-சுபத்ரா
கிரிக்கெட்டில் மட்டையை தூக்கி அடிக்கத் தூண்டுவது தான் சிறந்த பந்துவீச்சாளரின் வேலை. அதனை சரியாகச் செய்பவருக்கு இலகுவாக விக்கட் கிடைத்து விடும்.
காரைதீவு பிரதேச சபை தலைவர் அவ்வாறு தான் பந்தை வீசினாரோ அல்லது எதேச்சையாக அவர் வீசிய பந்தை அடித்து ஆடப் போய் கருணா மாட்டிக் கொண்டாரோ தெரியவில்லை.
தற்காப்பு நிலையில் ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்த கருணா, அவரே எதிர்பாராத வகையில், ஒரு தாக்குதல் ஆட்டத்தை ஆடப் போய் இப்போது சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டுப் பந்தை, நாதன்வெளியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில்இ கருணா மிக அலட்சியமாக அடித்து ஆடினார்.
அவருக்குள் ஒளிந்திருந்த “புலி” வெளியே வந்தது. அது அவரது விக்கெட்டை பறிகொடுக்கும் நிலை வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது.
புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதியாக வலம் வந்த கருணா, புலிகளின் தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் பிரிந்து சென்று அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இதற்கு முன்னர் பல பிளவுகள் நடந்திருந்தாலும் இதுவே மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.
கருணாவிடம் இருந்து கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டே, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் துணிச்சலாக படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஏனென்றால்இ மூன்றாம் கட்ட ஈழப்போரின் உத்திகளையும் இரகசியங்களையும் முற்றாக அறிந்திருந்தவர் கருணா.
மூன்றாவது கட்ட ஈழப்போரில், புலிகள் வெற்றிகளை ஈட்டுவதற்கு அவர்களிடம் இருந்த ஆளணி காரணம் அல்ல.
குறைந்த ஆளணியை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொண்டது, வெடிபொருட்களை ஒழுங்கமைத்து பயன்படுத்தியது, அவை தவிர தந்திரோபாயங்கள், அரசபடைகளை ஏமாற்றுவதற்கு கையாண்ட உத்திகள் என்பனவே அவர்கள் மேலாதிக்கம் பெறுவதற்குக் காரணமாகின.
அந்த இரகசியங்களை கருணா அறிந்திருந்ததால்இ புலிகளின் பலவீனங்களை வைத்து படைகளை நகர்த்தும் திட்டம் தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது.
ஆனால், கருணா தாம் ஒருபோதும் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கவில்லை என்றே பேட்டிகளில் கூறி வந்திருக்கிறார். அதனை நம்புகின்ற நிலையில் யாரும் இல்லை என்பதே உண்மை.
ஆனாலும், கருணாவை ஒரு பலமான கருவியாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.
கருணாவை வைத்து போரை வென்றதாக பெருமைப்பட்டுக் கொள்வதற்கும் அவர் தயாராக இல்லை.
பிரபாகரனின் இருப்பிடத்தைக் கூட சரியாகக் கூறத் தெரியாதவராக இருந்தார் கருணா என முன்னர் சில செவ்விகளில் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அண்மையில் முன்னாள் கடற்படை அதிகாரி றியர் அட்மிரல் சரத் வீரசேகர, போரை வெற்றி கொள்வதற்கு கருணா பெரியளவில் உதவினார் என்றும் புலிகள் தொடர்பான, பிரபாகரன் தொடர்பான பல இரகசிய தகவல்களை வழங்கினார் என்றும் கூறியிருக்கிறார்.
அதுபோலஇ அமைச்சர்கள் பலரும் அவ்வாறே கூறி அவருக்காக வாதாடுகிறார்கள்.
இவ்வாறான நிலையில் மகிந்த ராஜபக்சவினால் மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட கருணா, அண்மைக்காலமாக தனது புலிக் கால சாதனைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்.
புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிச் சென்ற பின்னர், அவர் புலிகள் என்ற பெயரைப் பயன்படுத்தி கிழக்கில் அதிகாரம் செலுத்தவும் அரசியல் நடத்தவும் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
இந்தநிலையில் அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கரைந்து, தேசிய ஐக்கியம் பேசுகின்றவராக மாறினார். ஆனாலும் அவரால் கிழக்கில் பெரிய செல்வாக்கைப் பெற முடியவில்லை.
புலிகள் இயக்கத்தில் இருந்தபோது கருணா அம்மானாக மதிக்கப்பட்டவர், பிறகு வெறும் கருணாவாக மாறினார். அவரிடத்தில் இருந்த “அம்மான்” என்ற மதிப்புக்குரிய அடையாளம் பெரும்பாலும் இல்லாமல் போனது.
