⦁ சுமந்திரனின் 'மத்திய பாதை' தீவிரமான நல்லிணக்க அரசியலுடனும், மறுபுறத்தில் தீவிரமான மோதல் அரசியலுடனும் ஒப்பிடும்போது மிகவும் நடைமுறைச் சாத்தியமானதே

-டி.பி.எஸ்.ஜெயராஜ்

மதியாபரணன் ஏப்ரஹாம் சுமந்திரன் 'ஷமுதித்தவுடன் உண்மை' என்ற நிகழ்ச்சிக்கு வழங்கிய யூடியூப் நேர்காணல் அண்மையில் தமிழர் அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியிருந்தது. சிங்களத்திலான அந்த நேர்காணலின் சில கேள்விகளையும், பதில்களையும் வடபகுதி அரசியல்வாதி ஒருவருக்கு நெருக்கமானதென்று கூறப்படுகின்ற தமிழ்த் தொலைக்காட்சியொன்று தெரிந்தெடுத்துத் தவறான முறையில் மொழிபெயர்த்து, ஒரு நையாண்டி செய்யும் தொனியில் ஒலிபரப்பியதாகக் கூறப்படுகிறது. 

இது பிரதானபோக்கு தமிழ் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் (இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும், அவர் உத்தியோகபூர்வப் பேச்சாளராக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் மலினப்படுத்தும் வகையிலான ஆவேசக்கூச்சலுக்கு வழிவகுத்தது.

சுமந்திரனுக்கு எதிராக அரசியல் தாக்குதல் தொடுக்கப்படுவதொன்றும் புதியதல்ல. ஜனாதிபதி சட்டத்தரணியான அவரின் தாராளவாத, ஒப்பீட்டளவில் மிதவாதப்போக்குடைய கருத்துக்கள் கடந்த காலத்தில் இனப்பிளவின் இருமருங்கிலும் உள்ள கடும்போக்கு சக்திகளின் தாக்குதலுக்கு இலக்காகி வந்திருக்கின்றன. இத்தடவை தொடுக்கப்பட்ட தாக்குதல்களில் ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசம் என்னவெனில் அவற்றில் பெருமளவானவை பொதுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்தும், குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்தும் வெளிவந்ததேயாகும். உண்மையாக சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறியது என்னவென்பதை அவருடன் தொடர்புகொண்டு விசாரித்து அறியாமலேயே அவரைக் கண்டனம் செய்யும் அறிக்கைகளைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான சோமசுந்தரம் மாவை சேனாதிராஜா வெளியிட்டார். 

சுமந்திரனை கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்தும், தமிழரசுக் கட்சியிலிருந்தும் நீக்குவது குறித்து ஆராய்வதற்குக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் மத்தியில் சேனாதிராஜாவின் ஏற்பாட்டின்பேரில் இடம்பெற்ற தொடர்ச்சியான கலந்தாலோசனைகளுக்கும் பிறகு இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகப் பல தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

இறுதியாக சுமந்திரன் 12 நிமிடநேர யூடியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டு, நேர்காணலில் உண்மையில் கூறப்பட்டது என்ன, சிங்களத்தில் தான் வழங்கிய அந்த நேர்காணல் தன்மீது தாக்குதல் தொடுத்துத் தன்னைக் களங்கப்படுத்துவதற்கு சில அரசியல் கட்சிகளினால் எவ்வாறு திரிபுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதை யெல்லாம் குறித்து 'விளக்கமளித்தார்'.

 தன்னைக் கண்டிக்கும் ஒருதலைப்பட்சமான அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னதாக நடந்தவை பற்றிய தனது நிலைப்பாட்டை அறிவதற்குத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட தனது சகாக்கள் ஒருவரும் அக்கறை காட்டவில்லை என்பது குறித்து சுமந்திரன் அதில் கவலையும் வெளியிட்டார். தன்னை விமர்சிப்பவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நேர்காணலில் தான் கூறியவற்றையே நியாயப்படுத்தி சுமந்திரன் உறுதியாக நின்றமை பாராட்டத்தக்கதாகும். அவர் வெளியிட்ட இந்த வீடியோ பதிவு அவருக்கு சார்பாக அலைதை; திருப்பியதுடன், பலருக்கு அவமானத்தையும் தேடித்தந்தது. 

மேலும் சிங்கள நேர்காணல் ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டன. அவை செல்வாக்குமிக்க பிரதான போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பிரசுரமாகின. அதை வாசித்த பின்னர்தான் நேர்காணல் தொடர்பில் சுமந்திரனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் நேர்மையற்றவை என்பதைப் பலர் விளங்கிக்கொண்டார்கள். இதன் விளைவாக சுமந்திரன் சார்பாக அனுதாப அமையொன்றும் வீசத்தொடங்கியது. அவரைக் கண்டனம் செய்தவர்கள், அவருக்கு ஆதரவான பெரும் எண்ணிக்கையானோரால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

தேநீர் கோப்பைக்குள் கொந்தளிப்பு

2020 மே 16 டெய்லி மிரர் பத்திரிகையில் இந்தக் கட்டுரையாளர் பின்வருமாறு எழுதினார்:

'சுமந்திரனுக்கும், தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கும் இடையிலான உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற போதிலும் கூட, சுமந்திரனுக்கு எதிராக வீசுகின்ற புயல் படிப்படியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தேநீர் கோப்பைக்குள் ஒரு கொந்தளிப்பாக - தணிந்துவிடும் போல தோன்றுகிறது'. இப்போது நடந்திருப்பது அதுவென்றே தெரிகிறது.

கொவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் விளைவாகப் பல வாரங்களாக கொழும்பிலேயே இருந்த சுமந்திரன் சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழரசுக் கட்சியினதும் பேச்சாளரான அவர் யாழ்ப்பாணத்தில் பத்திரிகை மாநாடொன்றையும் நடத்தினார். அந்த மாநாட்டில் அவர் மிகவும் நம்பிக்கையுடையவராகவும், ஆறுதலான மனநிலையுடன் இருந்ததாகவும் தோன்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் சுமந்திரனைக் கண்டித்தவர்களால் கடுமையாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று கட்சியின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பதேயாகும். அந்தப் பின்புலத்தில் நோக்குகையில் கூட்டமைப்பிற்குள் மூண்ட அந்தக் கொந்தளிப்பு தற்சமயம் ஓய்ந்துவிட்டது போல் தோன்றுகிறது. ஆனால் இந்தக் கட்டுரையாளர் முன்னர் குறிப்பிட்டதைப்போன்று சுமந்திரனுக்கும், அவரின் சகபாடிகள் சிலருக்கும் இடையிலான உறவுமுறை பாரதூரமாகப் பாதிக்கப்படப்போவது சாத்தியமேயாகும்.

கடந்த காலத்தைப்போலன்றி சுமந்திரன் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட இந்தச் சம்பவம் இலங்கையின் தமிழ் அரசியல் அரங்கை அவதானிப்பதில் பல்வேறு தரப்பினருக்கும் மிகுந்த அக்கறையை ஏற்படுத்தியிருப்பது போல் தெரிகிறது. பலர் சுமந்திரன் மீது கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் தாக்குதல் விடுத்தது குறித்து அதிர்ச்சியடைந்தார்கள். அது எவ்வாறு, ஏன் நடந்தது என்பதையறிய அவர்கள் ஆர்வம் காண்பித்தார்கள். இந்த விவகாரத்தை விரிவாக ஆராய்ந்து, உண்மையாக நடந்தது என்னவென்பதை விளக்கமாக எழுதுமாறு இலங்கையின் சகல பிரதான இனக்குழுக்களைச் சேர்ந்த பல நண்பர்களும், பழக்கமானவர்களும் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கூட என்னுடன் தொடர்புகொண்டு பல்வேறு தகவல் தொகுப்புக்களைத் தந்துதவினார்கள். நடந்த சம்பவங்களை 'சுமந்திரனுக்கு எதிரான சதி' என்று வர்ணித்த அவர்கள் அதைப்பற்றி முழுவிபரத்துடன் வெளிப்படுத்துமாறு என்னை வலியுறுத்தினார்கள். 

