்தில் அதிகாரத்தை கோரும்போது, அதனை நிராகரிப்பதற்கு அவர்களுக்கு இந்த பல்லின சமூக சூழல் தேவைப்படுகிறது.

இதே பன்மைத்துவ சூழலை சிறுபான்மையின மக்கள் தெற்கிலுள்ள சிங்கள பெரும்பான்மையினர் வாழும் மாகாணங்களில் எதிர்பார்க்க முடியாது.

இதுதான் இலங்கையின் சம உரிமை, சமத்துவ அரசியல்.  

சிங்கள - பௌத்த பேரினவாதம், தனக்கேற்ற வகையில், இவையெல்லாவற்றையும் வரையறுத்துக் கொள்கிறது.

எங்கெல்லாம், சிறுபான்மையினரையும் அவர்களின் உரிமைகளையும் நசுக்க வேண்டும் என்று, சிங்களப் பேரினவாதம் விரும்புகிறதோ, அங்கெல்லாம், இந்த ஆயுதங்களை அது கையில் எடுத்துக் கொள்கிறது.

பல்லின சமூக சூழல்,  பன்மைத்துவ அரசியல்,  சம உரிமை, சமத்துவம் போன்றவையெல்லாம், இலங்கை போன்றதொரு நாட்டில், பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனங்களின் மீது அதிகாரத்தைச் செலுத்துவதற்கான உத்திகளாக பாவிக்கப்படுகின்றனவே தவிர, அரசியல் உரிமைகளை உறுதி செய்வதற்கான கொள்கைகளாக இல்லை.

இவ்வாறான ஒரு சூழலில், சிறுபான்மையினங்களின் பாதுகாப்பும் அவற்றின் பாரம்பரிய வாழ்விடத்தின் பாதுகாப்பும் கேள்விக்குரியதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right