தமிழ் தேசிய கூட்டமைப்பும் இன்றைய தமிழ் அரசியல் சிந்தனையும்

28 Jun, 2020 | 11:34 AM
image

கலாநிதி தயான் ஜெயதிலக்க

" முட்களில் இருந்து திராட்சைப்பழங்களை பெறமுடியுமா அல்லது காட்டுச்செடியில் இருந்து அத்திப்பழத்தைப் பெறமுடியுமா? ” மத்தேயு 7 : 16 - 20

    

தந்திரோபாயக் கணிப்பீடு ஒன்று சிறிதும் இல்லாததாக தமிழ் அரசியல் இருக்கிறது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் எழுச்சிபெற்றுவரும் தலைவர் எம்ஏ.சுமந்திரனும் நிபந்தனையுடனான ஒத்துழைப்பை வழங்கத் தயாராயிருப்பதாக அண்மையில்  பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க ஆரோக்கியமான சமிக்ஞை என்கிற அதேவேளை, அவர்கள் முன்வைத்திருக்கும் நிபந்தனை உச்ச அளவுக்கு விவேகமற்றதாகும் ; அதாவது தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய புதிய அரசியலமைப்பை  கொண்டுவரவேண்டும் என்ற நிபந்தனை. அது திரும்பத்திரும்ப முயற்சிக்கப்பட்டு தோல்வியடைந்த ஒருநிபந்தனையாகும்.அது மேலும் பெருவாரியான பிரச்சினைகளை கிளறிவிடக்கூடியதாகும்.

    

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை  ஆசனங்களை அல்லது அதற்கு நெருக்கமான எண்ணிக்கை ஆசனங்களை  ஸ்ரீலங்கா பெரமுனவினால் கைப்பற்றக்கூடியதாக இருக்கும் என்பதை நிராகரிக்க முடியாது என்கிற அதேவேளை, எந்தவொரு புதிய அரசியலமைப்பும் தேர்தலில் வழங்கப்படக்கூடிய மக்கள் ஆணையையும் செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் சக்திகளின் பரந்தளவிலான பண்புகளையும்  அன்றி வேறு எதையும் பிரதிபலிப்பதாக இருக்கமுடியாது.அதாவது அதிகாரப்பகிர்வுக்கு ( அதிகாரப்பரவலாக்கலுக்கு ) அமைப்புமுறையில் மிகவும் தர்க்கரீதியாக விரோதமாக இருக்கின்ற நவ பழமைவாத ( Neo  conservative ), தீவிரதேசியவாத தன்மையுடைய  -- மட்டற்ற அளவுக்கு அதிகாரங்களை மத்தியமயப்படுத்துகின்ற சக்திகள் இதில் முக்கிய காரணியாக விளங்கும் எனலாம்.பெருமளவு அதிகாரப்பரவலாக்கல் எவ்வாறு பௌத்த ஆலோசனை கவுன்சிலை கடந்துசெல்லமுடியும்? இதற்கு எதிரான வாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் தேவைகளை நிறைவேற்றுகின்ற அரசியலமைப்பு ஒன்று இல்லாவிட்டால் அதன் ஆதரவை ஒருபோதும் வழங்காது என்பதாகவே இருக்கமுடியும். அது துருவமயமாதலை தீவிரப்படுத்தக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கும்.

    

சிங்கள தீவிர வலதுசாரி அலை

    

சிங்கள மாற்று(Alt  - Right)  வலதுசாரிச் சக்திகளின் எழுச்சியின் தடத்தை திரும்பிப்பார்த்தால் அதற்கு தமிழர்களின் அபிலாசைகளுக்கு  மேலும் இடம்கொடுக்கக்கூடிய புதிய அரியலமைப்பை நாடுகின்ற திட்டத்துடன்்இருக்கும் இடைத்தொடர்பை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

சிங்கள புதிய வலதுசாரிகளின் எழுச்சியல் இரு அலைகள் இருந்தன.முதலாவது அலை  பிராந்தியங்களின் ஒன்றியத்தை  ( Union of Regions  ) அல்லது அரைச் சமஷ்டியை (Quasi --  Federalism) விதந்துரைத்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசியல் தீர்வுத்திட்டம் ( Political package ) ஒன்றினால் தூண்டிவிடப்பட்ட இயக்கமாகும்.

