தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை கோருவதன் மூலம் உள்ளக விசாரணையே இடம்பெறாமல் போகும் அபாயம் காணப்படுகின்றது. இந்த விடயத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் யதார்த்தமாகவும்,  நுட்பரீதியாகவும் செயற்படவேண்டுமென நான் யோசனை முன்வைக்கிறேன் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்  பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவில் இடம்பெற்றதைப்போன்று உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவி  இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை கண்டறிய முயற்சிக்கின்றோம். ஆனால் இவ்வாறு சர்வதேச நீதிபதியை கோருவதன் மூலம் அந்த முயற்சிகளும் பயனற்று போய்விடும் என்று அஞ்சுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணை பொறிமுறையில் ஈடுபடுத்த அரசியலமைப்பில் இடமில்லை. அரசியலமைப்பை மீறி எதனையும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளமை குறித்து  வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.