(நேர்காணல்: ஆர்.ராம்)
• அரசியல் பயணம் தடையின்றி தொடரும்
• ஆளும் தரப்புடன் விரிசலை ஏற்படுத்தச் சதி
• கூட்டமைப்பை உருவாக்கியது நானே
• தலைவருடன் முரண்படவேயில்லை
• எதிர்ப்பு, சரணாகதி அரசியலுக்கு இடமில்லை
ஜனாதிபதியும் பிரதமரும் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் மீது எனக்கும் நம்பிக்கை உள்ளது. அடுத்து வரும் காலத்தில் எனது அரசியல் செயற்பாடுகள் தங்குதடையின்றி தொடரவுள்ளன. தேர்தலின் பின்னர் நாம் பலமான கட்சியுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் தமிழர் மகா சபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு:-
கேள்வி:- அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நிகழ்ச்சி நிரலிலேயே நீங்கள் களமிறங்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகின்றீர்களே?
பதில்:- அம்பாறை மாவட்டத்தில் கோடீஸ்வரன் கூட்டமைப்புக்குள்ளேயே கட்சி தாவி இம்முறை போட்டியிடுகின்றார். இவர் வாக்குப்பலம் இல்லாதவர். அத்தகையவருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு எவ்விதமான விடயங்களும் இல்லாதததால் என்னை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவன் நானே. இவர்கள் எல்லோரும் நான் போட்டுக் கொடுத்த மேடையில் நின்று எனக்கு எதிராக விமர்சனம் செய்கின்றார்கள். இவர்களுக்கு என்னை விமர்சனம் செய்வதற்கு என்ன அருகதை உள்ளது. நான் இவர்களைப் போன்று வெறுமனே தேர்தல் காலங்களில் வெள்ளை வேட்டியைக் கட்டிக்கொண்டு நான்தான் தழிழன் என்று வார்த்தைகளால் கூவித்திரியும் ஒருவன் அல்லன். நான் எனது தமிழ் மக்களுக்காக இரத்தம் சிந்திப் போராடியவன் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
கேள்வி:- நாவிதன்வெளியில் நீங்கள் கூறிய கருத்து தென்னிலங்கையில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியதற்கு அப்பால் உங்களைக் கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுமளவுக்குச் சென்றிருக்கின்றதே?
பதில்:- நாவிதன்வெளியில் நான் கூறியவையை சர்ச்சைக்குரியதாக்கி ஆளும் கட்சியை சிக்கலுக்குள்ளாக்குவற்கான நடவடிக்கையாகவே என்னால் பார்க்க முடிகின்றது. எனக்கும் ஆளும் கட்சியினருக்கும் உள்ள உறவுக்குள் விரிசலை ஏற்படுத்துவதற்கான சதியாகக்கூட இருக்கலாம் என்றுதான் நான் கருதுகின்றேன். அரசியல் மேடைகளில் உரையாற்றுவதைப் பெரிதுபடுத்துவது ஓர் ஆரோக்கியமான விடயமாகாது.
கேள்வி:- குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் உங்களிடத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதா?
பதில்:- குற்றப்புலனாய்வு பிரிவினர் தமது கடமைகளைச் செய்தனர். நான் அவர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளித்தேன். நடந்த விடயத்த்தை அப்படியே கூறினேன். எனது அரசியல் பயணம் தங்கு தடையின்றி தொடரும். பிரசாரங்களை நான் தொடர்ந்தும் முன்னெடுப்பேன்.
கேள்வி:- அண்மைக்காலத்தில் நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் தேர்தல் காலத்தில் விடுதலைப்புலிகளைப் பிரசாரப் பொருளாகப் பயன்படுத்த விளைவதாகத் தெரிகின்றதே?
பதில்:- அவ்வாறில்லை. நான் யதார்த்தவாதியாகக் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றேன். தேர்தல் கால மேடைகளில் பல விடயங்கள் பற்றிப் பேசவேண்டியேற்படும். அவற்றையெல்லாம் கணக்கெடுத்து பழி தீர்க்கின்ற எண்ணம் கொண்டவர்களை நாம் மாற்றிக்கொள்ள முடியாது. நாம்தான் மாறிக்கொள்ள வேண்டும்.
கேள்வி:- சர்வதே மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புக்கள் போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதை எவ்வாறு பார்கின்றீர்கள்?
பதில்:- சர்வதேச மனித உரிமை கண்கானிப்பகம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பல குற்றங்களை என் பக்கம் முன்வைக்கின்றனர். இதனை எதிர்த்தரப்பினர் பக்கமும் காட்ட வேண்டும். நான் மாத்திரம் போராட்டத்தை நடத்தியவன் அல்லன்.
