(நா.தனுஜா)

அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் தற்போது நடைமுறையிலுள்ள மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணித்துவிட்டு இன மற்றும் மதவாதத்தைத் தூண்டிவிடுவதன் ஊடாக அரசியல் செய்து வருகின்றனர். ஏற்கனவே மூன்று தசாப்தகாலப் போரினால் சீர்குலைந்திருக்கும் நாட்டில் இவ்வாறு மீண்டும் இன மற்றும் மதவாதத்தைத் தூண்டிவிடுவதன் ஊடாகத் தமது அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்ள முற்படுவதை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் வருண ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

தற்போது மத்திய வங்கியின் ஊழியர்களுக்கு ஜனாதிபதி கடுந்தொனியில் அறிவுறுத்தல்களை வழங்கியமை பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஜனாதிபதியுடன் நிகழ்ந்த சந்திப்பையடுத்து நியதி ஒதுக்கு வீதத்தினைக் குறைப்பதாக மத்திய வங்கி அறிவித்தது. ஆனால் இதன் காரணமாக புழக்கத்திலுள்ள பணத்தின் திரவத்தன்மை அதிகரித்து, பணவீக்கம் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் அதனால் பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் நிலையும் ஏற்படும். சண்டியர்களின் நெருக்குதல்களால் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கோ அல்லது நிர்வகிப்பதற்கோ இயலாது.

அடுத்ததாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடு மற்றும் நாட்டின் வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்தல் ஆகியவற்றில் அரசாங்கம் முறையான செயற்திட்டமொன்றைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. பாடசாலைகளை மீளத்திறந்தாலும், இவ்வளவு நாட்களும் எந்தவொரு கல்விச்செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாதிருந்த நிலையில் உயர்தரப்பரீட்சைகளை நடத்துவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அதேபோன்று இக்காலப்பகுதியில் பலர் தமது வேலைவாய்ப்புக்களை இழந்திருக்கின்றனர். பொருட்களின் விலைகள் மிகவேகமாக அதிகரிக்கப்போகின்றன. எனினும் அரசாங்கம் தேர்தலை நடத்துவதிலும், அதற்காக செலவிடுவதிலும் காண்பிக்கின்ற அக்கறையை மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதில் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.

இவ்வாறு நடைமுறையிலுள்ள மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணித்துவிட்டு இன மற்றும் மதவாதத்தைத் தூண்டிவிடுவதன் ஊடாக அரசியல் செய்வதற்கு ஒருதரப்பினர் முயற்சித்து வருகின்றனர். ஒருபுறம் கருணா அம்மான் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளேயே முரண்பாடான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மறுபுறம் ஹரீன் பெர்னாண்டோ கிறிஸ்தவர்களின் மனங்களை வேதனைக்குட்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றார்.

எமது நாடு மூன்று தசாப்தகால போரினால் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கிறது. அவ்வாறிருக்கையில் மீண்டும் இன மற்றும் மதவாதத்தைத் தூண்டுவதன் ஊடாக தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படுவதனை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை அனைத்து இன, மதங்களைச் சேர்ந்த மக்களையும் ஒன்றிணைந்து நல்லிணக்கத்துடன் முன்நோக்கிப் பயணிப்பதொன்றே எமது ஒரே எதிர்பார்ப்பாகும். மாறாக தேவையற்ற இன, மதவாதப் பிரசாரங்களின் ஊடாக மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் புறந்தள்ளும் அரசியலில் நாம் ஒருபோதும் ஈடுபட மாட்டோம் என்றார்.