மாவை சேனாதிராஜா

இதுவிடயத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா சுமந்திரனுக்கு எதிராக ஏன் திரும்பினார் என்பது ஆரம்பத்தில் எனக்குப் பெரிய புதிராக இருந்தது. சேனாதிராஜா அறிக்கையொன்றை வெளியிட்டதற்குப் பிறகு மாத்திரமே சுமந்திரனுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் துணிச்சல் கொண்டார்கள் என்று தோன்றுகிறது. எனக்குப் புதிராக இருந்ததற்குக் காரணம் மிக நீண்டகாலமாக சுமந்திரனுக்கும், சேனாதிராஜாவிற்கும் இடையில் நல்ல சுமுகமாக உறவு நிலவியது. அதை நான் நன்கறிவேன். சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான பழம்பெரும் அரசியல்வாதி இராஜவரோதயம் சம்பந்தனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதுடன், அவரின் நம்பிக்கைக்குரிய முக்கிய உதவியாளராகவும் செயற்பட்டு வருகின்றார் என்றபோதிலும், தமிழரசுக்கட்சித் தலைவரான சேனாதிராஜாவுடனும் ஒரு நல்லிணக்கமான உறவுமுறையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்.பி பதவியை சுமந்திரனுக்கு முதலில் வழங்க முன்வந்தவர் சேனாதிராஜாவே. இரு தடவைகள் அவ்வாறு அவர் செய்தார். மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட போது வெற்றிடமான ஆசனத்தை நிரப்புமாறு சுமந்திரனை சேனாதிராஜா கேட்டார். ஈழவேந்தன் என்று அறியப்பட்ட எம்.கனகேந்திரன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் மீண்டும் அந்த இடத்திற்கு வருமாறு சுமந்திரனைக் கேட்டார். ஆனால் அவர் அதை வெளிப்படையாகவே நிராகரித்துவிட்டார். பின்னர் 2010 இல் சம்பந்தனும், சேனாதிராஜாவும் முன்வந்து வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்.பி பதவியை அவர் ஏற்றுக்கொண்டார். குறைந்தது இரண்டு முக்கியமான வழக்குகளில் சேனாதிராஜாவின் பிரதம சட்டத்தரணியாக சுமந்திரன் இருந்துவந்திருக்கிறார். 

ஒரு வழக்கு வலிகாமம் வடக்கில் இராணுவத்தினார் ஆக்கிரமித்திருக்கும் குடிமக்களின் நிலங்களைத் திருப்பித்தரவேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தப்பட்டதாகும். மற்றையது சமஷ்டி ஆட்சிமுறையைக் கோருவது பிரிவினையை நியாயப்படுத்துவது போன்றது ஆகாது என்று உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பை வழங்கிய வழக்காகும். சம்பந்தனுக்கும், சேனாதிராஜாவிற்கும் சமளவான மதிப்பை சுமந்திரன் கொடுத்து வந்திருக்கிறார். ஒருவரை 'ஐயா' என்றும், சேனாதிராஜாவை 'அண்ணன்' என்றும் அழைப்பார். 2014 தேர்தலில் சேனாதிராஜா தன்னுடன் சேர்த்து சுமந்திரனுக்காகவும் மிகுந்த ஊக்கத்துடன் பிரசாரம் செய்து மக்களிடம் வாக்குக்கேட்டார். எனவே சேனாதிராஜாவிற்கும், சுமந்திரனுக்கும் இடையில் இப்போது உறவுகள் கசந்தது எதனால்? அல்லது யாரால்?

எனவே இந்தப் பின்னணியில் தான் சுமந்திரன் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மூண்ட கொந்தளிப்பு குறித்து இதழியல் புலனாய்வு ஒன்றை நான் மேற்கொண்டேன். அதன்போது சுமந்திரனுக்கு எதிராகக் கூட்டமைப்பிற்குள் கட்டவிழ்ந்து கொண்டிருந்த சதிமுயற்சி அல்லது திட்டம் பற்றி மிகவும் கவனத்தைத் தூண்டுகின்ற தகவல்களைத் தெரிந்துகொண்டேன். இந்த நாடகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன் முக்கிய பாத்திரமொன்றை வகித்திருக்கிறார் போல தோன்றுகிறது.

ஆனால் சம்பந்தப்பட்ட விபரங்கள் சிலவற்றைக் கூறுவதற்கு முன்னர் ஏற்கனவே பலருக்குத் தெரிந்த ஓர் உண்மையைக் கூறிவைக்க விரும்புகின்றேன். சுமந்திரனும் நானும் நெருங்கிய உறவினர்கள். நாங்கள் இருவரும் ஒன்றுவிட்ட மைத்துனர்கள். சுமந்திரனின் தந்தையின் தாயாரும், எனது தாயாரின் தாயாரும் சகோதரிகள். சுமந்திரன் என்னைவிட 10 வருடங்கள் இளையவர். நான் 40 வருடங்களுக்கும் கூடுதலான காலத்திற்கு முன்னரிலிருந்து அரசியல் பத்திரிகைத்துறைக்குள் பிரவேசித்தேன். அதேவேளை அவர் 10 வருடங்களுக்கு முன்னர்தான் தீவிர அரசியலுக்குள் பிரவேசித்தார்.

கொடூரமான போரொன்றின் முடிவிற்குப் பிறகு தமிழர்களின் அரசியல் பாதை கூடுதலானளவிற்கு நடைமுறைச்சாத்தியமானதாகவும், ஒத்துழைப்புத்தன்மை உடையதாகவும் இருக்கவேண்டுமெனற நான் தனிப்பட்ட முறையில் விரும்புகின்றேன். எனினும் தற்போதைய யதார்த்த நிலைவரத்தைக் கணக்கிலெடுக்கும் போது ஒருபுறத்தில் தீவிரமான நல்லிணக்க அரசியலுடனும், மறுபுறத்தில் தீவிரமான மோதல் அரசியலுடனும் ஒப்பிடும்பேர்து சுமந்திரனின் 'மத்தியபாதை' பெருமளவிற்கு நடைமுறைச்சாத்தியமானது என்று நான் உணர்கிறேன். அவர் இதுகாலவரையில் அரசியலில் கடைப்பிடித்து வந்திருக்கும் வழிமுறை காரணமாகவே தற்போது நான் அவரை ஆதரிக்கிறேன். எதிர்காலத்தில் சில சந்தர்ப்பங்களில் அவரது போக்குகளில் எனக்கு ஏற்புடையதாக இல்லாமலிருந்தால் நான் அப்போது ஆக்கபூர்வமான விமர்சனத்தை நிச்சயமாக முன்வைப்பேன். 

கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெறுவதற்கு ஒரே கட்சியின் வேட்பாளர்களுக்கு இடையிலிருக்கும் போட்டாபோட்டியின் பின்னணியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவும் உள்மோதல்களை விளங்கிக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்தேர்தல் மாவட்டம், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியது. அது 7 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்கிறது. 2015 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 5 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தலா ஒரு உறுப்பினரும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகினர். 2015 பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 2018 உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பெற்ற வாக்குகளின் வீழ்ச்சியைக் கருத்திலெடுக்கும்போது 2020 பொதுத்தேர்தலில் கூட்டமைப்பிற்கு யாழ் மாவட்டத்தில் 4 ஆசனங்கள் மாத்திரமே கிடைக்கக்கூடுமு; என்று அரசியல் அவதானிகள் அபிப்பிராயப்படுகிறார்கள். இந்த 'முன்னறிவிப்பு' உண்மையானது என்று நிரூபிக்கப்படுமானால் 2015 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தெரிவான 5 எம்.பிக்களில் ஒருவர் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இல்லை. 2015 தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 5 கூட்டமைப்பு எம்.பிக்களின் விபரம் முன்னுரிமை வாக்குகளின் வரிசையில் வருமாறு: எஸ்.சிறிதரன், எஸ்.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், டி.சித்தார்த்தன், ஈ.சரவணபவன். இவர்களில் சித்தார்த்தன் புளொட்டைச் சேர்ந்தவர். அதேவேளை ஏனைய நால்வரு;ம தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 

2020 பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதிராஜா போட்டியிட மாட்டார் என்று ஒரு கட்டத்தில் உரைக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் வடமாகாண முதலமைச்சர் பதவியில் கண்வைத்தார் சேனாதிராஜா என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் சம்பந்தன் முதலமைச்ச்ர வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சி.வி.விக்கினேஸ்வரனை கொண்டுவந்தார். அதுவிடயத்தில் சுமந்திரன் சம்பந்தனுக்கு துணையாக செயற்பட்டார். சேனாதிராஜாவிற்குப் பெரும் ஏமாற்றமாகிப்போய்விட்டது என்றாலும், தவிர்க்க முடியாததை அவர் நாகரிகமான முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டது. 

விக்னேஸ்வரன் மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்தார். செயற்திறனில்லாத ஒரு நிர்வாகத்தின் ஊடாக வடமாகாண சபையை பரிபாலித்த அல்லது பாழ்படுத்திய பிறகு விக்னேஸ்வரன் பிரிந்துசென்று சொந்தக்கட்சியை ஆரம்பித்து, தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக முன்னணியொன்றை அமைத்து அரசியல் ரீதியில் சம்பந்தனின் முதுகில் குத்தினார். அத்தகையதொரு சூழ்நிலையில் சேனாதிராஜா மீண்டும் வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு உரிமைகோரத் தொடங்கியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளத்தக்கது. வடமாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் போது அதில் போட்டியிடுவதற்குத் தனது எம்.பி பதவியை சேனாதிராஜா துறப்பார் என்பதில் சந்தேகமில்லை. வடமாகாணசபை 2018 இல் கலைக்கப்பட்ட போதிலும் கூட அதற்கான தேர்தல் இன்னமும் நடத்தப்படவில்லை. 

அதேவேளை சேனாதிராஜாவின் மகனும் கூட அரசியலில் பிரவேசித்திருக்கிறார். ஐக்கிய இராச்சியத்தில் ஒரு பொறியியலாளராகப் பணியாற்றிய பிறகு இலங்கைக்குத் திரும்பிய சேனாதிராஜாவின் மூத்த மகன் கலையமுதன், 2018 பெப்ரவரியில் வலிகாமம் பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு உறுப்பினாகத் தெரிவானார். மகனின் பிரவேசத்தையடுத்து சேனாதிராஜா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். தான் பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து இருந்துகொண்டு, மாகாணசபைத் தேர்தலில் தனது மகனைப் போட்டியிட விடுவது குறித்து யோசித்தார். கலையமுதனை மாகாண அமைச்சராக்கும் யோசனையைக் கூட அவர் கொண்டிருந்தார். 

இலங்கைத் தமிழர் அரசியலில் பீவர்புரூக் பிரபு

இந்தச் சூழ்நிலையின் கீழ் சரவணபவனுக்கும், சேனாதிராஜாவிற்கும் இடையே ஒரு புத்தம்புதிய உறவுமுறை மலரத்தொடங்கியது. உதயன், சுடரொளி ஆகிய பத்திரிகை நிறுவனங்களினதும் வேறுசில வர்த்தக நிறுவனங்களினதும் உரிமையாளரான முன்னாள் யாழ்மாவட்ட எம்.பி சரவணபவன் இலங்கைத் தமிழர் அரசியலின் பீவர்புரூக் பிரபு என்று வர்ணிக்கப்படக்கூடியவர்.(கனடாவில் பிறந்து, பிரிட்டனில் வசித்தவரான வில்லியம் மக்ஸ்வெல் எயிட்கன் என்ற இயற்பெயருடைய பீவர்புரூக் பிரவு பத்திரிகை உரிமையாளராவார். 20 ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் பிரிட்டிஷ் ஊடகத்துறையிலும், அரசியலிலும் ஒரு செல்வாக்குமிக்க பிரமுகராக விளங்கிய அவர் திரைமறைவில் அரசியலில் காய்நகர்த்துவதில் வல்லவராக இருந்தார்).