 ஜனாதிபதி குமாரதுங்க 1994 ஆம் ஆண்டிலும் 1999 ஆம் ஆண்டிலும் பெரிய தேர்தல் வெற்றிகளைப் பெற்றபோதிலும், அவரது தீர்வுத்திட்டத்துக்கான எதிர்ப்பு பரவலானதாகவும் நீடித்ததாகவும் இருந்தது.அந்த எதிர்ப்பு இறுதியில் வெற்றியடைந்து 2005 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு வழிவகுத்தது.அதற்கு துல்லியமான காரணம் குமாரதுங்கவின் தீர்வுத்திட்டம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லைவரையறைகளுக்கு வெளியில் இருந்தமையேயாகும்.இன்று கோத்தாபய ராஜபக்சவின் இருப்பதைப் போலன்றி, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவரின் நிகழ்ச்சித் திட்டத்தில் தீவிர சிங்கள பௌத்த தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தவில்லை.மதமாற்றத்துக்கு எதிரான சட்டமூலத்தை மகிந்தவே வாபஸ்பெற்றுக்கொண்ட சம்பவம் இதற்கு ஒரு சான்றாகும்.

    

இரண்டாவது அலை ரணில் -- மங்களவின் அங்கீகாரத்துடனான 2015 ஜெனீவா திர்மானத்துக்கும் புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் திட்டத்துக்கும் எதிராகக் கிளம்பியது. அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்துக்கு கருத்தொருமிப்பு காணப்பட்டது ; அந்த கருத்தொருமிப்பு ஐக்கிய தேசிய கட்சி தொடங்கி கூட்டு எதிரணி வரை இருந்தது.நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குழுவுக்கும் தினேஷ் குணவர்தன தலைமையில் கூட்டுைஎதிரணியின் பாராளுமன்றக் குழுவுக்கும் இடையில் இது தொடர்பில் ஜனாதிபதி சிறிசேனவின் மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்டடன.எதிர்த்த ஒரேயொருவர் தீவிர வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினரான அட்மிரல் சரத் வீரசேகர வேயாவார்.அவரின் எதிர்ப்பு அந்த நேரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை.

     

அரசியலமைப்பு வரைவு முயற்சி 19வது திருத்தத்துக்கு அப்பால் --  அரசின் ஒற்றையாட்சித் தன்மையை மாற்றுவதில் நாட்டம்கொண்ட ஒரு புதிய அரசியலமைப்பை நோக்கியதாக சென்றபோது அந்த எதிர்ப்பு அலை சுனாமி போன்று பூதாகாரமாகியது.

    

13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் அடிப்படை மாற்றமொன்றை அல்லது அரசின் ஒற்றையாட்சித்தன்மையில் அடிப்படையான மாற்றமொன்றை கொண்டுவருவதாக இருந்தால் மாத்திரமே தமிழர்களின் அபிலாசைகளுக்காக புதியதொரு அரசியலமைப்பு அவசியமாக தேவைப்படும்.ஜனாதிபதியாக இருந்தபோது அத்தகைய எந்தவொரு சாத்தியம் குறித்தும் சிந்திக்காத / சிந்திக்கமுடியாத பிரதமர் ஒருவரின் ஊடாகவும் அதிகாரப்பரவலாக்கலை வெறித்தனமாக எதிர்க்கின்ற பௌத்த மதகுருமாரினாலும் தீவிரதேசியவாத உணர்வுகொண்ட முன்னாள் இராணுவ உயரதிகாரிகளினாலும் சூழப்பட்டிருக்கின்ற ஒரு ஜனாதிபதி ஒருவரின் ஊடாகவும் அத்தகைய அடிப்படை மாற்றமொன்று சாத்தியமாகும் என்ற எண்ணம் நடைமுறைக்கு ஒத்துவராத கற்பனையாக இருக்கமுடியுமே தவிர வேறு ஒன்றுமாக இருக்கமுடியாது.

