தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்த கையோடு அரசியல்வாதிகளின் பிரசார பீரங்கியும் ஒலிக்கத் தொடங்கி விட்டது.

 கொரோனா காரணமாக பிரச்சாரக் கூட்டங்களுக்கு வாய்ப்பில்லாத போதிலும் ஆங்காங்கே மக்கள் சந்திப்பு மூலமும் ஊடக அறிக்கைகள் வாயிலாகவும் அரசியல்வாதிகள் தங்கள் பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றனர்.

இதேவேளை ஒரு சில அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர்களுக்கே பெரும் பாதகமாக மாறி விடுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பொதுவாகவே தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் மக்களுக்கு வாக்குறுதிகளை வாரிவழங்குவதும் பின்னர் அதே போக்கில் மறந்து போவதும் சர்வ சாதாரணமான விடயம்.

அதுமாத்திரமன்றி தேசிய கட்சிகளின் பிரதான வேட்பாளர்கள் கூட மலையகத்தில் ஒரு கதையையும் வடக்கில் ஒரு கதையையும் தெற்கில் ஒரு கதையையும் கூறுவது புதிய விடயமல்ல.

மேலும் வெறுமனே மக்களை உசுப்பேத்தி தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதையும் காணமுடிகின்றது. காலம்காலமாக அரசியல்வாதிகள் கூறும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போவதையையே காணக்கூடியதாக உள்ளது.

கடந்த காலங்களில் பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு மாதாந்தம் ரூபா 1000 சம்பள உயர்வு பெற்றுக் கொடுப்பதாக அடித்து கூறினார்கள். அதே போன்று வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்கள்.

தெற்கில் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்கள். எனினும் இவை எதுவுமே உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை.

இவற்றுக்கு மத்தியில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் முகப்புத்தகங்களிலும் விடுத்து வரும் அறிக்கைகள் ஒரே இரவில் மக்களை மன்னர்களாக ஆக்குவதாக அமைந்திருக்கும்.  இருந்தும் இவை அனைத்தையும் மக்கள் நம்பி விட்டார்கள் என்று அரசியல்வாதிகள் எவரும் கருதுவார்கள் ஆனால் அவர்களைவிட ஏமாந்தவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் 

ஏனெனில் அரசியல்வாதிகளின் போக்குகள் அனைத்தையும் நன்கு அறிந்தவர்களகவே மக்கள் காணப்படுகின்றனர். எவ்வாறு இருந்த போதிலும் நல்லது நடக்குமானால் அது வரவேற்கத்தக்கதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

 இந்த நாட்டின் புரையோடிப்போன தேசிய இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்ததாகும்.

இதேவேளை, பிளவுபடாத நாட்டுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண  மக்களின்  அடிப்படை பிரச்சினைகளுக்கு  தீர்வு  வழங்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 குருநாகல் - நிகவெல  பிரதேசத்தில் இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின்  தேர்தல் பிரசாரக்  கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை  எத்தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் வழங்குவார்.

பல தரப்பட்ட  காரணிகளை அடிப்படையாகக்கொண்டு  நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

பாரிய போராட்டத்திற்கு மத்தியில் 30 வருட கால யுத்தம்  தோற்கடிக்கப்பட்டு நாட்டின் இறையாண்மை பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டை பிளவுபடுத்தாத வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின்  அடிப்படை பிரச்சினைகளுக்கு  தீர்வு வழங்க  தயாராக உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை  குருநாகல்  தலவத்தேகெதர பகுதியில் இடம்பெற்ற மற்றொரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர்,

 இலங்கை  பல்லின  சமூகம் வாழும்  நாடு. ஒரு  மாகாணத்தை ஒரு தரப்பினர் மாத்திரம் உரிமை கொண்டாடுவது தவறானதாகும். தெற்கில் பிறந்தவருக்கும்,   வடக்கில் பிறந்தவருக்கும் சமவுரிமை உண்டு.  

ஒரு  இனத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கி தேசியத்தை கட்டியெழுப்புவது எமது நோக்கமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உண்மையில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு  உரிய தீர்வு முன்வைக்கப்படுமானால், அது மாபெரும் வரலாற்று சாதனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்