கட்சிகளின் மிகையான கணிப்புகள்

28 Jun, 2020 | 07:53 PM
image

-சத்ரியன்

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கு, பலம் வாய்ந்த நாடாளுமன்றம் அமைய வேண்டும் என்றும், தமது தரப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை தர வேண்டும் என்றும், பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறது சிறிலங்கா பொதுஜன பெரமுன.

பிரதமர் மகிந்த ராஜபக்சவும், அமைச்சர்களும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இலக்கு வைத்து, தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கின்ற போதும், அவ்வாறான ஆதரவு அவர்களுக்கு கிடைக்குமா என்பது, அவர்கள் தரப்பில் உள்ளவர்களுக்கே சந்தேகமாகவே உள்ளது.

பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரையில், இம்முறை பொதுத்தேர்தல் மிகவும் சாதகமான ஒன்றாக இருந்தாலும், அது எந்த அளவுக்கு தனக்கு கைகொடுக்கும் என்பதில் நியாயமான சந்தேகங்கள் பல இருக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் பிரதான எதிர்க்கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சி இப்போது சிதைந்து சின்னாபின்னமாகி கிடக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஒரு அணியும், சஜித் பிரேமதாச தலைமையில் இன்னொரு அணியுமாக, இரண்டுபட்டு கிடக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி. இவ்வாறான நிலை அரசாங்கத்துக்கு சவாலான ஒன்றாக இருக்காது என்பதே பொதுவான கணிப்பாக இருக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில், சஜித் பிரேமதாச உருவாக்கியுள்ள கூட்டணி, பலம் வாய்ந்த ஒன்றாக எழுச்சி பெறவில்லை. 

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் முக்கியமானவர்கள் வெளியேறி விட்டதால், வேட்பாளராக நிறுத்துவதற்கு கூட பிரபலங்கள் இல்லாத சூழ்நிலையில் இருக்கிறது. இவ்வாறான நிலையில் இந்த இரண்டு அணிகளும் வரும் பொதுத்தேர்தலில் சவால்மிக்க வெற்றியை பெற்றுக் கொள்ளும் என்று சொல்வதற்கில்லை.

இந்த இரண்டு அணிகளும் சேர்ந்து ஆட்சியை அமைப்பது கூட சாத்தியப்படும் ஒன்றாகத் தெரியவில்லை. இலங்கை அரசியல் இத்தகையதொரு பலவீனமான நிலையில் எதிர்க்கட்சி, தேர்தலை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாக இருக்கும்.

1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வெறுமனே 08 ஆசனங்கள் தான் கிடைத்தன. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு அந்தக் கட்சி பலவீனப்பட்டு போயிருந்தது.

ஆனாலும், கட்சி ரீதியாகவோ வாக்குவங்கி அடிப்படையிலோ சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்பட்டிருக்கவில்லை. அப்போது ஐக்கிய தேசியக் கட்சி சுமார் 51 வீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், சுதந்திரக் கட்சிக்கு 30 வீத வாக்குகள் கிடைத்திருந்தன.

ஆனால், இப்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்டிருக்கின்ற நிலை அதைவிட மோசமானது. அதன் வாக்கு வங்கி இரண்டாக பிளவு பட்டுக் கிடக்கிறது. இந்தப் பிளவின் ஊடாகத் தான், ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சி வலுப்பெற கூடிய சூழ்நிலை தெரிகிறது.

இன்னும் 20 ஆண்டுகளுக்கு தமது ஆட்சியை அசைக்க முடியாது என்று மார்தட்டும் அளவுக்கு மகிந்த ராஜபக்ச இருந்து கொண்டிருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சிகள் குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தின் கீழ் கூட, ஒன்றுபடத் தயாராக இல்லை.

பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் ரீதியாக இதைவிட வாய்ப்பான ஒரு சூழல் இருக்கவே முடியாது. அதனால் தான், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும் என்று அந்தக் கட்சியின் ஒரு பகுதியினர் உறுதியாக நம்புகிறார்கள்.

அதேவேளை, பொதுஜன பெரமுனவுக்கு சாதகமற்ற சூழ்நிலைகளும் உள்ளன என்பதை மறந்து விடக் கூடாது. ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பட்ட காலத்தில், அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் மிகவும் மெச்சிக் கொள்ளத் தக்கவையாக இருக்கவில்லை. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தொடர்பாக மிகையான எதிர்பார்ப்பு தெற்கிலுள்ள மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.

