(எம்.மனோசித்ரா)

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவது சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமையல்ல. ஆனால் வாக்களிக்கும் போது மிகுந்த பொறுப்புடன் செயற்படுமாறு மக்களை அறிவுறுத்துகின்றோம். வழமையைப் போன்றல்லாமல் இம்முறை புதியதொரு வழமையான சூழலில் ( New Normality ) தேர்தல் நடைபெறப் போகிறது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 650 - 700 கோடி செலவாகும் என்று ஆரம்பத்தில் கணிப்பிட்டப்பட்ட போதிலும் தற்போதைய நிலைமையில் 1000 கோடிக்குள் தேர்தலை நடத்த முடியுமானால் அதனை நாம் பெற்ற பெறும் வெற்றியாகக் கருதுவோம்.

செலவுகள் அதிகரித்துள்ளமையை யாரும் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. உலகிலேயே மிகப் பெறுமதியானது ஜனநாயகமாகும். சர்வாதிகாரத்தை குறைந்த இலாபத்தில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஜனநாயகம் அவ்வாறானதல்ல என்றும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் தெளிவுபடுத்தும் இதனைத் தெரிவித்த அவர் அதன் போது கூறிய விடயங்கள் வருமாறு :

தேர்தல் செலவுகள்

650 - 700 கோடி ரூபா செலவாகும் என்று ஆரம்பத்தில் கணிப்பிடப்பட்டது. 1000 கோடிக்கும் குறைவான செலவில் தேர்தலை நடத்த முடியுமாக இருந்தால் அதனை நாம் பெற்ற பெறும் வெற்றியாகக் கருதுவோம். ஆனால் 1000 கோடி மேலும் 100 அல்லது 200 கோடிகளால் அதிகரிக்குமா என்று யாராலும் கூற முடியாது. செனிடைசர்களுக்கு மாத்திரம் சுமார் 100 கோடி செலவாகும் என்று கூற முடியுமா ? வாக்களர்களுக்கு செனிடைசர்களை வழங்குவதற்கு மாத்திரம் 3 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டியிருக்கிறது. வாக்குகளை எவ்வாறு எண்ணுவது ?

செலவுகள் அதிகரித்துள்ள என்பதற்காக யாரும் தவறாக எண்ணத் தேவையில்லை. ஜனநாயகம் குறைந்த இலாபத்தில் பெற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது உலகிலேயே மிக முக்கியத்துவமுடையது.  அர்ப்பணிப்பு , கண்ணீர் , வேதனை , இரத்தம் , மரணம், துப்பாக்கிச் சூடு , குண்டு தாக்குதல் , ஆயுதங்கள் , சிறை தண்டனை என்பவற்றின் மூலமே மனிதனால் ஜனநாயகம் பெற்றுக் கொள்ளப்பட்டது.

எனவே இது மிகப் பெறுமதியானதாகும். சர்வாதிகாரத்தை மாத்திரமே குறைந்த செலவில் பெற்றுக் கொள்ள முடியும். அதன் பெறுமதி மிகக் குறைவானதாகும். ஜனநாயகம் இல்லாமல் போகும் சந்தர்ப்பங்களிலேயே அதன் அருமை அறியப்படும். எனவே பெறுமதியில் கூடிய ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்வதற்கு பாராளுமன்றத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.

சட்டத்தை செயற்படுத்தும் பலம் அரசியலமைப்பினால் பாராளுமன்றத்திடமே வழங்கப்பட்டுள்ளது. அதனைக் கைவிட முடியாது. எவ்வாறேனும் பொதுத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்றில்லாமல் சுதந்திரமாகவும் அமைதியாகவும் ஒழுக்க விதிமுறைகளுடன் மற்றும் நம்பகத்தன்மையுடன் சுகாதார பாதுகாப்புடன் நடத்தி முடிப்போம்.

பிரசார நடவடிக்கைகள்

பிரசார நடவடிக்கைகள் பற்றியே தற்போது பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. 2005 ஆம் ஆண்டு முதல் இறுதியாக நடைபெற்ற              தேர்தல் வரை சட்டம் எவ்வாறு காணப்பட்டாலும் கட்சி அலுவலகங்களில் வேட்பாளர்களது பெயர் மற்றும் விருப்பு இலக்கம் கொண்ட பதாதைககள் காட்சிப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாவட்ட தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தொடர்ச்சியாக அரசியல்வாதிகளிடமும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

சட்டத்தின் பிரகாரம் புகைப்படத்துடனான பதாதைகளை காட்சிப்படுத்த முடியாது. எனவே தான் இம்முறை ஆணைக்குழு தீர்க்கமான முடிவொன்றை எடுத்துள்ளது. சட்டத்தின் அடிப்படையில் புகைப்படங்களுடன் கூடிய பதாதைகளை காட்சிப்படுத்த முடியாது என்பதில் ஆணைக்குழு உறுதியாகவுள்ளது. அதற்கு தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சி அலுவலகங்களில் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் என்பவற்றை காட்சிப்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுயாதீன குழுக்களுக்கும் இதற்கான வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கான மாற்று தீர்வு

இவ்வாறு புகைப்படம் மற்றும் விருப்பு இலக்கம் என்பனவுடனான பதாதைகளை காட்சிப்படுத்தாவிட்டால் எவ்வாறு தம்மை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவது ? தமது விருப்பு இலக்கங்களை எவ்வாறு அவர்களுக்கு தெரியப்படுத்துவது ? என்ற சிக்கல் வேட்பாளர்களுக்கு ஏற்படும். தொலைக்காட்சிகளில் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு புதிய வேட்பாளர்களுக்கு நிதிச் சிக்கல் இருப்பதாகக் கூறுகின்றனர்.

அவ்வாறான வேட்பாளர்களுக்கு சிறிய கிராம மட்டத்திலான மக்கள் சந்திப்புக்களை நடத்த முடியும். நூற்றுக்கு மேற்படாத ஆதரவாளர்களைக் கொண்ட கூட்டங்களை நடத்த முடியும். அதன் போது துண்டுபிரசுரங்களையும் வழங்க முடியும். கூட்டங்களை நடத்தும் இடங்களில் பதாதைகளை காட்சிப்படுத்த முடியும்.

அத்தோடு வேட்பாளரொருவர் செல்லும் வாகனத்தில் சிறிய கொடியினை பறக்கவிட முடியும். ஸ்டிக்கர்களை ஒட்ட முடியும். இவ்வாறு கூறும் போது பெரிய பஸ்களில் கொடியினை பறக்க விட முடியும் என்றும் ஸ்டிக்கர்களை ஒட்ட முடியும் என்று சிலர் எண்ணக்கூடும். தேர்தல் சட்டத்தின் கீழ் எம்மால் அதனை தடை செய்ய முடியாது. ஆனால் போக்குவரத்து சட்டத்தின் கீழ் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்ய முடியும். பஸ்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் அவற்றை அகற்றும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு.

வேட்பாளர் செல்லும் ஒரேயொரு வாகனத்தில் மாத்திரமே இலக்கம் கொண்ட கொடியை பறக்கவிட முடியும் என்பதை வேட்பாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். வேட்பாளருடன் மேலதிகமாக ஒன்று அல்லது இரண்டு வாகனங்கள் மாத்திரமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அவற்றை விட அதிக வாகனங்கள் ஒன்றாகச் சென்றால் அது வாகன பேரணியைப் போன்றாகிவிடும். அதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

பிரசார கூட்டத்தை நடத்தும் தினத்தன்று குறித்த பிரதேசத்தில் பதாதைகளை காட்சிப்படுத்திவிட்டு கூட்டம் நிறைவடைந்தவுடன் அதனை அகற்றிவிட வேண்டும். சிறிய மக்கள் சந்திப்புக்களாக இருந்தாலும் சுகாதார மற்றும் பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைகள் நிச்சயம் பின்பற்றப்பட வேண்டும். ஒலி பெருக்கிகள் பாவிப்பதாக இருந்தால் அதற்கு பொலிஸாரிடம் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

சிறிய கூட்டங்களை நடத்தும் போது ஒலி பெருக்கிகள் தேவைப்படாது. ஆனாலும் எவ்வாறான கூட்டங்கள் நடத்தப்பட்டாலும் பொலிஸாருக்கும் , பொது சுகாதார பரிசோதகர்களுக்கும், சுகாதார வைத்திய அதிகாரிகளும் கட்டாயமாக அறிவிக்கப்பட வேண்டும். காரணம் இவை தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவையாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு ஆலோசனை வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் கூட்டங்களை நடத்துதல்

வீடுகளானாலும் வெளியிலானாலும் அரசியல் கூட்டங்கள் நடத்தப்படும் போதும் காய்ச்சல் அல்லது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். கூட்டங்களை ஏற்பாடு செய்யும் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்திற்கு வருகை தருபவர்கள் பற்றிய தகவல்களை பேண வேண்டும். காரணம் யாரேனுமொருவருக்கு எதிர்பாராத விதமாக தொற்று ஏற்பட்டிருந்தால் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களைப் பற்றி தேட வேண்டும். கொரியாவில் 31 ஆவது நோயாளியிடமிருந்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு வைரஸ் பரவியிருந்ததை நினைவுபடுத்துகின்றேன். இதன் காரணமாகவே பாரிய கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று நாம் வலியுறுத்துகின்றோம்.

உதாரணமாக காலி முகத்திடலில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்தால் பெருமளவான ஆதரவாளர்கள் செல்ல முடியும். ஆனால் ஏன் 100 என்று வரையறுக்கப்பட்டுள்ளது ? அதனை மீறி ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூட்டப்பட்டால் அவர்களில் ஒருவருக்கு தொற்று காணப்பட்டாலும் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டியேற்படும். அவ்வாறு 1000 பேரை தனிமைப்படுத்த முடியுமா ?

பாரிய கூட்டங்கள் பற்றி சுகாதாரத்துறை தீர்மானிக்கும்

கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் விசாலமான இடங்களில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்கு மாத்திரம் 500 பேர் கலந்து கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு அரசியல் கட்சிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் தீர்மானிக்கவில்லை. இதனைத் தீர்மானிக்கும் பொறுப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவிடமே காணப்படுகிறது. சுகாதாரத்துறை பற்றி நாம் எதுவுமே கூறப் போவதில்லை.

பாதுகாப்பு

வடக்கிலும் புத்தளம் மாவட்டத்திலும் கடினமான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு மாத்திரமே பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. கடற்படையினர் இந்த சேவையில் உள்வாங்கப்படுவர். விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தியும் பயன்படுத்தப்படும். திடீர் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு படையினரின் உதவி பெற்றுக் கொள்ளப்படும். அவை தவிர வேறு தேர்தல் நடவடிக்கைகளுக்கு அவர்களை நாம் உள்வாங்கவில்லை.

தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு படை, பொலிஸாரின் ஒத்துழைப்பு மாத்திரமே பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. காரணம் தேர்தல் என்பது சிவில் செயற்பாடாகும். பொலிஸார் சிவில் குழுவினராவார். எனவே இராணுவம் , கடற்படை, விமானப்படை இவற்றில் இணைத்து;க கொள்ளப்படவில்லை. அதற்காக முப்படைகளின் சேவை அநாவசியமானது என்று கூறவில்லை. அவசர தேவைகள் ஏற்பட்டால் அவர்களின் உதவி நாடப்படும்.

கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா?

அவ்வாறான பிரச்சினை இதுவரையில் ஏற்படவில்லை. தேர்தலுக்கு முன்னர் கொரோனா இரண்டாம் அலை ஏற்படும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக இரண்டாம் அலை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வதென்பதை அந்த சந்தர்ப்பத்திலேயே தீர்மானிக்க வேண்டும். அநாவசியமாக மக்களையும் அரச அதிகாரிகளையும் அச்சத்திற்குள்ளாக்கத் தேவையில்லை.

அரச அதிகாரிகள் அரசயலில் ஈடுபடுகின்றார்களா ?

அரச அதிகாரிகளில் அரசியல் உரிமைகளுடையவர்கள் உள்ளனர். அவ்வாறானவர்களுக்கு கூட அவர்கள் பணிபுரியும் காரியாலயங்களுக்கு வெளியிலேயே அரசியலில் ஈடுபட முடியும். அரசியல் உரிமைகள் அற்ற அதிபர்கள் , கிராம சேவகர்கள் , இராணுவ அதிகாரிகள் , பொலிஸ் அதிகாரிகள் , வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் போன்றவர்களை அழைத்து அரசியல் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டால் அது சட்ட ரீதியான நடவடிக்கை அல்ல.

அவ்வாறான நடவடிக்கைகள் பற்றி எமக்கு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் பற்றி ஆராயப்படும். இவ்வாறான முறைப்பாடொன்று ஏற்கனவே கிடைக் பெற்றுள்ளது. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் அல்லது வேறு நபர்களை அழைத்து இரவு விருந்துபசாரம் வழங்குதல் அல்லது மதுபானங்களை வழங்குதல் போன்றவை முன்னெடுக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தல் சட்டத்தின் கீழ் இது குற்றமாகும்.

வேட்பாளரொருவர் அவரது இல்லத்திலோ அல்லது உற்வச மண்டபங்களில் கூட்டங்களை நடத்துவது தவறென்று நாம் கூறவில்லை. ஆனால் வாக்குகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு இவ்வாறு செயற்படுவது தவறாகும். அதே போன்று கிராமபுறங்களுக்குச் சென்று மக்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இன்னமும் மக்கள் அவற்றுக்கு ஏமாறுகின்றனரா என்பது எமக்குத் தெரியாது. அதே போன்று அரச அதிகாரிகளுக்கு முக்கிய பொருட்கள் பல பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. பொதுமக்களிடமிருந்தே இந்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. இவை தொடர்பில் ஆணைக்குழு கடும் நடவடிக்கை எடுப்பதற்கு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணைக்குழுவை ஏமாற்றுவதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு எண்ணி செயற்படுபவர்கள் தாமே தம்மை ஏமாற்றிக் கொள்கின்றனர்.

பக்க சார்பான ஊடகங்கள்

பதாதைகள் சுவரொட்டிகள் வைக்கப்படக் கூடாது என்று எம்மால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் நாம் ஓய்வான நேரங்களில் தொலைக்காட்சி முன் அமரும் வேளைகளில் தொடர்ச்சியாக பக்க சார்பாக செயற்படும் ஊடகங்களையே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இது தேர்தல் மோசடி என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இவ்வாறு செயற்பட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் ஊடகங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். கடைசி மாதத்திலேனும் இதனை ஒரு ஒழுங்குமுறைக்கு கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

ஆனால் தேர்தல் ஆணைக்குழு ஊடகங்களுக்கு விரோதியல்ல.  ஊடகங்கள் என்பது எமது செயற்பாடுகளில் பங்கேற்கும் ஒரு முக்கிய பங்காளியாகும். நீதியானதும் அமைதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அவர்களது பக்கசார்ப்பற்ற ஒத்துழைப்பு எமக்கு அத்தியாவசியமானதாகும்.

குறித்தவொரு நபருக்கு வாக்களியுங்கள் என்று ஆணைக்குழுவால் மக்களை வலியுறுத்த முடியாது. ஆனால் வாக்களிக்கும் போது பொறுப்புடன் செயற்படுமாறு மக்களை வலியுறுத்துகின்றோம். யாரேனுமொரு வேட்பாளரைக் குறிப்பிட்டு அவரது செயற்பாடுகளை விமர்சிப்பதோ அல்லது அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ எமது கடமையல்ல.   ஏதேனுமொரு அரசியல்வாதிகள், கட்சிகள் அல்லது சுயாதீன குழுக்கள் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றினால் எமக்கு தேர்தலை நடத்துவது இலகுவாகும். மக்களிடமும் அதிகாரிகளிடமும் ஊடகங்களிடமும் இதே ஒத்துழைப்பை வழங்குமாறு நாம் கோருகின்றோம்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வழமையைப் போன்றல்லாமல் இம்முறை வாக்கெடுப்பு வித்தியாசமாகவே நடைபெறும். முகக்கவசங்களை அணிந்திருத்தல் , அடிக்கடி கைகளைக் கழுவுதல் என்பவற்றை தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மாத்திரமின்றி வாக்காளர்களும் அவசியம் பின்பற்ற வேண்டும். இவை உள்ளிட்ட ஏனைய பல விடயங்களை உள்ளடக்கியே அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டன. வாக்கெண்னும் ஒத்திகைகளும் நடத்தப்பட்டுள்ளன.