போராட்டத்தில் பங்கேற்றவர்களில் நானும் ஒருவன். அந்தவகையில் என்னுடைய தனிப்பட்ட வாழ்கையின் மீது குற்றங்களைத் திணிக்கின்றனர். போர்க்காலத்தில் இழப்புக்கள் இடம்பெறவில்லையா? எல்லாப் பக்கங்களிலும் இழப்புக்கள் ஏற்பட்டமை உண்மை. தொடர்ந்து போர் நடைபெறாமல் எத்தனையோ உயிர்களைப் பாதுகாத்திருக்கின்றேன்.
இது தொடர்பில் எவருமே கண்டுகொள்வதாக இல்லை. நாட்டில் மக்கள் சமாதானமாக வாழ்கின்றார்கள் என்றால் நான்தான் காரணம். வடக்கு, கிழக்கில் பொதுமக்களின் நடமாட்டத்துக்கான பூரண சுதந்திரத்தை ப் பெற்றுக்கொடுத்து நாட்டின் அபிவிருத்தியைக் கட்டியெழுப்பி வளமான நாட்டை உருவாக்குவதற்கு உதவியிருக்கின்றேன். இதனைச் குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்களுக்கும் சுட்டிக்கூற விரும்புகின்றேன்.
கேள்வி:- விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய காலம் முதல் 'துரோகி' பட்டத்தைச் சுமந்துவரும் நீங்கள் தற்போது அவர்களையும் போர்க்குற்றவாளிகளாக்கி விட்டதாக விமர்சிக்கப்படுகின்றதே?
பதில்:- நான் துரோகியாக எப்போதும் இருந்தது இல்லை. நான் யாரையும் காட்டிக்கொடுத்ததும் இல்லை. நான் தலைவருடன் எவ்விதத்திலும் முரண்பட்டவனும் அல்லன். போராட்டத்தை எனக்குத் தொடர்ந்து நடத்துவதற்கு முடியாது போனதால் நான் உள்ளிட்டவர்கள் அதிலிருந்து விலகினோம். நான் ஒதுங்கிக்கொண்டேன். தலைவர் பிரபாகரன் என் மீதும் என்னுடன் இருந்த போராளிகள் மீதும் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டபோது நான் அவர்களை பாதுகாத்து வீடுகளுக்கு அனுப்பியதைத் துரோகமாகக் கருதினால் என்ன செய்வது?
கேள்வி:- தற்போது நீங்கள் ஏற்படுத்திய சர்ச்சையால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் அறிவித்துள்ளாரே... அக்கட்சியில் உறுப்புரிமையைக் கொண்டிருந்தீர்களா?
பதில்:- அக்கட்சியில் நான் உறுப்புரிமையைக் கொண்டிருக்கவில்லை. பின்னர் எவ்வாறு என்னை நீக்க முடியும்?
கேள்வி:- சர்ச்சைகள் உருவாகியதன் பின்னரான சூழலில் ஜனதிபதி, பிரதமர் உங்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்களா? அன்றேல் நீங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டீர்களா?
பதில்:- ஜனதிபதி, பிரதமர் ஆகியோர் இந்நாட்டின் தலைவர்கள். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதுபோன்று நானும் அவர்கள் மீது நம்பிக்கைவைத்துள்ளேன். நாட்டின் தலைவர்கள் என்ற முறையில் உரையாடுவார்கள். தேவை ஏற்படும்போது நானும் பேசிக்கொள்வேன். அந்த உறவில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை.
கேள்வி:- தென்னிலங்கையில் உங்களுக்கு எதிராகப் போர்க்கொடிகள் எழுந்துள்ள நிலையில் தேர்தலின் பின்னர் ராஜபக் ஷவினருடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று கருதுகின்றீர்களா?
பதில்:- நிச்சயமாக பலமான கட்சியுடன்தான் இனைந்து பணியாற்றுவேன். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்கினாலும் நான் மாறப்போவதில்லை. மக்களுக்கான அபிவிருத்தியைத் தங்குதடையின்றிச் செய்வதற்கு ஆயத்தமாகவுள்ளேன். எதிர்ப்பு அரசியலோ, சரணாகதி அரசியலோ செய்யமாட்டேன். உரிமைக்கான குரலாகச் செயற்படுவேன்.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது விடுதலைப்புலிகள்தான் என்றும், நீங்களே அதற்கு சாட்சியம் என்றும் கூறுகின்றபோதும் கூட்டமைப்பின் தலைமைகள் அதனை மறுக்கின்றனவே?
பதில்:- கூட்டமைப்பு எதனை ஏற்றிருக்கின்றது? சுமந்திரன் ஆயுதம் தூக்கியது பிழை என்ற போதும், தன்னைக் கொலை செய்ய வந்ததாகக் கூறி முன்னாள் போராளிகளை அவர் சிறைக்கு அனுப்பியபோதும் தலைகுனிந்திருக்கும் தலைமைகளிடத்தில் உண்மையை எதிர்பார்க்க முடியுமா? போராட்டத்தின் வலியை உணராதவர்கள் எதைத்தான் ஏற்கப் போகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM