(எம்.ஆர்.எம்.வஸீம்)

கோவிட் 19 வைரஸ் காரணமாக மத்திய கிழக்கில் தொழில் புரியும் இலங்கையர்களில் 20ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொழில் இல்லாமலாகியும் வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தும் வருகின்றனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவிக்கையில்,

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய கிழக்கில் தொழில் புரிந்துவரும் இலங்கையர்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொழில் இழப்பு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். தற்போது சில தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் சம்பளம் கிடைக்காத பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் அதிகமானவர்களுக்கு அவர்கள் தொழில் புரியும் மேலதிக நேர வேலை இல்லாமலாகி இருப்பதாகவும்  சிலர் அரைவாசி சம்பளம் அல்லது சம்பளத்தில் குறைப்பு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் பரவிவருவதன் காரணமாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்கு எதிர்பார்த்திருந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு அந்த தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் அந்த தொழில் வாய்ப்புக்களை மீள பெற்றுக்கொள்வது தொடர்பாக பணியகம் தலையிட்டு வருகின்றது. அத்துடன் தொழில் இல்லாமல் போனவர்கள் மற்றும் சம்பளம் கிடைக்காத நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பவர்கள் தொடர்பாக தூதரக காரியாலயங்கள் ஊடாக தேடிப்பாக்கப்படுகின்றதுடன் அவர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அவ்வாறு ஏதேனும் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் குறித்த நாடுகளில் இருக்கும் இலங்கை தூதரகத்துக்கு முறையிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அங்கிருக்கும் அதிகாரிகள் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

அதேபோன்று வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களில் இருந்து விடுமுறைக்காக தாய் நாட்டுக்கு வந்தவர்கள், திரும்பவும் அவர்கள் தொழில்செய்த இடங்களுக்கு செல்வதற்கு தேவையாக இருந்தால், அதுதொடர்பாக பணியகத்துக்கு அறிவித்தால் தேவையான நடவடிக்கைகளை பணியகம் மேற்கொள்ளும் என்றார்