-கபில்

வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய வாக்காளர்களின் பொது உத்தி எதுவாக இருக்கப் போகிறது? இது இன்றுள்ள முக்கியமான வினாவாக இருக்கிறது.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்னர், உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடைவுகள் குறித்த கேள்வி முதன்மை பெற்றுள்ள இன்றைய நிலையில், தமிழ்த் தேசிய வாக்காளர்களின் உண்மையான மனோநிலை என்ன என்பதை, இந்த தேர்தலில் தான் நாடி பிடித்து உணர முடியும்.

மாற்று அரசியல், மாற்றுத் தலைமை, மாற்று அணி என்பன போன்ற கோசங்களை முன்னிறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அவற்றுக்கான அங்கீகாரத்தை இந்த தேர்தல் தான் உறுதி செய்யப் போகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணிகளாக தம்மை அடையாளப்படுத்தி வரும், அந்த இடத்தை அடைவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைந்திருக்கின்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இம்முறை தமிழ்த் தேசிய வாக்காளர்களை குறிவைக்கும் ஏனைய அணிகளாக இருக்கின்றன.

இவை தவிர ஓரிரு சுயேட்சை குழுக்களும் கூட தமிழ்த் தேசிய வாக்காளர்களை இலக்கு வைத்திருக்கின்றன. இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசிய வாக்காளர்கள் யாரை தமது தலைமையாக – பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப் போகின்றனர் என்ற கேள்வி உள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினையை கையாளுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வி கண்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு, பரவலாக கூறப்பட்டு வந்தாலும், அந்த தவறைத் திருத்தியமைக்கக் கூடிய உபாயத்துடன் எந்த தரப்பும் இல்லை என்பது தான் உண்மை.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒட்டுமொத்தமாக நிராகரித்தல், கூட்டமைப்பையும், மாற்று அணிகள் என்று கூறிக்கொள்ளும் தரப்பினருக்கும் இடமளித்தல் என்ற இரண்டு தெரிவுகள் தான், தமிழ்த் தேசிய வாக்காளர்களுக்கு உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்தல் என்பது நடைமுறைச் சாத்தியமானது என்று, ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில், மாற்று அணியினரே இல்லை என்பது தான் உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னணியும், இதுவரை அதற்கு இருந்து வந்துள்ள ஆதரவும், பலமும், கூட்டமைப்புக்கு இருந்து வரும் கட்டமைக்கப்பட்ட ஒழுங்குகளும், அதன் பலமாக கொள்ளப்படுகிறது.

இதுவரை நடந்து முடிந்த தேர்தல்கள் பலவற்றில், மாற்று அணியினருக்காக பிரசாரங்களைச் செய்தவர்களும், பத்திகளை எழுதியவர்களும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் சலித்துப் போய் ஒரு வாக்கியத்தை கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

“கூட்டமைப்பு தும்புத்தடியை நிறுத்தினாலும், தமிழ்ச் சனம் அதற்குத் தான் வாக்களிக்கும். அப்படி பழக்கப்பட்டு விட்டது” என்பதே அந்த வாக்கியம். இதனை, யதார்த்தம் எனக் கொள்வதை விட, இயலாமையின் வெளிப்பாடு அல்லது தாம் விரும்பியவர்கள் வெற்றிபெற முடியாததை சலிப்புடன் வெளிப்படுத்தும் முறையாகவே பார்க்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நியாயமான முறையில் கொள்கை ரீதியாக தோற்கடிப்பதற்கு வேலை செய்யாமல், குறுக்கு வழியில் போலிப் பிரசார வழிமுறைகளை நம்பி களமிறங்குவதே, இத்தகைய தோல்விகளுக்கு காரணமாக இருந்து வந்துள்ளது.