    

சிங்கள அலைமீது ஏறிவந்த ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் -- தங்களது தந்தையாரின் தலைவர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க நேர்ந்த   துயர்நிறைந்த கதியையும் அந்தக் கதி எந்த வட்டாரங்களில் இருந்து வந்தது என்பதையும் நன்கு தெரிந்துகொண்டு - அரசியல் பிக்குகளின் தலைமையிலான தீவிர தேசியவாத சக்திகளின் சீற்றத்துக்கு ஆளாக துணிச்சல் கொள்வது சாத்தியமானதல்ல.அதேவேளை, தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அப்பால் சென்று தமிழர்களின் அபிலாசைகளுக்கு இடம்கொடுப்பதன்மூலம் ( தோல்வியால் துவண்டுபோயிருக்கும் ) கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கவும் ஜனாதிபதியும் பிரதமரும் துணிச்சல் கொள்ளமாட்டார்கள்.

   1957 பண்டாரநாயக்க -- செல்வநாயகம் ஒப்பந்தத்துக்கு எதிராக ஜே.ஆர்.தலைமையில் கண்டிக்கு பாதயாத்திரை மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சிதான் 1977 தொடங்கி 1983 வரை சிறில் மத்தியூவின் இனவெறிக்கு பலம்கொடுத்தது ; 2000 ஆகஸ்டில் திருமதி குமாரதுங்கவின் அரசியலமைப்பு வரைவை பாராளுமன்றத்தில் ( தலைவர் ரணில் விக்கிரமசிங்க குதூகலித்தவண்ணம் பார்த்துக்கொண்டிருந்தபோது ) தீயிட்டுக் கொளுத்தியது. பிறகு  எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மங்கள சமரவீரவினதும் அநுரா பண்டாரநாயக்கவினதும் தூண்டுதலுடன் விமல் வீரவன்சவுடனும் ஜே.வி.பி.யுடனும் அணிசேர்ந்து உருவாக்கிய தேசியவாத அலைதான் புவிகளை சாந்தப்படுத்தும் போக்கைக் கடைப்பிடித்த விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை குமாரதுங்க கவிழ்ப்பதற்கு வசதிசெய்து கொடுத்தது.

ஆட்சி செல்வாக்கைத் தடுத்து நிறுத்திய ஹுல்

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுலையும் அவரது ஒக்ஸ்போர்ட் பட்டதாரியான இளம் மகளையும் அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதிகள் இன்று ஆபத்துக்குரியவர்களாகக் காட்டுகின்ற போக்கு சிறில்மத்தியூ கால சூழ்நிலையை நினைவுபடுத்துகிறது.

விஞ்ஞான கலாநிதிப்பட்டத்தைப் பெற்றிருக்கக்கூடிய ஒரேயொரு இலங்கையரான ஹுலை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்தார். அப்போது கார்லோ பொன்சேகாவும் பிரசன்னமாகியிருந்தார். ஒரு கிறிஸ்தவரான ஹுலுக்கு எதிராக தமிழ், இந்து தீவிரவாத சக்திகள் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாடுகளைச் செய்ததன் காரணமாக ஹுலின் அந்த நியமனம் தடைப்பட்டுப்போனது. அவரை உபவேந்தராக நியமிக்குமாறு நானும் ராஜபக்ஷவை வலியுறுத்திக் கேட்டேன். அதற்கும் அவர் செவிசாய்க்கவில்லை. தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு ராஜபக்ஷ இணங்கிப்போனார். ஹுலுக்கு எதிரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வசைமாரி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு முன்னர் விடுத்த அழைப்பிற்குப் பிறகு நிலைவரங்கள் எத்தளவு தூரத்திற்கு சீர்கெட்டுப்போயின என்பதைக் காட்டுகிறது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு ரியர் அட்மிரல் ஷெமால் பெர்னாண்டோ (பி.எச்.டி) சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் (14.06.2020) எழுதிய கட்டுரையின் ஆரம்பப்பந்தி இந்த விடயங்களைப் பற்றி மேலும் பல தகவல்களைக் கூறுகின்றது. 

ஆனால் அந்தக் கட்டுரை திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றைக் கூறுவதாக இருந்தது. அதாவது போரின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளின் தளபதியாகவும் இருந்து, போரு;ககு ஒட்டுமொத்த தலைமைத்துவத்தை வழங்கினார் என்ற உண்மையை அந்தக் கட்டு:ரை தவிர்க்கிறது. இத்தகைய ஒரு கோட்பாட்டுத் தோற்றுவாயிடமிருந்து புதிய அரசியலமைப்பொன்றைப் பெறமுடியுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபத்தமான முறையில் எதிர்பார்க்கிறது. 

தவிர்த்திருக்கக்கூடிய எழுச்சிகள்

இரு சிங்கள புதிய வலதுசாரி அலைகள் தோன்றுவது தவிர்க்க முடியாததாகப் போனது. இந்தியாவினதும், இடதுசாரிகளினதும், மிதவாத எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஆதரவைக் கொண்டிருந்த ஜனாதிபதி குமாரதுங்க செய்திருக்க வேண்டியது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மானசீகமாக நடைமுறைப்படுத்தி 1987 பிற்பகுதியில் இந்தியாவினாலும், இலங்கையினாலும் சமர்ப்பிக்கப்பட்ட எஞ்சிய விவகாரங்களையும் கவனத்தில் எடுத்திருக்க வேண்டும். இந்தியா அதற்குமேல் ஒருபோதும் வற்புறுத்தவில்லை. குறிப்பாக 1999 டிசம்பரில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் மூலம் தன்னைக் கொல்வதற்குக் கொழும்பு நகர மண்டப மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி மற்றும் 2001 செப்டெம்பர் 11 அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்துப் பயங்கரவாதம் தொடர்பில் உலக நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகப் போரில் வெற்றி பெறுவதற்கு குமாரதுங்க நல்ல வாய்ப்பைக் கொண்டிருந்தார். 2004 - 2005 இல் வீசிய முதலாவது சிங்கள வலதுசாரி அலை பிரபாகரனுடனான ரணில் விக்கிரமசிங்கவின் போர்நிறுத்த உடன்படிக்கையையும் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பையும் குமாரதுங்க முன்வைத்த விடுதலைப்புலிகளுடன் இணைந்த சுனாமி புனர்நிர்மாணக் கட்டமைப்பு தகர்த்தெறிந்தது. 

2019 பிற்பகுதியில் தோன்றிய இரண்டாவது சிங்கள வலதுசாரி அலை தவிர்க்க முடியாததாகிப்போனது. அந்த மாறுதலுக்கான நகர்வின் முதலாவது குமுறல்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தின் போது தென்பட்டன. 2011 இல் காலந்தாழ்த்தியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. தோற்கடிக்கப்பட்டதும், பெரிதும் வெறுக்கப்பட்டதுமான விடுதலைப்புலிகளின் அரசியல் அனுதாபிகள் என்று பரவலாகக் கருதப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 13 ஆவது திருத்தத்தை பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு கட்டமைப்பாகவோ அல்லது அடிப்படையாகவோ கருதுவதற்கு மறுத்து எளிதில் உணர்ச்சிகளைக் கிளறிவிடக்கூடியது. காணி விவகாரம் தொடர்பில் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்செல்லும் வகையிலான யோசனைகளை முன்வைத்தது. 

