தனது வார்த்தைகளினால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து மோடி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் மன்மோகன் சிங்

     

காஷ்மீரின் லடாக்  பிராந்தியத்தில் இந்திய - சீன எல்லையில் மூண்டிருக்கும் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக  பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கூட்டிய சர்வகட்சி மகாநாட்டில் அவர் தெரிவித்த கருத்தொன்று பெரும் அரசியல் புயலைக்  கிளப்பிவிட்டிருக்கிறது.' இந்திய பிராந்தியத்துக்குள் எவரும் ஊடுருவல் செய்யவில்லை ; ஊடுருவல்காரர் எவரும் இந்திய பிராந்தியத்திற்குள் இல்லை ; எந்த ஒரு இராணுவநிலையும் எவராலும் கைப்பற்றப்படவில்லை ' என்று அந்த மகாநாட்டில் தனதுரையின் முடிவில் மோடி கூறினார்.

   

அவரின் இந்த அறிவிப்பையடுத்து இந்திய அரசியல் அவதானிகளும் பாதுகாப்பு விவகார நிபுணர்களும் பிரச்சினை கிளப்பி ஊடகங்களில் விமர்சனங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டு பகுதியின் ் தற்போதைய  நிலைவரம் குறித்து  இந்தியாவிலும் உலக நாடுகள் மத்தியிலும் குழப்பநிலையை  ஏற்படுத்தக்கூடியதாக பிரதமரின் கருத்து  இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள்.இந்தியாவின் சகல பிரதான பத்திரிகைகளும் அவரை விமர்சனம் செய்து ஆசிரிய தலையங்கங்களை தீட்டியிருக்கின்றன.

   

பிரதமர் மோடி தனது வார்த்தைகளினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் திங்களன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அறிவுறுத்தும் தொனியில் கூறியிருக்கிறார். சர்வகட்சி மகாநாட்டில் மோடி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை தனது அறிக்கையில் கலாநிதி சிங் சுட்டிக்காட்டவில்லை என்றபோதிலும், அதையே அவர் மனதில்கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படையானது. 

   

லடாக்கின் கல்வான்  பள்ளத்தாக்கில் இந்திய -- சீன தகராறு குறித்து முதற்தடவையாக பேசிய முன்னாள் பிரதமர், ' வெளியிடும் கருத்துகள் தேசிய பாதுகாப்பில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து மோடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ; தனது வார்த்தைகள் சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்புத்துவதற்கு அவர் அனுமதிக்கக்கூடாது ' என்று கூறியிருக்கிறார்.

தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்களை வெளியிடுவது இராஜதந்திரத்துக்கோ அல்லது தீர்க்கமான தலைமைத்துவத்துக்கோ பதிலீடாக அமையாது.பதற்ற நிலைவரம் மேலும் தீவிரமடைவதைத் தடுப்பதற்கு அரசாங்கத்தின் சகல அமைப்புக்கும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.கல்வான் பகுதியில் எல்லையைப் பாதுகாப்பதில்  தங்கள் உயிரைத்தியாகம் செய்த கேணல் சந்தோஷ் பாபு மற்றும் ஜவான்களுக்கு நீதி கிடைப்பதை மோடி அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும்.அதைவிடவும் குறைவானது எதுவும் மக்களின் நம்பிக்கைக்கு செய்யும் வரலாற்றுத் துரோகமாகும் ' என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 பத்திரிகைகளின் விமர்சனங்கள்

    இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை சீனா தொடர்பில் பிரதமர் புதிய, தெளிவான அறிக்கையொன்றை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி திங்களன்று எழுதிய ஆசிரியதலையங்கத்தில் கூறியிருப்பதாவது ;

    இந்தியப் பிராந்தியத்திற்குள் எந்த வெளியாரும் ஊடுருவவில்லை என்று வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து பற்றி ( மிகவும் அவசரமாகவும் அவசியமாகவும்  தேவைப்பட்ட ) விளக்கத்தை பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டது.ஜூன் 15 சீனத்துருப்புகள் அத்துமீறிப்பிரவேசித்து கட்டமைப்புக்களை நிர்மாணிப்பதற்கு மேற்கொண்ட முயற்சியை இந்திய இராணுவ வீரர்கள் துணிச்சலுடன் முறியடித்த கல்வான் பள்ளத்தாக்கின் நிலைவரம் தொடர்பிலேயே பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார் என்று அந்த அறிக்கை கூறியது.