இந்தமுறையும் அவ்வாறான முறையே அதிகளவில் பயன்படுத்திக் கொள்ளப்படுவதாக தெரிகிறது. இதனை விட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான தரப்பாக- தலைமையாக இருப்பதற்கான தகுதி தமக்கு இருக்கிறது என்பதை இந்த தரப்புகள் நிரூபித்திருக்க வேண்டும்.

இந்த இரண்டு விடயங்களையும் கோட்டை விட்டு விட்டு, எப்போதும், தும்புத்தடி கதையைக் கூறி, தமக்குத் தாமே ஆறுதல்பட்டுக் கொள்வது தான் மாற்று அணியினரின் நிலையாக இருந்து வந்திருக்கிறது. இவ்வாறான தரப்பினர் இந்தமுறையும் தும்புத்தடிக் கதையைக் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படாமல் இருப்பதை உறுதி செய்வார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கடந்த காலங்களை விட, இந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களும், பிரசாரங்களும் கூடுதலாக முன்வைக்கப்படுகின்றன என்பது உண்மை. இது, கூட்டமைப்பு என்ற ஆலமரத்தை சாய்த்து விடாவிடினும், அதனை ஒருமுறை அசைத்துப் பார்ப்பதற்கேனும், போதுமானது என்பதில் சந்தேகமில்லை.

எனினும் இந்தச் சந்தர்ப்பத்தை, கூட்டமைப்புக்கு மாற்றான தரப்புகள் எவ்வாறு கையாளப் போகின்றன என்ற கேள்வி இருக்கிறது. கடந்த காலங்களில் மாற்றுத் தலைமை என்ற கோசங்கள் முன்வைக்கப்பட்ட போது, ஐக்கியமே முக்கியம் என்றும், ஒற்றுமையே பலம் என்றும் கூறி கூட்டமைப்பு வாக்குகளைப் பெற்றது, தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமை முக்கியமானது, ஒன்றுபட்டு நிற்கும் போதே, எதையும் சாதிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அவ்வாறான வாதங்கள் முன்வைக்கப்பட்ட போது, மாற்று அணியினருக்கு அது பாதகமாக காணப்பட்டது. ஆனால் இப்போது, நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒன்றுபட்டு வாக்களித்து என்ன கிடைத்தது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

15 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த கூட்டமைப்பினால் எதனைச் சாதிக்க முடிந்தது என்று மாற்றுத் தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். இதனையே கூட்டமைப்பின் ஒற்றுமை, ஐக்கியம் என்பன போன்ற பிரசாரத்தை தோற்கடிப்பதற்கான வியூகமாகவும் அவர்கள் பார்க்கிறார்கள். இந்தக் கேள்வியை முன்னிறுத்திய பிரசாரம் வலுவானதாகவே இருக்கவும் கூடும்.

ஆனால், கூட்டமைப்பை எதிர்கொள்வதற்குப் போதுமான, பிரதான உத்தியாக இது இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அதனால் தான், கூட்டமைப்பை முற்றாக நிராகரித்து விட்டு தம்மை தெரிவு செய்யுங்கள் என்று கூறுகின்ற திராணியுடன் அவர்கள் செயற்படவில்லை.

கூட்டமைப்பையும் ஆதரித்து, மாற்று தரப்பினரையும் தெரிவு செய்யுங்கள் என்பதே புதிய உத்தியாக பலரால் பிரசாரப்படுத்தப்படுகிறது. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பது பழமொழி. ஆனால் தமிழ்த் தேசிய இனம் கடும் நெருக்கடிகளுக்குள் இருக்கும் போது எதிர்க்கடைகள் முளைப்பதால் என்ன பயன் கிட்டும்?

ஒரே அணியாக சென்ற கூட்டமைப்பு கடந்த காலங்களில் வழிதவறிய போது அதனை சரியாக கொண்டு வருவதற்கு, மாற்று தரப்பு ஒன்று இருக்கவில்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. வலுவான மாற்று அணி ஒன்று இருந்திருந்தால், கூட்டமைப்புக்கு கடிவாளம் போட்டிருக்க முடியும் என்றும் வாதங்கள் முன்னிறுத்தப்படுகின்றன.