இப்போது அவருக்குப் பழைய புலி அடையாளம் தேவைப்படுகிறது. சில காலத்துக்கு முன்னர் அவர், புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னை ஒருபோதும் துரோகி என்று கூறியதில்லை என்று கூறினார்.
புலிகள் இயக்கத்தில் இருந்த போது நடந்த சில சம்பவங்களை நினைவுபடுத்தி தனது அடையாளத்தை நினைவுபடுத்திப் பார்த்தார்.
அதுவும் சரியாக வெற்றியளிக்காத நிலையில் தான், கடைசியாக அவர், தனது இராணுவ சாதனைகளைப் பற்றி பீற்றிக் கொள்ள முயன்றிருக்கிறார்.
இது தான் அவர் செய்திருக்கின்ற முக்கியமான தவறு.
கொரோனாவை விட கருணா கொடியவர் என்று கூறிய கூற்றுக்கு பதிலளிக்க முற்பட்டு, கொரோனா 9 பேரைத் தான் கொன்றிருக்கிறது. நாங்கள் ஒரே இரவில் 2000 - 3000 இராணுவத்தினரைக் கொன்றவர்கள் என்று அவர் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசினார்.
இந்த இடத்தில் அவரே தெரியாமல் படுகுழியில் விழுந்திருக்கிறார்.
அவரது இந்தக் கூற்றுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. சிங்கள பௌத்த அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
பொதுஜன பெரமுனவினர். கருணாவை தமது கட்சியில் இல்லை என்று கூறி சமாளிக்க முனைகிறார்கள்.
பிரதமர் மகிந்த ராஜக்சவோ, கருணா பற்றிய இரகசியம் முன்னரே தெரிந்தது தான் என்று அலட்சியமாக கூறியிருக்கிறார்.
கருணாவுக்கும் ராஜபக்சவினருக்கும் நல்ல நெருக்கம் உள்ளது. அந்த நெருக்கம் இருவரும் ஒருவரது பலவீனங்கள் இரகசியங்களை அறிந்து வைத்திருப்பதால் ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம்.
ராஜபக்சவினர் தம்மை நம்புகிறார்கள் என்று கருணா கூறியிருக்கிறார். அது உண்மையும் கூட, அதனால் தான், அவர்கள் கருணாவுக்கு எதிராக பெரிய நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.
இந்தக் கவசத்தை நம்பித் தான் கருணா தன்னைப் பற்றி புலிப்பெருமை பேச முயன்றார்.
இதன் மூலம் மீண்டும் புலிமுகத்துடன் வலம் வந்து அரசியலில் வெற்றி பெறலாம் என்று கருதினார். இந்தக் கட்டத்தில் தான் அவர்இ சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை சரியாக கணிக்கவில்லை.
ராஜபக்ச சகோதரர்களுக்கு புலி அடையாளம் என்பது பெரியதொரு விடயமாக இல்லாமல் இருக்கலாம்.
முன்னாள் போராளிகள் பலர் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் அரசியல் கட்சிகளை நடத்த முயன்றதைக் கூட தற்போதைய அரசாங்கம் தடுக்கவில்லை.
ஆனால், சிங்கள பௌத்த பேரினவாதம் அவ்வாறானதல்ல. அது புலியெதிர்ப்பை அதன் பிரதான கொள்கையாக வைத்திருக்கிறது.
புலி பற்றி யார் பேசினாலும் சிங்கள பேரினவாதம் அவர்களை விழுங்கவே முற்படும். புலி அடையாளங்களை சிறிதும் இல்லாமல் அழிப்பது தான் அவர்களின் இலக்கு.
ராஜபக்சவினரின் கவசத்துக்குள் இருந்தாலும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கரங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் ஆபத்து கருணாவுக்கு இருந்து கொண்டேயிருக்கும். கருணா இப்போது, பொல்லைக் கொடுத்து அடி வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
அவர்இ புலி அடையாள அரசியலை முன்னெடுக்க ஆசைப்பட்டுஇ சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் புலி முத்திரை குத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆனையிறவு வெற்றிப் பீற்றுகை கருணாவைச் சும்மா விட்டு விடாது.
ஏனென்றால், அங்கு கொல்லப்பட்டவர்களில் ராஜபக்சவினர் யாரேனும் இருலாம். ஆனால், சாதாரண குடும்பங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான படையினர் ஆனையிறவு மண்ணில் உயிரிழந்தனர்.
அவர்களின் மரணத்தை அரசியலுக்காக இழுக்கப் போய் கருணா சிங்கள மக்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். இந்த எதிர்ப்பு அவர் தேர்தலில் வெற்றியைப் பெற்றாலும் அரசாங்கத்தின் பங்காளியாவதற்கு தடையாக மாறக் கூடும். ஏனென்றால் சிங்கள பௌத்தர்களின் எதிர்ப்பை மீறி ராஜபக்சவினர் எதையும் செய்யப் போவதில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM