கட்டவிழும் புதிய உலக ஒழுங்கும் இலங்கை தமிழர் பிரச்சனையின் எதிர்காலமும்

28 Jun, 2020 | 02:42 PM
image

- வீரகத்தி தனபாலசிங்கம்

      

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் ஆட்கொல்லி கொவிட் -- 19 வைரஸ் தொற்றுநோய் சர்வதேச அரசியலை புரட்டிப்போட்டிருக்கிறது.எதுவுமே முன்னரைப்போன்று இனிமேல் இருக்கப்போவதில்லை என்பது நிச்சயமானது.கொரோனாவுக்கு பின்னரான புதிய உலக ஒழுங்கு கொண்டுவரக்கூடிய சவால்களைப் பற்றி சர்வதேச அரசியல் ஆய்வாளர்களும் நிறையவே எழுதுகிறார்கள்.கொரோனா பரவலின் விளைவான நெருக்கடியை மனிதகுலம் வெற்றிகரமாக கையாளுவதற்கு வழிகாட்டுவதற்கு சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் மத்தியில் ஒருமைப்பாடும் ஒத்துழைப்பும் அவசியமாக தேவைப்படும் ஒரு நேரத்தில்  புதிய பனிப்போர் ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்யப்படுகிறது.

இரண்டாவது உலகமகா யுத்தத்திற்கு பிறகு அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் சுமார் அரைநூற்றாண்டு காலமாக நீடித்த பனிப்போர் போன்று இப்போது அத்தகைய உலகப்போர் எதுவும் மூளாமலேயே கொரோனா பரவல்  பிரளயத்தின் பின்னரான காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய இரு  பொருளாதார வல்லரசுகளாக விளங்கும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மூளக்கூடிய அந்த புதிய பனிப்போர் வருங்காலத்தில் உலகில் புதிய வல்லாதிக்க முகாம்களை உருவாக்கப்போகிறது என்பதை கடந்த மூன்றுமாதகால நிகழ்வுப்போக்குகள் பிரகாசமாக வெளிக்காட்டிநிற்கின்றன.

இத்தகைய பின்புலத்தில், நாடுகள் அவற்றின் பொருளாதார மற்றும் புவிசார்அரசியல் மூலோபாய நலன்களை அடிப்படையாகக்கொண்டு வியூகங்களை வகுத்துச் செயற்படவேண்டியிருக்கும்.அதேபோன்றே உலகின் பல பாகங்களிலும் அடக்குமுறைக்கும் பாரபட்சத்துக்கும் எதிராக போராடிவரும்  சமூகங்கள் அவற்றின் எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்திக்கவேண்டியவையாக இருக்கின்றன.அத்தகைய போராட்டங்கள் தொடர்பில்  சர்வதேச சமூகம் இதுகாலவரையில் கடைப்பிடித்து வந்திருக்கக்கூடிய அணுகுமுறைகளுக்கு  கொரோனாவுக்கு பின்னரான புதிய உலக ஒழுங்கில் நேரக்கூடிய கதியே அந்த சமூகங்களின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்த வகையில் நோக்குகையில், இலங்கைத் தமிழர்களின் பல தசாப்தகால அரசியல் உரிமைப்போராட்டம் நீதி தேடலும்  எத்தகைய தாக்கங்களுக்கு உள்ளாகும் என்பது குறித்து  நாம் கருத்தூன்றிய அக்கறையுடன் சிந்திப்பது அவசியமாகும்.

2009 மேயில் உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னர் இதுவரையான பதினொரு வருடங்களிலும் அரசியல் தீர்வொன்றை காண்பதற்கும் போரின்போது இடம்பெற்ற உரிமை மீறல்களுக்கு நீதியை நாடுவதற்கும் இலங்கை தமிழர் அரசியல் சமுதாயம் சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணம் மற்றும்  உதவியின் மீது நம்பிக்கை வைத்தே அதன் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துவந்திருக்கிறது.மறுவார்த்தைகளில் சொல்வதானால், சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கக்கூடிய நெருக்குதல்களை  அடிப்படையாக கொண்ட அரசியல் அணுகுமுறைகளையே தமிழர்கள் கடைப்பிடித்துவந்திருக்கிறார்கள்.

 அதற்கு பிரதான காரணம் இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னர் முதல் மூன்று தசாப்த காலமாக மிதவாத தமிழ் அரசியல் தலைவர்கள் நடத்திய அமைதிவழிப்போராட்டமும் அடுத்த மூன்று தசாப்தங்களாக தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் நடத்திய ஆயுதப்போராட்டமும் பயனில்லாமல் போனபிறகு தமிழர்கள் தங்கள் மத்தியில் வலுவானமுறையில்  ஜனநாயக வழிப்போராட்டங்களை  முன்னெடுத்து கொழும்பு அரசாங்கங்கள்  அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டிய அவசியத்தை உணரக்கூடிய நெருக்குதல் நிலையை தோற்றுவிக்கக்கூடிய கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லாதவர்களாக விடப்பட்டதேயாகும்.பெருமளவு உயிரிழப்புகளையும் சொத்து அழிவுகளையும் விளைவித்த நீணட கால உள்நாட்டுப் போரினால் அவலத்துக்குள்ளான எந்தவொரு  சிறுபான்மைச் சமூகமும் இத்தகைய ஒரு நிலைக்கு தள்ளப்படுவது தவிர்க்கமுடியாததே.

ஆனால், அவர்களுக்காக குரல்கொடுக்கின்ற அரசியல் சமுதாயம் கடந்த காலப் போராட்ட அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, மாறிவிட்ட நிலைவரத்துக்கு தக்கவிதத்தில் அணுகுமுறைகளை வகுத்து செயற்படமுன்வரவில்லை என்றால் அதுதான் மகாதவறாகும்.

உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமைமீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச்சட்ட மீறல்களுக்காக இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறவைப்பதற்காக சர்வதேச மன்றங்களில் குறிப்பாக ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட செயன்முறைகளில் முற்றிலுமாக நம்பிக்கைவைத்து   அரசியல் கட்சிகளும் குழுக்களும் பொறுப்புக்கூறலையே அதிகளவு முனைப்புடன் வலியுறுத்திவந்தன .அதேவேளை, அரசியல் தீர்வு குறித்தும் அவை பேசின.ஒரே அரசாங்கத்திடம் போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலையும் தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய   இணக்கத்தீர்வையும் ஏககாலத்தில்  கோருவதில் உள்ள முரண்நிலை புரிந்துகொள்ளப்படவில்லை.

ஒரு தசாப்தகாலமாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த செயன்முறைகளின் இன்றைய நிலை  எமது நெருக்கடியில் சர்வதேச சமூகத்தின் மட்டுப்பாடுகளை மீண்டும் வெளிக்காட்டியிருக்கிறது.ஜெனீவா செயன்முறைகள் தென்னில்கையில் கிளப்பிய உணர்வலைகள் நாளடைவில் போர்வெற்றியின் சூத்திரதாரியையே நாட்டின் தலைவராக்கியிருக்கினறன. பொறுப்புக்கூறலினதும் அரசியல்தீர்வினதும் கதியை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமமிருக்காது.

இவ்வாறான நிலையில், அதுவும் இலங்கைத் தமிழர் பிரச்சினை போன்ற விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் முன்னணி நாடுகளின் கவனம் பெரிதும் திரும்பமுடியாத அளவுக்கு உலக அரசியல் நிலக்காட்சி மாறுகின்ற சூழ்நிலையில்  தங்களது எதிர்கால வியூகங்கள் குறித்து பாரதூரமாக சிந்திக்கவேண்டிய பொறுப்பு இலங்கைத்தமிழ் அரசியல் சமுதாயத்துக்கு இருக்கிறது. ஆனால், அந்தப் பொறுப்பின் பரிமாணத்தை முறையாக விளங்கிக்கொண்டு செயற்பாடுகளை தொலைநோக்குடன்  முன்னெடுக்கக்கூடிய தகுதியும் ஆற்றலுமுடையதாக  அந்த அரசியல் சமுதாயம் இன்று இருக்கிறதா? 

கொரோனாவுக்கு பின்னரான உலக ஒழுங்கில் எமது பிரச்சினையை எவவாறு கையாளுவது என்பது குறித்து பகுப்பாய்வு அடிப்படையில் ஆராயக்கூடிய விவேகமும் பக்குவமும் எமது அரசியல் சமுதாயத்துக்கு இருக்கிறதா?

கட்டவிழும் புதிய உலக ஒழுங்கில் கவனிப்புக்குள்ளாகாமல் போகக்கூடிய ஒரு பிரச்சினையாக தமிழர் பிரச்சினை மாறிவிடாமல் இருபபதற்கு செய்யவேண்டியவை குறித்து ஒரு கருத்தாடலை தூண்டிவிடுவதற்காக இந்த சிறு குறிப்பு எழுதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right