2010 தேர்தலில் சரவணபவன் போட்டியிட்ட பேர்து அவர் தன்னை 'ஊர்ப்பிரச்சினையை உலகறியச்செய்த ஊடகப்போராளியாக' முன்னிலைப்படுத்தினார். ஒரு ஊடகப்போராளியாகக் காண்பித்துக்கொண்ட போதிலும் தனது வர்த்தக நிறுவனங்களை வளர்ப்பதற்குத் தனது செல்வாக்கைப் பயன்படுத்துவதற்கு அவர் ஒருபோதும் தயங்கவில்லை. 2019 ஜனாதிபதித் தேர்தலில் சரவணபவனின் பத்திரிகைகள் கோத்தபாய ராஜபக்ஷவைக் கடுமையாகத் தாக்கின. பத்திரிகையொன்றின் உரிமையாளர்  என்றவகையில் சரவணபவன் புதிய ஜனாதிபதி ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனும், பத்திரிகை ஆசிரியர்களுடனும் நடத்துகின்ற சந்திப்புக்களில் பங்கேற்று வருகிறார். 

2020 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 4 பேரை மாத்திரம் யாழ்ப்பாண மாவட்டம் தெரிவு செய்யுமானால் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாவதற்கு சரவணபவனுக்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம். அவர் தனது வெற்றியை உறுதிசெய்வதற்கு ஒரேயொரு வழி கூட்டமைப்பின் பலம்பொருந்திய சக வேட்பாளருடன் அணிசேர்ந்து கூட்டாகப் பிரசாரத்தில் ஈடுபடுவது மாத்திரமேயாகும். அதனால் சரவணபவன் சேனாதிராஜாவுடன் தன்னை இணைத்துக்கொள்வதற்கு நிர்பந்திக்கப்பட்டார்.

சேனாதிராஜா 50 வருடங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சியின் இளைஞரணியின் தலைவர் பதவியை ஏற்றதன் மூலமே தனது அரசியல் பயிற்சியைப் பெற்றார். கட்சியின் இளைஞரணியின் தலைவராக வருவதற்கு கலையமுதன் அக்கறை காட்டியபோது தந்தையாய் மகிழ்ச்சியடைந்தார். சரவணபவனும் கலையமுதனின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டதால் சேனாதிராஜா அவருடன் மிகவும் நெருக்கமானார்.

சுமந்திரனுடன் முதலில் ஏற்பட்ட உரசல்

இந்த இளைஞரணி விவகாரம் தொடர்பாகவே சுமந்திரனுடன் முதலில் உரசல் ஏற்பட்டது. கட்சிக்குள் உள்ள இளைஞர்களையும், யுவதிகளையும் கட்சிக்குள்ளும் ஒட்டுமொத்த அரசியல் விவகாரங்களில் கூடுதல் பங்கேற்பையும், பொறுப்புக்களையும் வழங்கி ஊக்குவிக்க வேண்டுமென்று சுமந்திரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். அதன் காரணத்தினால் அவர் தமிழரசுக் கட்சியின் இளைஞரணியின் செயற்பாடுகளை மீள ஒழுங்கமைத்துப் புத்துயிர் அளிப்பதற்கான நடவடிக்கைகளில் தன்i;னத் தீவிரமாக ஈடுபடுத்திவந்தார். எனவே சரவணபவனின் ஆதரவுடன் கலையமுதன் இளைஞரணியைப் பொறுப்பேற்க முயற்சித்த போது, பல இளைஞர்கள் அதை எதிர்த்து சுமந்திரனிடமிருந்து தார்மீக ஆதரவை நாடினார்கள். அந்த ஆதரவை சுமந்திரன் கொடுத்தார். இளைஞரணியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் தனது வாய்ப்புக்கள் குறைவு என்பதை விளங்கிக்கொண்ட சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் இறுதிநேரத்தில் குடும்ப அரசியல் குற்றச்சாட்டைத் தவிர்ப்பதற்கு அந்தப் பதவியை மறுப்பதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி போட்டியிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டார். மட்டக்களப்பைச் சேர்ந்த சேயோன் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை கலையமுதன் கட்சியின் யாழ்மாவட்ட இளைஞரணியின் பொதுச்செயலாளராக வந்தார். 

