இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்,  சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘கோப்ரா’ படத்தின் சிங்கிள் ட்ராக், ஜூன் 29 ஆம் திகதியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும், புதிய திரைப்படம் ‘கோப்ரா.

இந்தப் படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜோர்ஜ், இந்திய துப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர் இர்பான் பதான், கே.எஸ் ரவிக்குமார், ஜோன் விஜய், கனிகா, மிருணாளினி ரவி, ரோபோ சங்கர், பத்மபிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தில் சீயான் விக்ரம் பதினைந்துக்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘தும்பி துள்ளல்...’ எனத் தொடங்கும் பாடல் இம்மாதம் 29ஆம் திகதியன்று மாலை 5 மணி அளவில் இணையத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அழைப்பிதழும் ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.