     சர்வகட்சி மகாநாட்டில் பிரதமர் அந்த கருத்தைத் தெரிவித்த மறுநாள் அவரது அலுவலகம் வெளியிட்ட அந்த விளக்கம் அரசியல் மற்றும் இராஜதந்திர சர்ச்சையொன்றை தோற்றுவித்திருக்கிறது.பிரதமரின் கருத்தை சுயாதீனமாக நோக்குமபோது அது இந்தியாவின் சுயாதிபத்திய உரிமைக்கோரிக்கையையும் பேச்சுவார்தையின்போதான நிலைப்பாட்டையும்  மலினப்படுத்தும் ஆபத்தைக்கொண்டிருக்கிறது என்பதுடன் இந்தியாவின் நண்பர்களை குழப்பத்திலாழ்த்தி, சீனாவுக்கு ' இராஜதந்திர வெடிகுண்டுகளை ' வழங்குகிறது ; கல்வான் பள்ளத்தாக்கு நெருக்கடிதொடர்பில் இந்திய வெளியுறவு அமச்சினதும் பாதுகாப்பு அமைச்சினதும் முன்னைய நிலைப்பாடுகளுக்கு முரணானதாகவும் தோன்றுகிறது.

    அது வேறு கேள்விகளையும் கிளப்புகிறது.கல்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவல் எதுவும் இடம்மபறவில்லையானால், ஜூன் 15 அங்கு ஏன் வன்முறை மூண்டது ? அத்துமீறல் இடம்மெறவில்லையானால், முன்னைய நிலைவரம் திரும்பவும் ஏற்படுத்தப்படவேண்டும் என்று இந்தியா கூறுவதன் அர்த்தம் என்ன? 

   எதிர்வரும் பேச்சுவார்த்தைகளின் போது சீனா இந்திய தரப்பிடம் மோடியின் கருத்தைச் சுட்டிக்காட்ட வாய்ப்பிருக்கிறது.நிலத்தை விட்டுக்கொடுக்க புதுடில்லி தயாராயிருக்கிறது என்று நட்பு நாடுகளின் அரசாங்கங்கள் நினைக்கக்கூடிய சூழ்நிலை தோன்றும்பட்சத்தில், இந்தியாவுக்கு வெளிநாடுகளில் உள்ள கணிசமான ஆதரவு அருகிப்போவதற்கான சாத்தியம் இருக்கிறது.பிரதமரின் கருத்து உள்நாட்டில் அரசியல் துருவமயமாதலை ஆழப்படுத்தி, அரசாங்கம் போதுமானளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கும்.

     பிரதமர் மோடி சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க செல்வாக்கான நிலையில் இருந்துவருகிறார்.ஆனால், வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட கருத்து அந்த செல்வாக்கான நிலைக்கு பொருத்தமானதாக இல்லை. பிரதமரின் கருத்து எதிர்பாராத ஒரு சறுக்கலா அல்லது அமைதியாக -- ஆரவாரமற்ற முறையில் பதற்றத்தை தணிப்பதற்கு சீனாவுக்கு வாய்ப்பை வழங்கும் நோக்குடன் ஒரு தந்திரோபாய செய்தியாக வேண்டுமென்றே கூறப்பட்டதா அல்லது கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அத்துமீறப்பட்டுவிட்டது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அது ஒரு அரசியல் பதிலடியா அல்லது பிரதரின் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று அது கல்வான் பள்ளத்தாக்கு பற்றியது மாத்திரம்தானா என்பதை அறிந்துகொள்வதும் சாத்தியமில்லை.

   ஆனால், நோக்கங்கள் எவ்வாறானவையாக இருந்தாலும், செய்தி தெளிவற்ற சமிக்ஞைகளை அனுப்பியிருக்கிறது. பிரதமர் மீண்டும் பேசி மூன்று பிரச்சினைகளுக்கு  தெட்டத்தெளிவாக விளக்கங்களைத் தரவேண்டும் ; கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை அண்மைய மாதங்களில் சீனா அத்துமீறியிருந்தால் அது குறித்து தெளிவுபடுத்தவேண்டும் ; பான்கொங்  சோவில் கள யதார்த்த நிலைவரங்களில் சீனா மாற்றத்தை செய்ய முயற்சிக்கிறதா? கல்வான் பள்ளத்தாக்கின் தற்போதைய நிலைவரம் என்ன? 

   தனக்கே சொந்தமானது என்று இந்தியா எப்போதும் உரிமைகோரிவந்த பகுதி இந்தியாவின் உறுதியான கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை நிறுவிக்காட்டவேண்டியது முக்கியமானதாகும்.சர்வதேச அரசியலில் தந்திரோபாய ரீதியில் தெளிவற்றதன்மைக்கு ஒரு பெறுமதி சில வேளைகளில் இருக்கக்கூடும்.ஆனாால், இது அத்தகையதொரு சந்தர்ப்பம் அல்ல.புதிய அறிக்கையொன்றை வெளியிடுவது இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட உதவும்.

