(செ.தேன்மொழி

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மானின் கருத்து அவர் இன்னமும் பயங்கரவாத எண்ணத்துடனே இருக்கின்றார் என்பதை  உறுதிப்படுத்தியுள்ளது. அதனால் அவர் கட்டயம் கைது செய்யப்பட வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கருணா அம்மாள் குறிப்பிட்ட  கருத்தினை நியாயப்படுத்தும் ஆளும் தரப்பினர் தங்களுக்கு இருப்பது இராணுவத்தினர் மீதான அக்கறை அல்ல ராஜபக்ஷாக்களின் மீதான அக்கறையே என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதனால்  ராஜபக்ஷர்கள் இராணுவத்தினர் மீது கொண்ட பற்று சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.  

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் திகாமடுலை தேர்தல் மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மானின கருத்தை அரசாங்கத்தினர் நியாயப்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு சில ஊடகங்களும் துணை போகின்றன. 

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தராக செயற்பட்ட ஒருவரை காப்பாற்றும் நோக்கில் இவர்கள் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. கருணா அம்மான் என்பவர் கைது செய்யப்பட வேண்டியவரே என்றார். 

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கசிப்பு, கடத்தல்காரர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தேர்தல் பிரசார கூட்டமொன்றில் தெரிவித்திருந்தார். இதன் போது அவர் நாட்டிலுள்ள பல மதுபான நிலையங்களுக்கு உரிமையாளரான ஒருவரை தனது அருகில் வைத்துக் கொண்டே இவ்வாறான கருத்தை தெரிவித்தார். அரசாங்கம் அவர்களது பார்வையாளர்களை இலக்கு வைத்தே தங்களது அரசியல் நகர்வுகளை எடுத்து வருகின்றது.

பார்வையாளர்களை கவர்வதற்காக எவ்வாறான கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதில்  ஆளும் தரப்பினர் தெளிவாக இருக்கின்றனர். ஆனால் சஜித் பிரமதாஸ எப்போதும் சாதாரண மக்களின் நலன் தொடர்பில் அக்கறை செலுத்துபவர். தங்களைச் சுற்றி இருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களை நியாயப்படுத்திவரும் ஏனைய தலைவர்கள் மத்தியில், சஜித்பிரேமதாச அவருடன் இருப்பவர்கள் தவறு செய்தால், அவர்களது தவறை அவர்களுக்கு உணர்த்தி திருந்தி செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பவர். 

கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் அவர் செயற்பட்டவிதம் ஒரு முன்மாதிரியான செயற்பாடாகும். ஆளும் தரப்பினர் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட ஹரீன் கருத்து கருணா தொடர்பான விமர்சனங்களை மறைப்பதற்கும் ஒரு சாதகமாக அமைந்திருந்தது. ஆனால் அதனை சஜித் மாற்றி அமைத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.