(செ.தேன்மொழி)

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப்போட்டியை இலங்கை இந்தியாவுக்கு தாரைவார்த்தாக அமைச்சர் மஹிந்தானந்த  அளுத்கமகேவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்து பாரிய குற்றச்சாட்டாகும். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடரல்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆணைக்குழு அமைத்து விசாரணைகளை நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை மின் கட்டணங்கள் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளுக்கு பதிலளிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் , அதிலிருந்து தப்பிக் கொள்ளும் நோக்கத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்திருப்பாராயின் இவர் போன்ற நபர்களை மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதா? என்பது தொடர்பில் மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் மஹிந்தானந்த  எமது கிறிக்கட் வீரர்களுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் பிரசாரமொன்றை செய்துள்ளார். இருந்தபோதிலும் நாங்கள் ஒருநாளும் முன்னாள் கிரிக்கட் அணி தலைவர்களான  குமார சங்ககார  மற்றும் மஹேல ஜயவர்தன போன்றோர் நாட்டுக்கு வெற்றியை விடுத்து தோல்வியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று நம்பப்போவதில்லை. ஆனால் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண  இறுதிப் போட்டிகள் இடம்பெற்றபோது மஹிந்தானந்தவே விளையாட்டுதுறை அமைச்சாரக இருந்ததுடன் , அப்போதைய ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷவே பதவிவகித்தார்.

இந்நிலையில் இவ்வாறான முறைக்கேடான  செயற்பாடுகள் இடம்பெறுவதை அறிந்து அவர் அப்போதே தெரிவிக்காமல் இருந்தது ஏன்?  கிரிக்கட் போட்டி தாரைவார்க்கப்பட்டது என்றால் அதற்கு யார் பொறுப்புக்கூற  வேண்டும்  என்பதை  கண்டறியப்பட வேண்டும். இல்லை என்றால் அதிகாரிகளின் அச்சுறுத்தல்களுக்காக எமது கிரிக்கட் வீரர்கள் அதற்கு ஒத்துழைத்துள்ளார்களா? என்ற சந்தேகம் தோன்றிவிடும். இதனால் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவது முக்கியமாகும். அதற்கமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆணைக்குழுவை நியமித்து இந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இதேவேளை ,சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிரான தண்டனையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் சபையும் விசாரணைகளை நடத்தும் என்றே நாங்கள் எண்ணுகின்றோம். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மின்கட்டணம் தொடர்பான சிக்கல் நிலைமைக்கு தன்னால் பதிலளிக்க முடியவில்லை என்பதினால் , அதிலிருந்து தப்பிக் கொள்ளும் நோக்கில் மஹிந்தானந்த இவ்வாறான பிரசாரத்தை முன்னெடுத்திருந்தால். இவர்போன்ற நபர்களை தொடர்ந்தும் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைப்பதா என்பது தொடர்பில் மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஹரின் பெர்ணான்டோவின் கருத்து

ஜனாதிபதி தேர்தலின் போது எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் பெரிதும் தாக்கம் செலுத்தியிருந்தன என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால்  இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ  முன்வைத்திருக்கும்  கருத்துகளை நாங்கள் ஏற்றுக் கொண்டாலும், அவர் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை பற்றி கூறியிருக்கும் கருத்துக்கு எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாது. இந்த கூற்று தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்ப்பதுடன் , இதனால் பேராயருக்கு ஏதேனும் மனவுலைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்கு எமது கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தேர்தல் காலங்களிலே இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பது கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துக் கொண்டே உறுப்பினர்கள் செயற்பட வேண்டும்;. இந்த கருத்து தொடர்பான முழு விபரத்தையும் தெரிந்துக் கொண்டு, கட்சியின் கூட்டத்தின் போது அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்படும். இதேவேளை உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய பிரதான நபரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடனே இணைந்துக் கொண்டுள்ளார். இந்த தாக்குதல்கள் தொடர்பில் தான் எந்த பொறுப்பும் கூறமாட்டேன் என்று புறக்கணித்து வந்தாலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் வெட்டவெளியாகியுள்ளன.

கருணா அம்மானின் கருத்து

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் 2000 -3000 வரையான இராணுவத்தினரை கொலைச் செய்ததாக கூறியிருப்பது பாரிய குற்றச்சாட்டாகும். யுத்த காலத்தின் போது இராணுவத்தினர் சிவில் மக்களை கொன்றதாக சர்வதே அமைப்புகளும் , மனிதவுரிமைகள் பாதுகாப்பு அமைப்புகளும் இராணுவத்தினர் மீது பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன. இந்நிலையில் தற்போது கருணா அவராகவே தான் இராணுவத்தினரை கொலைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறான நிலையில் சர்வதேச அமைப்புகள் அவருக்கெதிராகவும் சட்டநடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதேவேளை கருணாவின் பிரசாரம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அரசாங்கம் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். 

--