(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்தஞாயிறுதின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதன் ஊடாக அவருக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பதை அவதானித்த கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க, கடந்த 18 ஆம் திகதி, ஹிஜாஸை நேற்றைய தினத்தில்  அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்  செய்யுமாறு விடுத்த உத்தரவை இரத்து செய்தார். அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற முறைப்பாட்டாளர்  தரப்பான சி.ஐ.டி. மற்றும் சட்ட மா அதிபர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும்  கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று நிராகரித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை  நேற்று 24 ஆம் திகதி கோட்டை நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர் செய்யுமாறு, கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க கடந்த ஜூன் 18 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த  நிலையில், அது தொடர்பில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

 இதன்போது, இதுவரை  சந்தேக நபராக பெயரிடப்படாத, சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், ரணிலா சேனாதீர, சஞ்சீவ, ஹசான் நவரத்ன பண்டார ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார ஆஜரானார்.

 அவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவது தொடர்பில் ஆட்சேபங்கள் உள்ளதாக கோரி மன்றில் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி, அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டார்.

 இதன்போது முறைப்பாட்டாளர்  தரப்பில் விசாரணையாளர்களான  உதவி பொலிஸ் அத்தியட்சகர் விஜேகோன், பொலிஸ் பரிசோதகர் மாரப்பன,  பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன ஆகியோருடன்  சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகமவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸும் மன்றில் பிரசன்னமாகினர்.

 இதனைவிட, அடையாள  அணிவகுப்பில் சாட்சியம் அளிக்க  அழைக்கப்பட்டிருந்த , புத்தளம் அல் சுஹாரியா மத்ரஸாவில் கல்வி பயின்றதாக கூறப்படும் 10 மாணவர்களில் மூவரின் ( மொஹம்மட் ஆகில், மொஹம்மட் ரம்சின், மொஹம்மட் இம்ரான்) உரிமைகள் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி நுவன் போப்பகே மன்றில் பிரசன்னமானார்.

 இவ்வாறான நிலையிலேயே, அடையாள அணிவகுப்புக்கு எதிராக , அதனை ஆட்சேபித்து ஜனாதிபதி சட்டத்தரணி நவரத்ன பண்டார  வாதங்களை முன்வைத்தார். 'கடந்த 18 ஆம் திகதி  ஹிஜாச் ஹிஸ்புல்லாஹ்வை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவு இம்மன்றினால், முறைப்பாட்டாளர் தரப்பு கோரிக்கைக்கு அமைய பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்னைய தினம்  இந்த விவகாரம் விசாரணைக்கு வந்த போது, அது தொடர்பில் சி.ஐ.டி. எதனையும் கூறவில்லை. அது பர்வாயில்லை.

எனினும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய சித்தார்த்தங்கள் சட்டத்தில் மிகத் தெளிவாக உள்ளது.

 உண்மையில் இந்த வழக்கில் ஹிஜாஸ், குண்டுதாரிக்கு உதவியதாக கூறியே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் அது தொடர்பில் ஒரு துளி சாட்சியம் கூட இல்லை. இந் நிலையில் தற்போது மத்ரசாவொன்றில் கற்பிக்கப்பட்டதாக கூறப்படும் ஏதோ விடயங்கள் தொடர்பில் விசாரிப்பதாக கூறுகின்றனர்.

 எவ்வாறாயினும் கடந்த 2019.05.19 ஆம் திகதியே ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், தனது சேவ் த பேர்ள் அமைப்பு தொடர்பில் அனைத்து விடயங்களையும் சி.ஐ.டி.க்கு வாக்குமூலமாக வழங்கியுள்ளார். அவ்வாறான பின்னனியிலேயே,  2020.04.14 அன்று அவர் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டார். இது அரசியல் நோக்கம் கருதிய கைது.

 அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்த இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் ஏற்கனவே ஹிஜாஸை ஊடகங்களில் காட்டியும் சி.ஐ.டி. விசாரணையாளர்கள் புகைப்படம் காட்டியும் அறிமுகம் செய்துவிட்டார்கள்.

 விசாரணைகளை முன்னெடுக்கும் போது, வாக்கு மூலங்களைப் பதிவு செய்யும் போது ஹிஜாஸின் புகைப்படத்தைக்  காட்டியதாக சி.ஐ.டி.யினரே இம்மன்றில்  சமர்ப்பித்துள்ள மேலதிக விசாரணை அறிக்கைகளில் தெளிவாக கூறியுள்ளனர்.

 ராணி எதிர் சிவநாதன் வழக்கில்  அடையாள அணிவகுப்பு தொடர்பிலான அடிப்படை சித்தார்ந்தங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன. இதனைவிட  ரொஷான் எதிர் சட்ட மா அதிபர் அவ்வழக்கில் , சம்பவம் இடம்பெற்று 50 நாட்களுக்குள்  அடையாள அணிவகுப்பொன்று நடாத்தப்படல் வேண்டும் என மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.  புகைப்படங்களைக் காட்டி, சாட்சியாளர்களை தயார்படுத்திய பின்னர் இங்கு அடையாள அணிவகுப்பு நடாத்தப்படுவதன் நோக்கம் என்ன?

  குறித்த சார்ட்சியாளர்களில் மூவர் உயர் நீதிமன்ரில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல்ச் செய்துள்ளனர்.  அம்மனுக்களில் இணைக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசிகளில், தாம் புகைப்படங்கள் காட்டப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக அவர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.

