-ஹரிகரன்
அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சந்தித்து பேசிக் கொண்டிருந்த அதேவேளை, நியூயோர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் ஒரு நடவடிக்கையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்திருந்தது.
ஐ.நா பாதுகாப்பு சபையின், தற்காலிக உறுப்பு நாடுகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியாவுக்கும் கென்யாவுக்கும் ஆதரவாக, வாக்களித்த இலங்கை, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க குழுவில் போட்டியிட்ட கனடா, நோர்வே, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு வாக்களிக்கவில்லை.
ஐ.நா பொதுச் சபையில் நடந்த இந்த வாக்கெடுப்பில், இலங்கை மட்டுமே வாக்களிக்கவில்லை என்றும் இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்றும் செய்திகள் கூறுகின்றன.
அதாவதுஇ சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக, முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு, ஆற்றப்பட்ட ஒரு எதிர்வினையாகவே, இது கருதப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இதனை ஆங்கில இதழ் ஒன்றுக்கு கூறியிருக்கிறார்கள்.
நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ, அதுபோலவே நாங்களும் நடந்து கொள்வோம் என்று காட்டும் வகையில், இலங்கையின் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.
சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று போகும் என்று கனவு கண்டது போலத் தான், இலங்கையும் ஐ.நா பொதுச்சபை வாக்கெடுப்பில் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வாக்கெடுப்பை இலங்கை புறக்கணித்ததால், மூன்று நாடுகளுக்குமே எந்த பாதிப்பும் வரவில்லை.
நோர்வேயும் அயர்லாந்தும் பாதுகாப்புச் சபைக்கு தெரிவு செய்யப்பட, கனடா தோல்வியைத் தழுவியது.
ஆனால், இந்த வாக்கெடுப்பை ஒரு பதிலடி நடவடிக்கையாக காண்பிக்க இலங்கை அரசாங்கம் முற்பட்டிருக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றுவதில் கனடா, அயர்லாந்து, நோர்வே போன்ற நாடுகள் முக்கிய பங்காற்றியிருந்தன.
ஜெனிவாவில் இலங்கைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று தற்போதைய அரசாங்கம் அறிவித்திருந்தாலும் அதற்காக வழங்கப்பட்ட காலஅவகாசம் அடுத்த ஆண்டுடன் நிறைவடையவுள்ளது.
இதற்குப் பின்னர், ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் தான் தீர்மானிக்கப் போகின்றன.
இவ்வாறான நிலையிலேயே, ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு இந்த நாடுகளைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை புறக்கணித்திருக்கிறது இலங்கை.
இது மேற்குலக நாடுகளுடன் முண்படும் போக்கை இலங்கை கடைப்பிடிக்கப் போகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
அதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை அழைத்து நடத்திய கலந்துரையாடலும் கவனிக்கத்தக்க ஒன்றாகவே இருக்கிறது.
இந்தக் கலந்துரையாடலில் அவர் மேற்குலக நாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் பொருளாதார நிலை தொடர்பாக விளக்கமளித்திருப்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியையும் கோரியிருக்கிறார்.
கொரோனா தொற்றையும் அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியையும் காரணம் காட்டி அரசாங்கம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மட்டுப்படுத்தி வருகிறது.
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலவற்றுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு நாணய மாற்று கையிருப்பு நெருக்கடியால் தான் அரசாங்கம் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த முடிவு செய்திருக்கிறதே தவிர, உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கவோஇ சுயசார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவோ அல்ல.
உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, இறக்குமதி கட்டுப்பாடு, சுயசார்பு பொருளாதாரம் போன்றன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் கால வாக்குறுதிகளாக இருந்தாலும் அதற்காக இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இப்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எல்லாமே பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்காக, அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற தற்காலிக நடவடிக்கைகள் தான்.