வேறு இரு தவறான விளக்கப்பாடுகளின் விளைவாக சேனாதிராஜாவிற்கும், சுமந்திரனுக்கும் இடையிலான உறவுகள் மேலும் சீர்கெட்டன. தமிழரசுக்கட்சிக்குள்ளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் கூடுதலான பங்கைக் கொடுக்கவேண்டும் என்று சுமந்திரன் நியாயப்படுத்தத் தொடங்கியது முதல் முரண்பாடாகும். 77 வயதான சேனாதிராஜாவை வெளியேற்றுவதற்கு சுமந்திரனின் சதுரங்க விளையாட்டு இதுவென்று சேனாதிராஜாவின் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் இதை வியாக்கியானம் செய்தார்கள். தமிழரசுக் கட்சிக்குள் சேனாதிராஜாவுக்கு விசுவாசமான ஒரு குழு யாழ்நகரில் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் அடிக்கடி கூடுகிறது. கட்சிக்குள் உள்ள இளைஞர் பிரிவினர் இந்தக் குழுவினரை 'மார்ட்டின் ரோட் மாஃபியா' என்று கிண்டல் செய்வதாகக் கூறப்படுகிறது. அண்மைக்காலமாக சரவணபவனும் கூட இந்தக் குழுவினருடன் நெருக்கத்தைப் பேணிவருகிறார். 

பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கு நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றுவதற்கு சுமந்திரன் ஒரு யோசனையை முன்வைத்த போது இரண்டாவது முரண்பாடு தோன்றியது. பதவியிலிருக்கும் சகலருக்கும் மீண்டும் வேட்பாளர் நியமனம் தன்னியல்பாகவே உறுதிப்படுத்தப்படும் நடைமுறை தொடர்ச்சியாக இருந்துவருகிறது. வேட்பாளர் பட்டியலில் இருக்கும் ஏனைய வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாத்திரமே வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் செயற்பாடு இடம்பெறுகிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகளிலும் கூட இதுவே வழமையான நடைமுறையாக இருக்கிறது. 

வேட்பாளர் நியமனங்கள் முற்றிலும் புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், தற்Nபுhது எம்.பியாக இருப்பவர் உட்பட வேட்பாளராக வரவிரும்பும் சகலருமே புதிதாக விண்ணப்பங்களைக் கையளிக்க வேண்டும் என்றும், ஏனைய விண்ணப்பதாரிகள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தெரிவான பின்னரே இவர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டுமென்று சுமந்திரன் பிரேரித்தார். இதன்மூலம் ஆற்றல் மிகுந்த, தகுதிவாய்ந்த இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்க உதவியாக இருக்கும். 

பெரும்பாலும் தற்போது எம்.பியாக இருக்கும் சகலரும் சுமந்திரனின் யோசனையைக் கடுமையாக எதிர்த்தார்கள். தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக அவர்கள் உணர்ந்தார்கள். எதிர்த்தாக்குதல் ஒன்றைச் செய்த சேனாதிராஜாவே அவர்களின் தஞ்சமும், புகலிடமும், பலமுமானார். தற்போது பாராளுமுன்ற உறுப்பினராக இருக்கும் சகலருக்கும் தன்னியல்பாக வேட்பாளர் நியமனம் கொடுக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றக் குழுவிலும், அரசியல் குழுவிலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது புதிய நியமனங்கள் வேட்பாளர் பட்டியலில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாத்திரமே.

இதையடுத்து தனது உதயன் பத்திரிகையின் ஊடாக சரவணபவன் சுமந்திரன் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தினார். இதிலொரு விசித்திரம் என்னவென்றால் இந்தப் பத்திரிகை சம்பந்தப்பட்ட பல வழக்குகளில் சரவணபவனுக்காக கைமாறு கருதாமல் சுமந்திரனும், அவரமு கனிஷ்ட சட்டத்தரணிகளும் ஆஜராகியிருக்கிறார்கள் என்பதாகும். சில வழக்குகளை இவர்கள் வென்றுகொடுத்திருக்கிறார்கள். அதேவேளை வேறு வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருக்கின்றன. 

மேலும் சுமந்திரனுக்கு நெருக்கமானவர்கள் என்று சந்தேகிக்கப்படும் வேறு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலக்கு வைக்கப்படுகிறார்கள். தமிழரசுக்கட்சியில் வேட்பாளர் நியமனக்குழுவில் இந்தப் பிரச்சினையைக் கிளப்பிய சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களை சரவணபவனின் பத்திரிகை தாக்கிவரும் காரணத்தால் அவருக்கு நியமனப்பத்திரம் வழங்கப்படக்கூடாது என்று வாதிட்டார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. ஏனென்றால் தற்போது எம்.பிக்களாக இருக்கும் சகலருக்கும் தன்னியல்பாக நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதே தீர்மானமாகும். 