 எனவே இங்கு சி.ஐ.டி. குற்றவியல் சட்டத்தின் 124 ஆவது அத்தியாயத்தின் நீதிவானுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மறைமுகமாக மோசடியாக பயன்படுத்த முயற்சிக்கின்றது.

 கடந்த 18 ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி ஒன்று 6 நிமிடங்கள் 55 செக்கன்கள் ஹிஜாஸின் புகைப்படத்தைக் காட்டி செய்தி ஒளிபரப்பியது. அதில் சாட்சியாளர்கள் கூறியதாக கூறப்படும் வாக்குமூலங்களும் ஒளிபரப்பப்பட்டன. அப்படியாயின்  ஹிஜாஸை ஊடகங்கள் வாயிலாகவும் அடையாளம் காட்டிவிட்டு எதற்காக இந்த அடையாள அணிவகுப்பு? இதனூடாக சி.ஐ.டி.யும் சட்ட மா அதிபரும்  பயங்கரவாததடை சட்டத்தின் 18 ஆம்  அத்தியாயத்தின் கீழ் படு பயங்கரமான குற்றச்சாட்டை எம்மீது சுமத்த முற்படுகின்றனர் என்ற நியாயமான பயம் எமக்கு  உள்ளது.' என வாதிட்டார்.

 இதன்போது மூன்று சாட்சியளர்களான சிறார்கள் தொடர்பில் ஆஜரான சட்டத்தரனி நுவன் போப்பகே,  ' 2020.04.26 முதல் 30 ஆம் திகதிவரை இந்த சிறுவர்கள் வீட்டிலும் சி.ஐ.டி.யிலும் வைத்து பல்வேறு வகையில் விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கு புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். வெறும் தாள்களில் கையெழுத்து பெறப்பட்டுள்ளன.  சி.ஐ.டி.யின் இந்த செயற்பாட்டை சவாலுக்கு உட்படுத்தி நாம் உயர் நீதிமன்றில்  அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளோம்.

 இன்று காலை கூட ஒரு சி.ஐ.டி. அதிகாரி சிறுவனின் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களை வாபஸ் பெறுமாறு அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பில் நாம் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்கள்  பாதுகாப்பு பொலிச் பிரிவில் முறையிட்டுள்ளோம்.

 உயர் நீதிமன்றில் நாம் சவாலுக்கு உட்படுத்தியுள்ள விடயத்தை, சட்ட ரீதியாக தாம் செய்ததாக காட்டவே இந்த அடையாள அணிவகுப்பு தொடர்பிலான நாடகத்தை சி.ஐ.டி. அரங்கேற்றுகின்றது. எனவேதான்  இந்த அடையாள அணிவகுப்பை சாட்சியாளர்கள் தரப்பில் நாம் எதிர்க்கின்றோம்.' என்றார்.

இதனையடுத்து பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், மன்றுக்கு விடயங்களை முன்வைத்து, அனைத்து தரப்பினருக்கும் நியாயம் கிடைப்பதற்காகவே அடையாள அணிவகுப்பை நடாத்தக் கோருவதாக தெரிவித்தார். அத்துடன் சாட்சியாளர்களான சிறுவர்கள் எதேனும் ஒரு தரப்பால் அச்சுறுத்தப்பட்டுள்ளனரா என, நீதிவான் தனிப்பட்ட ரீதியில் அவர்களை அனுகி விசாரித்து தீர்மானிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

 இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸுக்கும், ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டாரவுக்கும் இடையில் சூடான வாதப் பிரதிவாதங்கள், கருத்துப் பறிமாறல்கள் இடம்பெற்றன.

 ஒரு கட்டத்தில், சி.ஐ.டி.யிடமும், தற்போதைய சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இருந்தும் நியாயத்தை எதிர்ப்பார்ப்பது விபச்சாரியிடம் கன்னித் தன்மையை எதிர்ப்பார்ப்பதைப் போன்றது என ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார கூறினார்.

 இந்நிலையில் மிக சூடாக வாதங்களுக்கிடையே, பிரதி சொலிசிட்டர் ஜெனரால்  திலீப பீரிஸ், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், சஹ்ரானை மிஞ்சிய, அவருக்கு மேல் இருந்து செயற்பட்ட நபர் என மன்றுக்கு தெரிவிப்பதாக கூறினார். எனினும் அதன்போது சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாச் ஹிஸ்புல்லாஹ் தரப்பு சட்டத்தரணிகள் அதற்கான ஆதாரங்களை கோரிய போதும் அதனை முன்வைக்க முறைப்பாட்டாளர் தரப்பு முன்வரவில்லை.

 இந்நிலையில்  வாதப் பிரதிவாதங்களை நிறைவுக்கு கொண்டுவந்த கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க தனது தீர்மானத்தை அறிவித்தார். அதன்படியே, கடந்த 18 ஆம் திகதி தன்னால் பிறப்பிக்கப்பட்ட அடையாள அணிவகுப்பு உத்தரவை இரத்து செய்த அவர், அடையாள அணிவகுப்பு நடாத்தப்பட்டால் அதனால் முறைப்பாட்டாளர் தரப்பை விட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அதிகமாக பாதிக்கப்படுவார் என தெளிவாவதால், குறித்த கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்தார். இது குறித்த வழக்கு மீள எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.