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபையின் முதலமைச்சர் (நேரு மற்றும் இந்திரா ஆகியோரின் ஆட்சியின் கீழ் காஷ்மீரில் கூட ஒரு முதலமைச்சருக்கு ஆபத்தானதாக அமைந்த கோட்பாடாக சுயநிர்ணய உரிமை மீதான தனது பற்றுறுதியை வலியுறுத்தி அறிக்கையொன்றை வெளியிட்ட போதும் 2013 இல் அடுத்த குமுறல்களைக் கேட்கக்கூடியதாக இருந்தது. போர் மூண்டபோது அதிகாரப்பரவலக்கல் அலகாக மாவட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பசிலையும், மஹிந்த ராஜபக்ஷவையும் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் கோத்தபாய ராஜபக்ஷ 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை உச்சியிலிருந்து கீழ்நோக்கி வளருகின்ற ஆபத்தான ஒரு அதிகாரப்பரவல் ஏற்பாடாகக் கருதத் தொடங்கினார். வடக்கு முதலமைச்சரின் தறிகெட்ட ஆத்திரமூட்டல்கள் அவரிடம் இந்த மாற்றம் ஏற்படுவதற்கு ஊக்கியாக இருந்தது. 

தமிழ் அரசியல் சிந்தனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடைமுறைச் சாத்தியமற்ற நிலைப்பாடுகள் தமிழ் அரசியல் உணர்வு நிலையினால் தூண்டப்பட்டவை என்பதையும், அந்த உணர்வு நிலையின் நீரோட்டத்தின் மீதே தமிழர் அரசியலை முன்னெடுப்பதற்கான போக்குகளை ஒருங்கிசைவாக்குவதற்கான முயற்சிகளையும் ஒப்புக்கொள்ளாமல் கூட்டமைப்பை விமர்சிப்பது நேர்மையற்ற ஒரு செயலாகும். 

தமிழர் பிரச்சினை தொடர்பில் நான் முதன்முதலாக 1979 ஜுன் - ஜுலை லங்கா கார்டியன் இதழில் எழுதினேன். அப்போது எனக்கு வயது 22. தமிழர் பிரச்சினை பற்றிய எனது அந்த முதல் கட்டுரை 41 வருடங்களுக்கு முன்னர் கலாநிதி குமார் டேவிட்டுடன் வாதங்களுக்கு வழிவகுத்தது. பழைய நினைவை மீட்டுவதன் அடிப்படையில் சில கேள்விகளைத் தொடுக்க விரும்புகின்றேன். 

1. தமிழ் மக்களின் மிகவும் உயர்ந்த அரசியல் சாதனை என்ன?

2. இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

3. பிரபாகரனால் ஒழித்துக்கட்டப்பட்டவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

4. தமிழ் மக்களின் அந்த உச்ச சாதனையை ஒடுக்க அனுமதித்த சக்திகளில் எஞ்சியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றமென்ன?

5. தமிழ் சமூக ஆளுமைகளில் மீண்டும் இன்று உயிரோடு கொண்டு வரப்பட வேண்டியவர் இருந்தால் அது யாராக இருக்கும்?

சுமார் 3 தசாப்தகாலப்போர் மற்றும் பல தசாப்தகால அமைதிவழிப்போராட்டங்கள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தமிழ்மக்களின் உச்சபட்ச அரசியல் சாதனையாக இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையும், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தமும், ஓரளவு சுயாட்சியுடைய மாகாணசபை முறைமையும் ஆகும். இந்தச் சாதனை பிரபாகரனின் உச்சபட்ச இராணுவ சாதனையுடன் ஒருங்கிசைவானதல்ல என்பது முக்கியமாககக் கவனிக்கப்பட வேண்டியதாகும். அவரின் உச்சபட்ச இராணுவ சாதனை அடுத்த தசாப்தத்தில் ஆனையிறவு (2000) மற்றும் கட்டுநாயக்க (2001) தாக்குதல்களுக்குப் பிறகே நிகழ்ந்தது. 

பிரபாகரனின் யுத்தம் அதன் மிகவும் வெற்றிகரமான கட்டத்தில் இருந்தபோது (ஐரிஷ் விடுதலை இராணுவத்தின் போராட்டத்தைப் போலன்றி) எந்தவொரு அரசியல் சாதனையை அல்லது பலாபலன்களை விட்டுச்செல்லவில்லை. விடுதலைப்புலிகள் ஏகபோக அதிகாரத்தைச் செலுத்துவதற்கு முன்னதாகப் பல ஆயுதக்குழுக்கள் இருந்த நேரத்தில் சாதிக்கப்பட்டவையே தமிழர் போராட்டத்தின் நிலையான மிச்சம் மீதியாக இருந்துவருகிறது. தமிழர் விடுதலைக்கூட்டணி அவ்வேளையில் பேச்சுவார்த்தையின் முக்கிய சக்தியாக விளங்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ஒரு தீவிரமான பாத்திரத்தை வகித்தது. 

வெளிப்படையாகச் சொல்வதாக இருந்தால் தமிழ் மக்களடைந்த அரசியல் பலாபலன்கள் எவையாக இருந்தாலும் - மாகாணசபைகளாக இருந்தாலென்ன, மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையாக இருந்தாலென்ன - அதற்குக் காரணம் பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் அல்ல, இந்தியாவேயாகும். 

பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சுனாமி காரணமாக ஒரு வருடம் பிற்போடப்பட்ட நிலையில் பிரபாகரனும் அவரது இராணுவமும் தாங்கனே தெரிந்தெடுத்த நேரத்தில் தொடுத்த இறுதிப்போரில் அழித்தொழிக்கப்பட்டார்கள். 1987 இல் இலங்கை இராணுவத்திடமிருந்து பிரபாகரனைக் காப்பாற்றிய தலைவர் ராஜீவ் காந்தி 1991 மேயில் அவராலேயே கொல்லப்பட்டார். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இன்று காணப்படும் ஈவிரக்கமற்ற உறுதிப்பாடு, பயங்கரவாதத்திற்கு எந்த நிலையிலும் இடமளிப்பதில்லை என்ற கோட்பாடு மற்றும் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆயுதப்போராட்டம் தொடர்பில் வெளிப்படக்கூடிய எந்தவொரு அறிகுறியும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுவிடும்.

பிரபாகரனால் கொலை செய்யப்பட்டவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவரால் கொலை செய்யப்பட்டவர்களில் அமிர்தலிங்கள், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், சாம் தம்பிமுத்து, நீலன் திருச்செல்வம், கே.பத்மநாபா, மாத்தையா என்றழைக்கப்பட்ட கோபாலசாமி மகேந்திரராஜா, கேதீஸ் லோகநாதன், ரஜினி திரணகம மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோரைக் குறிப்பிடலாம். அவர்களில் எல்லோரும் அல்லது பலர் இன்று இல்லாவிட்டாலும் எவராவது ஒருவர் உயிருடன் இருந்திருந்தால் இலங்கையின் வடக்கிலும், தெற்கிலும், உலகலாவிய ரீதியிலும் தமிழரின் அரசியல் பலமும் வாய்ப்புக்களும் பெறுமதியின் அடிப்படையில் சிறப்பானதாகவும், பரந்ததாகவும் இருந்திருக்கும். 

எனவே தமிழரின் அரசியல் உரிமைப்போராட்டத்தில் மிகப்பெரிய இழப்பு எது? பிரபாகரனும் அவரது இராணுவமுமா? அல்லது அவரால் கொலை செய்யப்பட்டவர்களா? உயிருடன் இருந்திருந்தால் இவர்களில் யார் தமிழர்களின் அரசியல் இலட்சியத்திற்கும், திட்டத்திற்கும் கூடுதலான பங்களிப்புச் செய்திருக்கமுடியும்?

தமிழர்களின் அரசியல் நினைவின்படி பிரபாகரனின் போர் முற்றிலும் தோல்விகண்ட ஒன்றாக இருந்தபோதிலும் இராஜதந்திர ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் இந்தியாவின் தலையீடு தமிழர்களுக்கு சாதித்துக் கொடுத்ததை விடவும் கூடுதலாக சாதித்துக்கொடுத்திருக்கிறது என்று உணரப்படுகிறது. இது தர்க்க ரீதியாக சாத்தியமற்றது. ஏனென்றால் ஹிஸ்புல்லாவும், ஹமாஸும் போன்று வெற்றிகரமாக எதிர்ப்போராட்டத்தை நடத்துகின்ற அல்லது ஐரீஷ் விடுதலை இராணுவம் போன்று நடைமுறைச் சாத்தியமான திருத்தங்களை ஏற்றுக்கொள்வதற்காகப் போரை நிறுத்துகின்ற இயக்கங்களைப் போலல்லாமல் இறுதிவரை போராடி முற்றுமுழுதாகத் தோற்கின்ற எந்தவொரு முறைப்படி அமைக்கப்படாத இராணுவமும் நிலைபேறான அரசொன்றின் பலம்பொருந்திய பாரம்பரிய இராணுவத்தின் தாக்கத்திற்கு எதிர்த்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமல்ல. 

தமிழர்களின் கற்பனைத்தனமான சிந்தனை எவ்வாறிருந்தாலும் யதார்த்தம் என்னவென்றால் பிரபாகரனின் தற்கொலைக்குண்டுப் போராளிகளும், குறிவைத்துச்சுடுபவர்களும், பீரங்கிப்படைப் பிரிவுகளும், கடற்புலிகளும், குட்டி விமானப்படையும் தமிழர்களுக்குச் சாதித்துக் கொடுத்ததை விடவும் கூடுதலானதை இந்தியாவின் மிராஜ் - 2000 விமானங்கள் சாதித்துக் கொடுத்தன என்பதேயாகும்.

இறுதியில் பிரபாகரனும், விடுதலை;பபுலிகளும் தமிழர்களுக்காகச் சாதித்துக் கொடுத்தவற்றின் விளைவுகள் எதிர்மறையானவையே. அதாவது அழிவும், வடக்குக் கிழக்கு மாகாணங்களும் அவற்றின் குடிமக்களும் இலங்கை இராணுவத்தினால் முற்றுமுழுதாக ஆதிக்கம் செலுத்தப்படும் சூழ்நிலையுமாகும். அந்த விளைவுகளுக்கு மத்தியிலும் இன்று விஞ்சியிருப்பது விடுதலைப்புலிகளினால் நிராகரிக்கப்பட்டதும், தமிழர் விடுதலைக் கூட்டணி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதுமே ஆரத்தழுவாததுமான ஓரளவு சுயாட்சியுடனான இரு மாகாணசபைகளேயாகும். மிராஜ் - 2000 போர்விமானங்களினால் ஊக்கங்கொடுக்கப்பட்ட இந்திய இராஜதந்திரத்தின் உற்பத்தியே தவிர தமிழீழம் என்ற கானல் நீரின் விளைவு அல்ல. (The product of India's diplomacy, finally backstopped by the Mirage - 2000, not the mirage of Tamil Eelam)

விடுதலைப்புலிகள் ஒழித்துக்கட்டப்பட்ட பின்னரும் கூட இந்திய இராஜதந்திரத்தின் விளைவான அந்த மாகாணசபைகளை மேவிச்சென்று அதைவிட மேம்பட்ட ஏற்பாட்டைக் கொண்டுவரமுடியுமென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், அதிதீவிர தேசியவாத தமிழ் அரசியல்வாதிகளும் தொடர்ந்து நினைக்கிறார்கள். எதனுதவியுடன், எவ்வாறு அதை சாதிப்பது? போர் நடந்துகொண்டிருந்த போது இலங்கை அரசும், சிங்கள மக்களும் ஒரு முற்றுகை நிலைக்குள் இருந்த வேளையில்கூட ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்கு அப்பால் செல்லக்கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவரவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ அவர்கள் தயாராக இருக்கவில்லை. இலங்கை அரசு போரை வென்ற பிறகு எவ்வாறு புதிய அரசியலமைப்பு ஒன்றைச் சாதிக்கமுடியும்? சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத அளவிற்கு மிகவும் மத்தியமயப்படுத்தப்பட்ட, இராணுவவாத சிங்களபௌத்த மேலாதிக்க ஆட்சியொன்று பதவியிலிருக்கும் நிலையில் இன்று அது சாத்தியாகுமென்று ஏன் இவர்கள் நினைக்கிறார்கள்? 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13