அந்த விம்பத்தை உடைக்கும் வகையிலேயே, அவரது ஏழு மாதகால ஆட்சியும் அமைந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றும் அரசாங்கத்தை பெரிதும் பலவீனப்படுத்தி இருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் தொடக்கம் அரசாங்கத்தின் செல்வாக்கு வரைக்கும் - இந்த வைரஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார நெருக்கடியும், கொரோனா முடக்கமும், மக்களைப் பெரிதும் பாதிப்புக்குள் தள்ளியிருக்கின்ற நிலையும், சுகாதார வழிகாட்டு முறை போன்ற நெருக்கடிகளும், வாக்காளர்களை வாக்களிக்கும் மனோ நிலைக்கு கொண்டு வருமா என்ற கேள்வி பரவலாக இருக்கிறது.

இதனால் ஆளும்கட்சி பின்னடைவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக ஒரு கணிப்பு உள்ளது. ஆளும்கட்சியில் உள்ள கெஹலிய ரம்புக்வெல போன்றவர்கள், மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களுடன வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை. அதனை அவர்கள் வெளிப்படுத்தவும் தயங்கவில்லை.

அதேவேளை, விஜேதாச ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ் போன்ற சட்டமேதைகள், பொதுஜன பெரமுனவின் வெற்றியை பெரிதாக காண்பிக்க முனைகிறார்கள். இவர்கள் இருவருமே சட்ட நிபுணர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்த போதும், ஐதேக மூலமாகவும் சரி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூலமாகவும் தேசியப் பட்டியல் உறுப்பினராகவே நாடாளுமன்றத்துக்குச் சென்றவர்கள்.

இப்போதும் அதனையே தான் எதிர்பார்த்திருக்கிறார்கள். இவர்கள் ஒரு பக்கத்தில் ஐதேக மற்றும் எதிரணியின் வெற்றியைக் குறைத்துக் காட்டவும் முனைகிறார்கள். இவ்வாறு அவர்கள் கருத்துக்களை வெளியிடும் போது சில வேளைகளில் முன்னுக்குப் பின் முரணாகவும் கணிப்புகளை கூறுகிறார்கள். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஒருமுறை வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்வாக்கை இழந்து விட்டது , அவர்களால் 15 ஆசனங்களைக் கைப்பற்ற முடியாது என்று கூறினார்.

பின்னர் அவர், அடுத்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட ஐதேகவுக்கு கிடைக்காது, கூட்டமைப்பு தான் கைப்பற்றும் என்றும் கூறியிருக்கிறார். ஐதேகவை விட கூட்டமைப்புக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தால் தான், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும். பலவீனமடைந்து விட்டதாக பீரிஸ் கூறிய கூட்டமைப்புக்கு எப்படி அதிக ஆசனங்கள் கிடைக்கும்? இதுபோன்ற அடிப்படை விடயங்களைக் கூட கருத்தில் கொள்ளாமல் தான், பல்வேறு கட்சிகளின் கணிப்புகளும் இருக்கின்றன.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்கும் என்று நம்புகின்ற மொட்டு அணி கூட, தமக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்று துல்லியமான ஒரு கருத்தைக் கூறத் தயாராக இல்லை. பலம்வாய்ந்த இந்தக் கட்சியின் நிலையே இப்படியிருக்கும் போது, ஐக்கிய தேசியக் கட்சியோ, ஐக்கிய மக்கள் சக்தியோ தமக்குக் கிடைக்கக் கூடிய ஆசனங்கள் தொடர்பான மதிப்பீட்டை செய்யத் துணியாது.

ஆனாலும் ஒவ்வொரு கட்சிக்கும் வெற்றிக்கான இலக்கு என ஒன்று இருக்கும். அதுபோல, வெற்றிக்கான வாய்ப்பு என ஒன்று இருக்கும். இந்த இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது. வெற்றி இலக்கை விட, வெற்றிக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். பொதுவாக, வெற்றிக்கான எதிர்பார்ப்பை வெளியிடுகின்ற கட்சிகள், தமக்குள்ள வாய்ப்புக் குறித்து அதிகம் பேசுவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட, 20 ஆசனங்கள் தமக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். எந்த அடிப்படையில் அவர் அந்த இலக்கை முன்னிறுத்தியிருக்கிறார் என்று தெரியவில்லை.

கூட்டமைப்பின் செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை சரியாக கணிக்காமல் அவ்வாறு கூறினாரா அல்லது, குத்து மதிப்பாக கணக்குப் போட்டாரா?

எது எவ்வாறாயினும், ஆசனங்களுக்கான கணிப்பீடுகளைச் செய்கின்ற எல்லா அரசியல் கட்சிகளும், தமக்குள்ள வெற்றி வாய்ப்பை சரியாக கணிப்பிடுவதில்லை. மிகையான மதிப்பீட்டை செய்து விட்டு தலைகுனிந்து நிற்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41