இதனைத் தான், மாற்றுத் தரப்புகள் இம்முறை தமது பிரசார உத்தியாக மாற்ற முனைகின்றன. அதாவது கூட்டமைப்பின் வெற்றியை முற்றாக நிராகரிக்க முடியாத தரப்புகள், இவர்களையும் சேர்த்து அனுப்பினால் கூட்டமைப்பை வழிப்படுத்திக் கொண்டு செல்வார்கள், என்றொரு கருத்து உருவாக்கப்படுகிறது.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பொன்னம்பலம்- செல்வநாயகம் என தமிழர் தரப்பில் இரு கட்சி அரசியலே முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அந்த இரண்டு தரப்புகளும் சில வேளைகளில் அரசாங்கத்துடன் இணைந்தும் செயற்பட்டன. பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில், கூட்டணி அமைக்கப்பட்டது. அதற்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவும் கிடைத்தது.

ஆயுதப் பேராட்டத்தின் பிற்காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலை ஒருமைப்படுத்தி முற்கொண்டு, செல்வதற்காக கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதுவே இன்று வரை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டு வருகிறது. போட்டி அரசியலின் மூலமும் சரி, கூட்டு அரசியலின் மூலமும் சரி, தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகளால் இதுவரை முடியவில்லை. அதற்கு தமிழ்த் தேசிய அரசியல்தரப்புகளை மட்டும் குற்றம்சாட்டிக் கொள்வதில் பயனில்லை.

இவ்வாறான நிலையில் மீண்டும் ஜி.ஜி - செல்வா பாணியில் போட்டி அரசியலை தெரிவு செய்தால் என்ன என்ற கருத்து, இந்த தேர்தலில் வலியுறுத்தப்படுகிறது. இது தமிழ் மக்களுக்கு எத்தகைய பயனைக் கொடுக்கும் என்று கூற முடியாது. இவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருமித்து கொண்டு செல்வார்கள் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. தேர்தலுக்குப் பின்னர் ஒருமித்து செயற்படும் ஒரு பொது இணக்கத்துக்கு வந்தால் கூட, அது தமிழ்த் தேசிய அரசியலின் வெற்றியாக பார்க்கப்படும்.

மாறாக, கூட்டமைப்புக்கு மாற்றான அரசியலை முன்னெடுப்பதே மாற்றுத் தரப்பினரின் இலக்காக இருந்தால், அது வெற்றியளிக்காது. இந்த நிலையில், கலப்பு பிரதிநிதித்துவ கோரிக்கை என்பது கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு வேண்டுமானால் பயனுள்ள ஒன்றாக இருக்கலாமே தவிர, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிப்படுத்துவதற்கான ஒன்றாக இருக்க முடியாது.

ஏனென்றால், கூட்டமைப்புக்கு மாற்றான அணிகளை நிறுவியிருக்கின்ற எல்லோருமே அதிலிருந்து வெளியேறியவர்கள் தான். கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, ஐங்கரநேசன், அனந்தி சசிதரன் போன்ற அனைவரும்,  கூட்டமைப்பை விட்டு வெளியே வந்து நிற்பவர்கள்.

உள்ளே இருந்து, கூட்டமைப்பை வழிப்படுத்துவதற்கான வாய்ப்பை தவறி விட்டு விட்டுத் தான் இவர்கள், வெளியே வந்து அதற்கான களத்தை தேட முனைகிறார்கள். கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போக முடியுமா?

இவ்வாறான குழப்பமான தெரிவுகள் தமிழ்த் தேசிய வாக்காளர்கள் மத்தியில் உள்ள சூழலில் தான் அவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள்- யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்ற கேள்விகள் இப்போது முதன்மை பெற்றிருக்கின்றன.