பரந்துபட்ட இவ்வுலகில் மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. பிறந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்பது நியதியாகும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தாம் இறந்த பின்பும் மக்களின் மனதில் நிலைத்து இவ்வுலகில் என்றும் வாழ்வார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை மரணம் என்றும் வென்றுவிட முடியாது. 

Image may contain: 3 people, people standing, child and outdoor

அந்த வரிசையில் மிக முக்கியமானவர் தமிழ் மக்களின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலித்து இறுதியில் தமிழ் மக்களின் நீதிக்காக தன் உயிரையும் தியாகம் செய்த "மாமனிதர் நடராஜா ரவிராஜ்" அவர்கள் அந்த வகையில் மாமனிதரின் சில குறிப்புகளையும் அவர் இறந்த பின்பு இன்றைய காலகட்டத்தில் அரசியலில் பிரவேசிக்கும் அவரது மனைவி திருமதி சசிகலா அவர் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 மாமனிதர்  பிறப்பு மற்றும் கல்வி

யாழ் மாவட்டத்தின் தென்மராட்சி பிரதேசத்தில் சகல வளங்களும் கொழிக்கும் சாவகச்சேரி பிரதேசத்தில்  மாமனிதர் ரவிராஜ் அவர்கள் பிறந்தார். மாமனிதர் அவர்களின் பெற்றோர்கள் இருவரும் ஊரிலேயே மதிப்புமிக்க ஆசிரியர்கள் .

இவர் தனது பாடசாலைக்  காலத்திலிருந்து கல்வி ,ஒழுக்கம் என்பவற்றில் முதன்மை பெற்று விளங்கியதுடன் தன் கண் முன்னே நிகழ்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டவும் தவறுவதில்லை. தவறுகளைக் கண்டால் கொதித்தெழும் மனப்பாங்கு அவரது உதிரத்தில் ஊறிய ஒன்று ஆகும். 

இறை பக்தியிலும், தொண்டுகள் செய்வதிலும்  முதன்மையானவராக திகழ்ந்தவர்  மாமனிதர் என்பதை அவரை நன்கு அறிந்தவர்கள் அடிக்கடி கூறுவார்கள். பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த பின்னர் சட்டக்கல்லூரியில் முதன்மை சட்ட மாணவனாக திகழ்ந்தார். 

சட்டத்தரணியாக வெளிவந்து "ரவிரஜ் அசோசியேட்ஸ்" நிறுவனத்தை ஸ்தாபித்து பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளை எதிர்த்து வாதிட்டதுடன் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார். மாமனிதர் சட்டத்தரணியாக தொடர்ந்திருந்தால் இன்று ஒரு முதன்மை நீதவானாக திகழ்ந்திருப்பார். 

ஆனால் அவரது எண்ணம் முழுவதும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் அவர்களது சுகமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதிலும், உறவுகளுக்காக ஒரு சுமூகமான நீதியைப் பெற்றுக் கொடுப்பதிலும் இருந்தது. ஆகவே தன் உறவுகளுக்கான பிரச்சனைகளை தீர்ப்பதில் பெரும் பங்களிப்பை  ஆற்றியிருந்தார்.

விசேட ஜூரி சபையின் முன் விசாரணைக்கு ...

இன்னும் சற்று ஒருபடி மேலாக மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார்.  ஊடகங்கள் மூலமாகவும், நேரடியாகவும் எம் மக்கள் பிரச்சனைகளை தனது மும்மொழி பேச்சுத் திறனால்  எல்லோருக்கும் தெரியப்படுத்தினார்.

நாடே இவரது வல்லமையைக் கண்டு திகைத்து நின்றது. பாராளுமன்றத்தில் இவர் மேல் தொடுக்கப்பட்ட  கேள்விகளுக்கு தன்  மும்மொழிப்புலமையால் எறிகணை போல் பதில் வழங்கினார். தன் சொந்த விருப்பு, வெறுப்பிற்கு அப்பால் எம் மக்களின் நலனுக்காய் செயற்பட்டார்.

      "கடமை நினைவுந் தொலைத்திங்கு

        களியுற் றென்றும் வாழ்குவமே"

என்ற பாரதியின் கூற்றுக்கமைய தன் கடமையை உணர்ந்து தன் இலட்சியத்தை அடைய எவ் எல்லையையும் அடைய தயாராக செயற்பட்டார்.

ரவிராஜ் படுகொலை விவகாரம்: சந்தேக ...

அழகான குடும்பம், அருமையான மனைவி, அன்பான பிள்ளைகள் என்று இனிமையான இவரது இல்லற வாழ்க்கையில் இவர் தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவும், தன் மனைவிக்கு அருமையான ஒரு கணவராகவும், தன் தாய் தந்தையருக்கு பார் போற்றும் மகனாகவும்  திகழ்ந்தார் .அன்று கயவர்கள் பறித்தது மாமனிதரின் உயிரை மட்டும் அல்ல.

ஒரு மாபெரும் குடும்ப விருட்சத்தின்  ஆணிவேரையே ஆகும். தனது சொந்த மண்ணின் மீது அலாதியான பற்று கொண்ட மாமனிதர் அவர்கள் இறுதியாக  சாவகச்சேரி வந்து மீண்டும் கொழும்பு சென்றபோது சாவகச்சேரி மக்களிடம் இறுதியாக சொல்லிய வாசகம் இதுதான் "நான் மீண்டும் வரும்போது எனது உலர்உணவு அட்டையை என்னிடம் தாருங்கள் நானும் சாவகச்சேரி கிளை ஒன்றில் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று பொருட்களை வாங்க வேண்டும்"என்பதே ஆகும். ஆனால் அதற்கு பிறகு அவர் வரவில்லை: அவரது உடல் மட்டுமே இம் மண்ணை வந்தடைந்தது.

"விதைத்தவன் உறங்கலாம் ஆனால் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை"  என்பது  புரட்சித் தலைவர்  "சே குவேரா" அவர்கள் கூறிய கருத்தை மெய்ப்பிப்பது போல்  மாமனிதர் அவர்கள்  கண்ட  கனவை நனவாக்க அவரது மனைவி திருமதி "ரவிராஜ்  சசிகலா" அவர்கள் அரசியல் களம் பிரவேசிக்கிறார். 

பெற்றோருக்கு நல் மகளாகவும், கணவணுக்கு      நல்மனைவியாகவும், பிள்ளைகளுக்கு நல் தாயாகவும் வெற்றி கண்ட அம்மையார் அவர்கள் அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கின்றார். யுத்த சூழ்நிலையில் எம் மக்கள் பல இடர்களை  எதிர் கொண்ட நிலையில் மாமனிதரின் தியாகம் மிக்க வாழ்வு முடிவுக்கு வந்தது. 

அது போல் தற்கால தொற்று இடருக்குள் எம்மக்கள் பரிதவிக்கும் வேளையில் அம்மையாரின் அரசியல் பயணம் ஆரம்பமாகின்றது. மாமனிதரின் வேட்கையை அடியொற்றி ஆரம்பமாகியுள்ள அரசியல் பயணத்தின் பிரதிபலிப்புக்கள் காலத்தின் கைகளிலேயே!

தொகுப்பு - சுன்னைநகர்.பா.திவாகரன்