ஒரே அளவான வாக்குச்சீட்டுக்கள் உள்ள மாவட்டங்களுக்கு பொதுவாக ஒத்திகைகள் இடம்பெற்றன. அதற்கமைய பொலன்னறுவை , கேகாலை என்பவற்றுக்கு ஒன்றாகவும் , இரத்தினபுரி, குருணாகல் , மாத்தளை, அநுராதபுரம் ஒரே அளவிலான வாக்குச் சீட்டுக்களைக் கொண்டவை. மொனராகலை , நுவரெலியா, திருகோணமலை அல்லது பதுளை ஒரே அளவானவை. மட்டக்களப்பு , அம்பாறை , வவுனியா , கொழும்பு என்பவை ஒவ்வொன்றும் தனிப்பட்டவையாகும். முன்னர் அம்பாறை மாவட்டத்துக்கான வாக்குச்சீட்டு மாத்திரதே இரு நிரல்களைக் கொண்டிருந்தது. ஆனால் இம்முறை மட்டக்களப்பு , வவுனியா , கொழும்பு என்பவற்றின் வாக்குச்சீட்டுக்களும் இரு நிரல்களைக் கொண்டுள்ளன. கண்டி, யாழ்ப்பாணம் , கம்பஹா போன்ற மாவட்டங்கள் வெவ்வேறு அளவான வாக்குச்சீட்டுக்களைக் கொண்டவை.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு வாக்கெண்னும் ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையின் போது நேரம் கணிப்பிடப்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மத்தியில் வாக்காளர்களதும் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளினதும் அச்சத்தையும் நீக்க வேண்டும்.

வாக்கெண்ணும் பணிகள்

தேர்தல் தினத்தன்தே வாக்கெண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்படும். எனினும் அதனை ஆரம்பிக்கும் நேரம் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. எமக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய 20 × 20 அடி அறையில் 10 அதிகாரிகளை மாத்திரமே இருத்த முடியும். அவ்வாறெனில் பெரிய அறைகளுக்குச் செல்ல வேண்டும். கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்றுக் கொண்ட முடிவுகளை அன்றைய தினம் இரவே வழங்க முடியும்.

விருப்பு வாக்குகளையும் அதனுடனேயே எண்ணுவதா அல்லது பின்னர் எண்ணுவதா என்பது தொடர்பில் இன்னும் கலந்துரையாடல்களே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாக்குகள் எண்ணும் நேரம் , அது நிறைவடைந்தவுடனேயே விருப்பு வாக்குகளை எண்ணுவதை ஆரம்பிப்பதா என்று பின்னர் தீர்மானிக்கப்படும். ஆனால் வாக்கெடுப்பு பற்றிய சுற்று நிரூபம் தயாரிக்கப்பட்டுவிட்டது.

வாக்கெடுப்பு நிலையங்களின் செயற்பாடுகள்

தேசிய அடையாள அட்டையை பரிசோதிக்கும் அதிகாரி வாக்குச்சீட்டினையும் பெற்றுக் கொள்வார். வாக்காளரிடம் தேசிய அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறுவோம் அல்லது டிசு கடதாசியைக் கொண்டு கையில் வாங்கி அடையாள அட்டை இலக்கம் பரிசோதிக்கப்படும். முதலாவது அதிகாரி பெயரைக் கூறுவார். மூன்றாவது அதிகாரியே கையில் மையிடுவார். இதற்கிடையில் செனிடைஸர் வழங்கப்படும்.

முகக்கவசத்தை நீக்கி வாக்காளர் தம்மை அடையாளப்படுத்திய பின்னர் மீண்டும் செனிடைசர் வழங்கப்படும். வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னாள் கைகளை கழுவுவதற்கான வசதிகள் காணப்படின் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். அவ்வாறில்லை என்றால் வரிசையில் நிற்கும் போது செனிடைசர் வழங்கப்படும். விரலுக்கு மையிடும் போது வழமையைப் போன்று நிறப் பேனை பயன்படுத்தப்படமாட்டாது. ஆனால் வேறு முறையில் நிச்சயம் மையிடப்படும். காரணம் வாக்காளரது விரலில் மையிடப்பட வேண்டும் என்பது சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் அதனை எம்மால் கைவிட முடியாது.

' கொவிட்-19 க்கு தோல்வி - மக்கள் ஜனநாயகத்திற்கு வெற்றி '.