உண்மைநிலை தெரியாத மக்கள்

' த இந்து ' பத்திரிகை திங்களன்று அதன் ஆசிரியர் தலையங்கத்தில் எல்லைப் பிராந்தியத்தில் நடைபெறுகின்றவை பற்றி உண்மை நிலை தெரியாதவர்களாக இந்திய மக்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி பிரதமரின் கருத்தும் அதற்கு அவரின் அலுவலகம் வெளியிட்ட விளக்கமும் அரசாங்கத்தின் தகவல் தொடர்பிலுள்ள பாரதூரமான குறைபாட்டை வெளிக்காட்டியிருக்கிறது என்று கூறியிருக்கிறது. 

Kadima Party Videos: Watch Kadima Party News Video

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது : 

வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வகட்சி மகாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி சீனாவினால் ஊடுருவல் எதுவும் செய்யப்படவில்லை என்றும் இந்திய பிராந்தியத்திற்குள் ஊடுருவல்காரர்கள் எவரும் இல்லை என்றும் தெரிவித்த கருத்து எதிர்ப்பார்க்கப்பட்டதைப் போலவே அரசியல் புயலைக் கிளப்பியிருக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் இந்தியப் பக்கத்தில் கட்டமைப்புக்களை சீனா நிர்மாணித்ததால் ஜூன் 15 இரவு மூண்ட மோதல்களில் 20 இந்திய வீரர்கள் பலியானது மாத்திரமல்ல, பொங்கொங் வாவியின் வடக்கு கரை உட்பட லடாக்கின் வேறு பகுதிகளில் உள்ள இந்திய பிராந்தியத்தில் சீன துருப்புக்கள் இன்னமும் நிலைகொண்டும் இருக்கிறார்கள். 

பிரதமர் வெளியிட்ட கருத்திலுள்ள முரண்பாடு குறித்து எதிர்க்கட்சிகளினால் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு சனிக்கிழமை பிரதமரின் அலுவலகம் மிகவும் அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்பட்ட விளக்கத்தை வெளியிட்டது. சீனாவின் அத்துமீறலை முறியடித்த ' எமது ஆயுதப்படைகளின் துணிச்சலான நடவடிக்கையின் விளைவாக ' கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலைவரத்தை மாத்திரமே பிரதமர் குறிப்பிட்டதாக அந்த விளக்கத்தில் கூறப்பட்டது. கிளம்பியிருக்கும் அரசியல் சர்ச்சையை பிரதமரின் அலுவலகம் ' விசமத்தனமான வியாக்கியானம் ' என்று வர்ணித்திருக்கின்ற போதிலும் கூட, சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் நிதானமாக தனது வார்த்தைகளை தெரிவு செய்யவில்லை என்பது முற்றிலும் தெளிவானது. 

உண்மையில் பிரதமரின் கருத்தை தங்களுக்கு சாதகமான முறையில் ஏற்கனவே சீன அரச ஊடகங்கள் பயன்படுத்தியிருக்கின்றன. அத்துடன் அவரது கருத்து கட்டுப்பாட்டு எல்லையை சீன துருப்புக்கள் ஊடுருவவில்லை என்ற பெய்ஜிங்கின் அறிவிப்பை அங்கீகரித்து மக்கள் விடுதலை இராணுவத்தின் அண்மைய நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாக அமைகிறது. இந்திய வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை வெளியிட்ட அதன் அறிக்கையில் சீனா கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை அத்துமீறியிருக்கிறது என்பதையும் எல்லையில் கட்டமைப்புக்களை நிர்மாணித்திருக்கிறது என்பதையும் மீளவலியுறுத்திக் குறிப்பிட்டிருக்கிறது. 

இரண்டுக்கும் குறையாத விளக்கங்களை வேண்டி நிற்கும் எந்தவொரு உரையும் அது விடுக்கின்ற செய்திகள் தொடர்பில் பாரதூரமான பிரச்சினையைக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையானது என்கிற அதே வேளை , எல்லைப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடலில் உள்ள பாரிய குறைபாட்டை மாத்திரமே இந்த சர்ச்சை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