ஆனால், அரசாங்கத்தின் இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள், மேற்குலக நாடுகளை அதிருப்தி கொள்ள வைத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
அதனால் தான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களை சந்தித்து, தற்போதைய பொருளாதார சூழ்நிலைகள் குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு, மூடிய பொருளாதாரத்தை நோக்கி இலங்கை நகருகிறது என்று தவறாக எண்ணிவிட வேண்டாம் என்று மேற்குலக நாடுகளின் தூதுவர்களிடம் கூறியிருக்கிறார் ஜனாதிபதி.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கோபத்துக்கு உள்ளாகி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையே இதற்குக் காரணம்.
இல்லையாயின், மூடிய பொருளாதாரத்தை நோக்கி இலங்கை செல்லவில்லை என்று ஜனாதிபதி வாக்குறுதி அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
இலங்கை மூடிய பொருளாதாரத்தை நோக்கி நகர முடிவு செய்தால் கூடஇ அதனை ஏன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் நியாயப்படுத்த வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது.
இலங்கை பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடுகளையும் இருதரப்பு வர்த்தக உடன்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறது.
இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று பல்வேறு நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள இரு தரப்பு பொருளாதார, வர்த்தக உடன்பாடுகளின் மூலம் இலங்கை ஏற்றுமதிக்கு மாத்திரமன்றி, இறக்குமதிகளுக்கும் கூட உத்தரவாதம் அளித்திருக்கிறது.
திடீரென இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிகளை கட்டுப்படுத்தும்முடிவை எடுத்தால், அந்த நாடுகளும், பதில் நடவடிக்கையில் இறங்க முற்படும்.
ஏற்றுமதிக்கான சலுகைகளை நிறுத்தும் அல்லது ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் முடிவுகளை குறித்த நாடுகளும் எடுக்கக் கூடும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அது இலங்கையின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கும்.
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் கணிசமான தொகை ஐரோப்பிய நாடுகளிடமிருந்து கிடைத்து வருகிறது.
எனவே தான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தமது நிலையை விளக்க முயன்றிருக்கிறார் ஜனாதிபதி.
அதுமாத்திரமன்றி, இலங்கையின் சுயசார்பு பொருளாதார உற்பத்தியை, மேம்படுத்துவதற்கான நவீன தொழில்நுட்ப உத்திகளையும் கருவிகளையும் வழங்கி உதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட்டு விலகிச் செல்லாதிருக்க முனைவதாக அவர் காட்டிக் கொள்ள முனைந்துள்ளார்.
ஆனால், பொருளாதார ரீதியான உறவுகளை விட இலங்கைக்கு இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியான உறவுகளே முக்கியமானது. இராஜதந்திர, மற்றும் அரசியல் ரீதியாக எடுக்கப்படும் முடிவுகள், பொருளாதார உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உதாரணத்துக்கு, அரசியல், மற்றும் இராஜதந்திர உறவுகளின் தாக்கத்தினால் தான், இலங்கை முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இழக்க நேரிட்டது. பின்னர் மீளப் பெறவும் அதுவே காரணமாகியது.
ஒரு பக்கத்தில் ஐ.நா பொதுச்சபையில் மேற்குலகத்தைப் பகைத்துக் கொள்ளும் அணுகுமுறையைக் கையாண்டு கொண்டு, இன்னொரு பக்கம் பொருளாதார நெருக்கத்துக்கான வாய்ப்பை அரசாங்கம் தேட முனைந்திருக்கிறது.
ஐ.நா பொதுச்சபை வாக்கெடுப்பை இலங்கை புறக்கணித்த விவகாரத்தை மேற்குலக நாடுகள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை.
ஆனால், அவ்வாறு நடந்து கொண்டதை, அந்த நாடுகளுக்கு விடப்பட்ட ஒரு சவாலாக இலங்கை காண்பிக்க முனைந்திருப்பது தான் சிக்கலானது.
இதன் விளைவுகளை இலங்கை ஜெனிவாவில் எதிர்கொள்ளும் என்றே தெரிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM