மது போதையில் இடம்பெற்ற குழு மோதலில், மூவர் கத்திக் குத்துக்கு இலக்காகி தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பண்டாரவளைப் பகுதியின் சென். கத்தரின் பெருந்தோட்டத்தில் நேற்று இரவு மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூவரில், ஒருவரின் நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

   சென். கத்தரின் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த எம். ரஜீவ், எஸ். சசிதரன், எம். கிசாந்தன் ஆகிய மூன்று பேரே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி மோதல் குறித்து, பண்டாரவளைப் பொலிசாருக்கு செய்யப்பட்ட புகாரின் பேரில், பொலிசார் விரைந்து, தோட்ட மக்களின் உதவியுடன், காயங்களுக்குள்ளான மூவரையும், தியத்தலாவை அரசினர் மருத்துவ மனையில் அனுமதித்தனர். 

  கத்திக்குத்தினை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்ட தோட்டத்தை விட்டு, தலை மறைவாகியிருப்பதால், எவரையும் கைது செய்ய முடியவில்லையென்றும், விரைவில் அவர்களை கைது செய்ய இயலுமென்றும், பண்டாரவளைப் பொலிசார்  தெரிவித்தனர்.