கல்வான் பள்ளத்தாக்கில் 6 வாரங்களுக்கும் அதிகமான காலமாக நிலவிய பதற்ற நிலையை தொடர்ந்தே உயிரிழப்புக்கள் அநியாயமாக ஏற்பட்டிருக்கின்றன. இந்த கால கட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பிராந்தியத்தில் நடைபெறுகின்றவை குறித்து எதுவும் அறியாதவர்களாக மக்கள் இருளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய கூருணர்ச்சியுடைய பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை என்று வரும் போது ஒவ்வொரு விபரத்தையும் பொது வெளியில் பகிர்ந்து கொள்வதென்பது சாத்தியமற்றது என்பது உண்மையே. தற்போதைய நெருக்கடிக்கான தீர்வையும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் பல்வேறு நிலைகளில் அவசரமாகத் தேவைப்படுகின்ற மோதல் தவிர்ப்பு மற்றும் படை விலகலையும் இராஜதந்திரத்தின் ஊடாக மாத்திரமே சாதிக்க முடியும். அதே வேளை ஒட்டுமொத்தமாக மௌனம் சாதிப்பதும் அரசாங்கத்தின் நலன்களுக்கும் உதவப் போவதில்லை. 

உரிய தருணத்தில் நம்பகமான தகவல்களை வெளியிடாமல் இருப்பதுவும் கூட ஊடகங்களையும் அச்சத்தையும் மாத்திரமே அதிகரிக்கச் செய்யும். இதுவரை காட்டப்பட்ட மௌனம் கார்கில் போருக்குப் பிறகு இந்தியா அதன் மிகப் பெரிய தேசிய பாதுகாப்பு சவாலுக்கு முகங்கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு நேரத்தில் உள்நாட்டு அரசியலில் மாறி மாறி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையே தோற்றுவிக்கப்படுகின்றது. 

ஒரு சில வாரங்கள் காலம் தாழ்த்தப்பட்டு நடத்தப்பட்டிருந்தாலும் கூட வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இடம்பெற்ற சர்வகட்சி மகாநாடு நிச்சயமாக சரியான  திசையிலான ஒரு நடவடிக்கையே. இந்தியா அதன் பலம் பொருந்தியதும் பெரியதுமான அயல் நாட்டுடன் தகறாரில் ஈடுபட்டிருக்கிறது. யதார்த்த நிலையை மறுதலிப்பதன்     மூலமோ அல்லது உண்மைகளை மறைக்க முயற்சிப்பதன் மூலமோ எதையும் சாதிக்க முடியாது. தீர்வொன்றைக் காணுவதற்கான முதற்படி பிரச்சினையின் பாரதூரத்தன்மையை தெளிவாக விளங்கிக் கொள்வதே ஆகும். 

கிளம்பும் பல கேள்விகள்

டெக்கான் ஹெரால்ட் எழுதியிருக்கும் ஆசிரியர் தலையங்கத்தில் சர்வகட்சி மகாநாட்டில் பிரதமர் வெளியிட்ட கருத்து தவிர்த்திருக்கக் கூடிய குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் உண்மையில் என்ன நடைபெற்றது என்பது பற்றி பல கேள்விகளை கிளப்புகிறது. பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை குழப்ப நிலையை தெளிவுபடுத்தவில்லை. ஜூன் 15 படை வீரர்கள் பலியாவதற்கு வழிவகுத்த சம்பவங்களை மாத்திரமே பிரதமர் குறிப்பிட்டதாக அவரின் அலுவலகம் கூறியிருக்கிறது. எவரும் ஊடுருவியிருக்கவில்லை , எந்தவொரு படை நிலையும் எவராலும் கைப்பற்றப்படவுமில்லை என்று பிரதமர் கூறினார். இவை நாட்டுக்கு உத்தரவாதத்தை கொடுக்கக் கூடிய வார்த்தைகளாக இல்லை. அப்படி உத்தரவாதத்தை கொடுப்பது தான் பிரதமரின் அந்த கருத்தின் நோக்கமாக இருந்தால் அது பொது வெளியில் அறியப்பட்ட கள நிலைவரங்களுடன் முரண்படுவதாகவே இருக்கிறது. 

எந்தவொரு ஊடுருவலும் இடம்பெறவில்லை என்றால் மோதல் சூழ்நிலை ஏன் ஏற்பட்டது ? படை வீரர்கள் எங்கு ஏன் கொல்லப்பட்டார்கள் ? கடந்த சில வாரங்களாக இருதரப்பையும் சேர்ந்த சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள் ? இந்திய தரப்பின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களிடமிருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் வெளிவரக்கூடிய முரண்பாடானதும் குழப்பத்தைத் தரக் கூடியதுமான அறிக்கைகள் இந்தியாவின் நிலைப்பாட்டை மலினப்படுத்தி சீனாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கு உதவும். பிரதமரின் கருத்து அத்தகைய ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருப்பது துரதிஷ்டவசமானது.