உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை நெருங்கவிருக்கும் நிலையில், நோயாளிகளுக்கு தேவையான ஒட்சிசன் இருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் அதானோம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உலகம் முழுக்க சுமார் 93 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 480,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தற்போது ஒரு வாரத்திற்கு 10 இலட்சம் பேர் என்ற விகிதத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவிவருகிறது.

இதனால் ஒவ்வொரு நாளும் 88,000 பெரிய ஒட்சிசன் சிலிண்டர்கள் அல்லது 620,000 கன மீற்றர் ஒட்சிசன் பயன்படுத்தப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

“ஒட்சிசன் செறிவூட்டிகளை பெறுவதில் பல நாடுகள் சிரமத்தை சந்தித்து வருகின்றன. தற்போது ஒட்சிசன் சிலிண்டர் தேவையை காட்டிலும் விநியோகம் குறைவாகவே இருக்கிறது.

உலக சுகாதார ஸ்தாபனம் 14,000 ஒட்சிசன் செறிவூட்டிகளை கொள்முதல் செய்துள்ளது. அவற்றை அடுத்த சில வாரங்களில் 120 நாடுகளுக்கு அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆறு மாதங்களில் கூடுதலாக 100 மில்லியன்  டொலர் மதிப்பிலான 170,000 ஒட்சிசன் செறிவூட்டிகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரகால திட்ட தலைவர் மைக் ரயன் தெரிவிக்கையில்,

“லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த வாரம் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளது. பல நாடுகளில் கடந்த வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25-50 வீதமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தற்போதும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அங்கு கொரோனா இன்னும் உச்சத்தை எட்டவில்லை. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.