(எம்.மனோசித்ரா)

இராணுவத்தினரை படுகொலை செய்ததாக கூறும் கருணா அம்மானுக்கு ஆயுதம் கிடைக்கப்பெற்றமை குறித்து பிரதமர் பகிரங்க மேடைகளில் கருத்து கூறி வருகின்றார். எனவே கருணாவுடன் சேர்த்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் குற்றப்புலானாய்வு பிரிவு விசாரணை செய்து ஆயுதம் வழங்கப்பட்டமை தொடர்பான உண்மைகளை வெளிக்கொனர வேண்டும் என அஜித் பீ. பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

கருணா அம்மான் இராணுவ வீரர்களைத் தாக்குவதற்கு ரணசிங்க பிரேமதாசவே ஆயுதம் வழங்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன என்று  இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தனக்கு ஆயுதம் கிடைக்கப்பெற்றமை குறித்து கருணா அம்மான் தனிப்பட்ட ரீதியில் பிரதமரிடம் தெரிவித்திருக்க கூடும். எனவே பிரதமரை ஒரு சாட்சியாளராக குற்றப்புலனாய்வு பிரிவு உள்வாங்க வேண்டும். கருணா அம்மான் இராணுவ வீரர்களை கொன்றதாக பகிரங்கமாக தெரிவித்திருக்கும் சந்தர்ப்பத்தில் அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கள் உள்ளன.

இராணுவத்தினரை தாக்குவதற்கு புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்பதை பிரதமர் அறிந்திருப்பாரானால் ஆயுதங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன ? எவ்வகையான ஆயுதங்கள் ? யாரால் வழங்கப்பட்டது ?  போன்ற தகவல் குறித்து பிரதமரிடம் விசாரிக்க முடியும். எனவே வழக்கு விசாரணையின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பிரதான சாட்சியாக உள்வாங்க முடியும்.

கருணா அம்மான் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவில்லை என்று அந்த கட்சியினர் கூறினாலும் அவர் எந்த தரப்பில் போட்டியிடுகின்றார் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாதளவிற்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல. இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் பதவியும் இவருக்கே வழங்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ச மற்றும் கருணா அம்மான் இணைந்து செயற்படுவதனால் மேற்படி விடயம் குறித்து இருவருக்குமிடையில் கருத்துக்கள் பறிமாறிப்பட்டிருக்கலாம்.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பல்வேறு மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் கருணா அம்மானுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியாலோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாகவோ மன்னிப்பு வழங்கப்படிருக்க வில்லை.  எனவே அவர் இன்னும் மனிதப் படுகொலைக்கு பொறுப்பு கூற வேண்டிய பயங்கரவாதியாகவே கருதப்படுகிறார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உண்மையில் நாட்டை நேசிப்பவரா? இல்லையா ?  என்பதை இந்த சந்தர்ப்பத்தில் பரிசீலிக்க முடியும்.

இது போன்ற பாவச் செயல்களில் ஈடுபட்ட கருணா அம்மான்  வாக்குமூலளித்த பின்னர் சுதந்திரமாக வீட்டுக்குச் செல்வாராயின் நாட்டில் சட்ட கட்டமைப்பு சீரழிக்கப்பட்டுள்ளதன்  வெளிப்பாடகவே அமையும்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தேர்தல் பிரசார மேடைகளில் கருணா அம்மானை நியாயப்படுத்தி அவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.  அவ்வாறெனில் அறந்தலாவையில் பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்டமை , தளாதா மாளிகை மீது குண்டு தாக்குதல் . ஜயஸ்ரீ மகா விகாரை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை போன்ற சம்பவங்களையும் இவ்வாறு தான் நியாயப்படுத்துவார்கள்.

ஏற்கனவே நாம் கூறியதைப் போன்று இதுவே இந்த அரசாங்கத்தின் இரு முகங்களாகும். தேவையான சந்தர்ப்பத்தில் கருணா அம்மானுடைய கருத்தினை நியாயப்படுத்துவார்கள். மறுபுறம் தெற்கில் சென்று தேர்தல பிரசாரங்களை முன்னெடுக்கும் போது இதனை விமர்சிப்பார்கள் என்றார்.