சர்ச்சைக்குரிய நேர்காணல் 

இந்தக் கட்டத்தில் தான் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய நேர்காணல் தமிழ் அரசியல்பரப்பில் பெரும் பிரச்சினையைக் கிளப்பியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் சுமந்திரனுக்கு எதிரான சக்திகள் இத்தகைய வாய்ப்பிற்காகவே காத்துக்கொண்டிருந்தன. சுமந்திரனைக் கண்டித்துக் கடுமையான அறிக்கையொன்றை வெளியிடுமாறு சேனாதிராஜாவை வற்புறுத்துவது சரவணபவனுக்கும், மார்ட்டின் ரோட் மாஃபியாவிற்கும் சுலபமான விடயமாகப்போய்விட்டது. சேனாதிராஜா சுமந்திரனைக் கண்டித்ததும் அவ்வாறு செய்வதற்கு ஏனையவர்களுக்கும் கூடத் துணிச்சல் வந்தது. 'எல்லோருக்கும் தெரிந்த ஒருவர்' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்களை அணுகி சுமந்திரனுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். 

சுமந்திரனைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஆட்களை நிர்ப்பந்திப்பதற்கு சேனாதிராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்டது. மேற்குலகிலுள்ள பெருமளவு நிதிவளமுள்ள புலிகள் சார்பு ஊடாக அமைப்பொன்றும் கூட சுமந்திரனுக்கு எதிரான இந்தப் பிரசாரத்தில் குதித்தது. அதற்கு உள்ளுர் முகவர்கள் ஊடாக கண்டன அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால் சம்பந்தன், சிறிதரன், துரைரட்ணசிங்கம், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, கோடீஸ்வரன் போன்ற கூட்டமைப்பின் எம்.பிக்களில் சிலர் சுமந்திரனுக்கு எதிரான இந்தக் கூச்சலில் சேர்ந்துகொள்ளவில்லை. சுமந்திரனைப் பாதுகாத்து நியாயப்படுத்தி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிக்கையொன்றை வெளியிட்டார். சரவணபவனின் பத்திரிகைகள் சுமந்திரனைக் கண்டித்த போதிலும்கூட அவரும்கூட வெளிப்படையாகக் கண்டன அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தனின் அறிக்கையைக் கூட அவரது பத்திரிகை பிரசுரிக்க முன்னதாகத் திருத்தியமைத்திருந்தது. 

சேனாதிராஜாவும், சுமந்திரனும் ஒருசில தடவைகள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி வேறுபாடுகள் சிலவற்றைக் களைந்த பின்னர் பதட்டநிலை தணியத்தொடங்கியது. அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பதாக சுமந்திரனைத் தொடர்புகொண்டு அவரது தரப்பு நியாயத்தைத் தான் கேட்காமல் தவறிழைத்ததாகத் தமிழரசுக்கட்சியின் தலைவர் ஒத்துக்கொண்டார். சம்பந்தன், சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் சிறிதரன் சகிதம் கொழும்பில் சந்தித்து நிலவரத்தை மனந்திறந்து வெளிப்படையாகப் பேசியதையடுத்து சர்ச்சை மேலும் தணிந்தது.

நிலவரம் எவ்வாறு போகும் என்பதை இப்பொழுதே கூறுவது பொருத்தமற்றதாக இருப்பினும் கூட, தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் நிதானம் மேலோங்கி உள்நெருக்கடி முடிவிற்கு வந்திருப்பது போல தெரிகிறது. சுமந்திரனின் யாழ்ப்பாணப் பயணமும், அவர் அங்கு நடத்திய ஊடகவியலாளர் மாநாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவிய கொந்தளிப்பு இப்போது முடிவிற்கு வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதிராஜா தான் எவ்வாறு சுயநல சக்திகளினால் சூழ்ச்சித்தனமாக நடத்தப்பட்டார் என்பதை விளங்கிக்கொண்டு, எதிர்காலத்தில் உகந்த முறையில் செயற்படுவாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

(டெய்லி மிரர்)