இலங்கையில் சீனாவின் வெற்றியும் தோல்வியும்

28 Jun, 2020 | 05:14 PM
image

-கார்வண்ணன்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இலங்கையை வெற்றிபெற வைப்பதில் சீனாவின் பங்கு முக்கியமானது.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலகட்டத்தில், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன், ஒத்துழைப்பையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டது இந்தியா தான்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் வீடியோ கொன்பரன்ஸ் மாநாடு ஒன்றை நடத்தி, கொரோனாவை எதிர்கொள்வதற்கான நிதியம் ஒன்றையும் ஆரம்பித்திருந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,. ஆனால் நாளடைவில், கொரோனா தொற்று இந்தியாவை மோசமாக பாதிக்கத் தொடங்கியதை அடுத்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் மீது இருந்த கவனத்தை இந்தியா இழந்து விட்டது.

இந்தியா இதற்கான முன்முயற்சிகளில் இறங்கிய போது, சீனா நெருக்கடியில் இருந்தது. சீனாவில் அப்போது தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருந்தது. அதனைக் கட்டுப்படுத்துவதிலேயே சீனா கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில், சீனாவுக்கு 100 வீத வெற்றி கிடைத்திருக்காவிடினும், அதற்கு அண்மைய வெற்றி கிடைத்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி, தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான உத்திகளையும் சீனா வெற்றிகரமாக வகுத்துக் கொண்டிருப்பதால், இரண்டாவது அலை பற்றிய அச்சுறுத்தல்களை வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில், இலங்கை போன்ற தமது பங்காளிகளை, சீனா இப்போது வலுப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், சீனாவுக்கு சார்பானது- சாதகமானது என்பதை கூறித் தெரிய வேண்டியதில்லை.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்தே, நெருக்கடிகளைத் தான் எதிர்கொண்டிருக்கிறது. இலங்கையில் ஆட்சிக்கு வரும் தலைவர்கள், முதலில் இந்தியாவுக்கும், அடுத்ததாக சீனாவுக்கும் மேற்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவை உறவினராகவும், சீனாவை நண்பனாகவும் பார்க்கின்ற உறவுகளின் அடிப்படையில் தான், இந்தப் பயணங்கள் அமைவது வழக்கம்.

ஆனால் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தாபய ராஜபக்சவினால், இந்தியாவுக்கு மட்டுமே பயணத்தை மேற்கொள்ள முடிந்திருக்கிறது. சீனாவுக்கு அவர் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணம் ஆரம்பத்தில் வேறு சில காரணங்களால் தடைப்பட்டது.

அதற்குப் பின்னர், கொரோனா தொற்றால், இன்னமும் முடிவு செய்யப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனாலும், சீன அரசாங்கத்துடன், தற்போதைய அரசாங்கத்துக்கு மிக நெருங்கிய உறவு இருந்து வருகிறது.

இலங்கையை தனது கைக்குள் போட்டுக் கொள்வதில் சீனா அதிக ஆர்வம்காட்டி வருகிறது. இந்த ஆர்வம், இப்போது ஏற்பட்ட ஒன்று அல்ல. போர் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்தே, சீனா அற்கான நகர்வுகளை மேற்கொண்டு வந்தது.

ஆனால், கொரோனாவுக்குப் பிந்திய உலக ஒழுங்கு சீனாவுக்கு சார்பற்றதாக மாறிய பின்னர், இலங்கை விடயத்தில் சீனா இன்னும் கூடுதல் அக்கறை கொண்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில், சீனா அதிக ஈடுபாடு காட்டி வருகிறது.

இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர் ஒரு சீன சுற்றுலாப் பயணி தான். அதற்குப் பின்னர் அடையாளம் காணப்பட்ட 2000 தொற்றாளர்களில் ஒருவர் கூட சீனராகவோ, சீனாவில் இருந்து வந்தவராகவோ இருக்கவில்லை.

சீனாவில் தொற்று தீவிரமாகப் பரவியிருந்த போது, எந்த அச்சமும் இல்லாமல், இலங்கை அரசாங்கம், அங்கிருந்து மாணவர்களை அழைத்து வந்தது. அத்துடன், இலங்கையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்றுபவர்களையும், இங்கு வர அனுமதித்தது.

கொரோனா சீனர்கள் மத்தியில் பரவத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், இலங்கையில் சீனாவுக்கும் சீனர்களுக்கும் இருந்த எதிர்ப்பு இப்போது கிடையாது. ஏனென்றால், சீனர்களின் மூலமோ, சீனாவின் மூலமோ இலங்கைக்குள் தொற்று ஊடுருவவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

மாறாக, சீனா மீது குற்றம்சாட்டும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து, பெருமளவானோர் கொரோனா தொற்றுடன் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இலங்கையர்கள் அங்கிருந்து புறப்படும் போது, மேற்படி நாடுகளின் விமான நிலையங்களில் கடுமையான கண்காணிப்பு, மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், இவ்வாறான தொற்றுக்குள்ளானவர்கள் இலங்கைக்கு வந்து சேர்ந்திருக்க முடியாது.

சர்வதேச நியமங்களின் படி நோய்த் தொற்று உள்ள ஒருவரை, விமானப் பயணத்துக்கு, மற்றொரு நாட்டுக்கு செல்வதற்கு அனுமதிக்க முடியாது. இலங்கையும் இந்த நியமத்தை சரியாக கடைப்பிடித்தது என்றில்லை. ஏனென்றால் இலங்கைக்கு வந்து விட்டுத் திரும்பிய மதபோதகருக்கு சுவிசில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்களும் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

விமான நிலையத்திலோ அல்லது பயணத்துக்கு முன்னரோ பி.சி.ஆர் .சோதனை நடத்தப்பட்டால் தான் தொற்றில்லை என்று உறுதிப்படுத்த முடியும். அவ்வாறான சோதனை இன்னமும் எந்த விமான நிலையத்திலும் வரவில்லை. வந்திறங்குபவர்களுக்குத் தான் அவ்வாறான சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இப்போது விமான நிலைய புறப்படுகை பகுதியில் மேற்கொள்ளப்படுவது வெறும் காய்ச்சல் சோதனை மட்டும் தான். அல்லது இருமல், தும்மல், சளி போன்றவற்றுடன் வருபவர்கள் தடுக்கப்படுகிறார்கள்.

இத்தாலி, இந்தியா,டுபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த 700 பேருக்கு மேல் தொற்றுடன் வந்து சேர்ந்தார்கள். ஆனால், சீனாவில் இருந்து ஒருவர் கூட தொற்றுடன் வந்து சேரவில்லை. இது எப்படிச் சாத்தியமானது?

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்து வரும் நெருக்கம் தான், இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவி, இலங்கை அரசாங்கம் பலவீனமடைவதை சீனா விரும்பவில்லை.

எனவே, இலங்கையில் தொற்று பரவுவதை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கைகளை சீனா மேற்கொண்டிருக்கிறது. இது ஒரு இரகசியமான நம்பிக்கை உடன்பாடாக இருந்தால் கூட ஆச்சரியமில்லை. ஏனென்றால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அப்படிப்பட்டது. 

அதேவேளை, அண்மையில் கொழும்பில் உள்ள சீன பதில் தூதுவர் ஹூ வெய், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்த போது, வெளிப்படுத்திய கருத்துகள் சில ஊடகங்களில் பெரிதாக கவனத்தைப் பெறவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, இலங்கையும் சீனாவும் ஒரே உத்தியைக் கையாண்டன என்று சீன பதில் தூதுவர் கூறியிருந்தார். இரண்டு நாடுகளும் புலனாய்வுப் பிரிவுகளைக் கொண்டு தொற்றாளர்களை அடையாளம் காணும் வழிமுறையைக் கையாண்டு, இதனைக் கட்டுப்படுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் அமெரிக்கா போன்ற நவீன தொடர்பாடல் வசதிகளைக் கொண்ட நாடுகள் இவ்வாறான வழிமுறையைக் கையாளவில்லை. தொற்றாளர்களை அடையாளம் காணவும், தனிமைப்படுத்தவும், அவர்களின் அலைபேசிகளின் சமிக்ஞைகளையே புலனாய்வுப் பிரிவுகள், பயன்படுத்தியிருந்தன.

அலைபேசிக் கோபுரங்களின் ஊடாகவும், அழைப்புகளின் மூலமாகவும், யார் யாருடன் தொடர்பில் இருந்தனர் எங்கேயெல்லாம் சென்றனர் என்பன போன்ற விபரங்களை புலனாய்வுப் பிரிவினர் திரட்டினர்.

அதன் மூலம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலமே தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படுவோர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதன் மூலம் சமூகத் தொற்று இலங்கையில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இது இலங்கையில் கொரோனா தொற்று பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு உதவியுள்ளது. இதற்கான தொழில்நுட்பங்களையும் உத்திகளையும் சீனாவே வழங்கியிருக்கிறது. இல்லையேல், தொற்று இன்னமும் மோசமடைந்திருக்கும். இதன் மூலம் சீனாவுக்கு என்ன இலாபம் என்றால், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக இந்தப் பிரச்சினையை கையாண்டிருக்கிறது என்ற நற்பெயரை தேடிக் கொடுக்க முடிந்துள்ளது.

இது அரசாங்கத்தை பலப்படுத்தி, ஆட்சியை தொடர வைப்பதற்கு கை கொடுத்திருக்கிறது. இந்த ஆட்சி நீடிப்பது சீனாவுக்கே ஆதாயமானது. ஏனென்றால் தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் இல்லாவிட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகுடன் முரண்படும் போக்கைக் கொண்டது.

சீனாவின் நலன்களை நிறைவேற்றக் கூடிய இவ்வாறான ஒரு அரசாங்கம் இலங்கையில் இருப்பது தான் சீனாவுக்குப் பாதுகாப்பானது. அவ்வாறான அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்கு சீனா உதவியிருப்பது ஆச்சரியமில்லை. ஆனாலும், சீனாவும் சரி, இலங்கையும் சரி ஒரு விடயத்தில் மாத்திரம் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன.

கடற்படையினர் மத்தியில் பரவிய தொற்றை கட்டுப்படுத்துவதில் சந்தித்துள்ள தோல்வியே அது. சமூகத்தில் பரவிய தொற்றை நவீன தொழில்நுட்பம் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளைக் கொண்டு கண்டுபிடித்த அரசாங்கத்தினால், அதே உத்திகளைக் கொண்டு கடற்படைக்குள் இருந்த தொற்றை குறுகிய காலத்துக்குள் கண்டறிந்து கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று.

இது இரண்டு நாடுகளையும் பொறுத்தவரையில் ஒரு பெரும் தோல்வி தான். ஏன் இந்த நிலை வந்தது என்பதை இரண்டு நாடுகளும் கண்டறிய முனையாமல் இருக்காது. ஏனென்றால், இந்த பின்னடைவுக்கான காரணத்தைக் கண்டறிவது இரணடு நாடுகளுக்கும் முக்கியமானதாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13