-சிவலிங்கம் சிவகுமாரன்

‘அரசியல் செய்வதற்கு அனுபவம் தேவையில்லை  மக்கள் மீதான அக்கறை இருந்தாலே போதும்’  என சில வருடங்களுக்கு முன்பு வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணலில் ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார். இ.தொ.கா என்ற பாரிய தொழிற்சங்க அமைப்புக்கு இளம் வயதிலேயே பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு அவருக்கு கிடைத்தமைக்கும்  அவர் மீதான மக்கள் அக்கறையே காரணம் எனலாம்.  

ஆகவே தான்  பதவி என்பதற்குப் பதில் பொறுப்பு என விளிக்க நேர்ந்தது.  இனி இ.தொ.கா என்ற பாரிய அமைப்பை  பிரதிநிதித்துவம் செய்யும் தொழிலாளர்கள் மீதான அக்கறை மட்டுமன்றி அந்த அமைப்பை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பும் ஜீவன் மீது சுமத்தப்பட்டுள்ளது. 

அதன் காரணமாகவே பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பிரதமருடன் பேச்சு நடத்த உடனடியாக தலைநகர் நோக்கி பயணித்தார் ஜீவன்.  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற அமைப்பை இரண்டு கட்டங்களாகவே நோக்க வேண்டியுள்ளது.

1) அதன் ஸ்தாபகத் தலைவர்  அமரர்  செளமியமூர்த்தி தொண்டமானின்  காலகட்டம்

2) ஆறுமுகன்  தொண்டமானின்  காலகட்டம்

இந்த இருவருமே தமது காலகட்டங்களில்  இலங்கையின்  அரசியல் மற்றும் மலையக பெருந்தோட்ட வரலாற்றில் முக்கியமான  தடங்களை பதித்து விட்டுப்போயிருக்கின்றார்கள். எனினும் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான்  நீண்ட காலம் செயற்பட்டு இ.தொ.காவை கட்டியெழுப்பி தனது காலகட்டத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப மலையக சமூகத்துக்கு தேவையான விடயங்களைப் பெற்றுக்கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டார்.  

அவருக்குப்பின்னர் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்ற ஆறுமுகன் காலமாற்றத்துக்கேற்ப கட்சியை மறுசீரமைத்ததுடன் தனது காலத்தின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற  செல்நெறியில்,   விமர்சனங்களுக்கும் பலத்த சவால்களுக்கும் மத்தியில் கட்சியை கொண்டு சென்றார். எனினும் சில இலக்குகளை அடைவதற்கு முன்பாகவே அவர் திடீரென மறைந்து விட்டார். இதை எவரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனாலும் அவர் எதிர்ப்பார்த்திருந்தாரோ என்னவோ சரியான நேரத்தில் தனது மகனை அரசியல் களத்தில் இறக்கி விட்டிருந்தார்.  

இனி இ.தொ.கா  ஜீவன் தொண்டமான் என்பவரின் காலத்தில் பயணிக்கவுள்ளது. தனது தந்தை விட்டுச்சென்ற இலக்குகளை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டிய அதே வேளை இ.தொ.கா என்ற அமைப்பை கட்டுக்கோப்புடன் கட்டிக்காக்கும் விடயத்திலேயே  அவர்   சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. ஆகவே   தனது ஒவ்வொரு அடியையும் நிதானமாகவும் பொறுப்புடனும் அவர் எடுத்து வைக்க வேண்டிய காலமாக இது விளங்குகின்றது. ஏனெனில் ஒரே நேரத்தில் அவர் மீது இப்போது இரண்டு சுமைகள் வைக்கப்பட்டுள்ளன.

*முதலாவது பொதுச்செயலாளர் என்ற பொறுப்பின் அடிப்படையில் பாரம்பரிய மிக்க நீண்ட கால வரலாறு கொண்ட அமைப்பை  ஸ்திரப்படுத்துவது.

*இரண்டாது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு செல்வது. 

ஜீவனின் தெரிவானது மக்களின் பிரதிநிதிகளாக தேசிய சபையில் இருக்கும் அங்கத்தவர்களின் ஏகமனதான தெரிவாகவே இருக்கின்றது. ஆகவே  அவரை தேர்தலில் வெற்றி பெறச்செய்வதற்கான பொறுப்பு மக்களுக்கும் இருக்கின்றது என்பது முக்கிய விடயம். 

 1939 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை  இந்திய காங்கிரஸானது பின்பு 1954 இல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் மாற்றம் பெற்றது. அதன் பிறகு அமரர் செளமியமூர்த்தி தொண்டமானை தலைவராகக்கொண்டு இயங்கிய இந்த அமைப்பின் செயலாளராக பிற்காலத்தில் எம்.எஸ். செல்லச்சாமி விளங்கினார். பொதுச்செயலாளர் என்ற பதவிக்கே உரித்தானவராக அவர் செயற்பட்டதால் அவரை  G.S (General Secretary ) என்றே  அமைப்பில் அனைவரும் அழைத்தனர் என்பத குறிப்பிடத்தக்கது. 

அவருக்குப்பின்னர்  1993 ஆம் ஆண்டு அப்பொறுப்பை அமரர் ஆறுமுகன் ஏற்றார்.   1999 ஆம் ஆண்டு   செளமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் தலைமை பொறுப்பும்   அவருக்கு வர கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் வரை அமரர் ஆறுமுகனே தலைவராகவும் செயலாளராகவும் கோலோச்சினார். கட்சியின் யாப்பின் படி பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு மிகவும் முக்கியமானது என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார். 2018 ஆம் ஆண்டு  தேசிய சபையால் கட்சியின் ஆரம்ப கால செயற்பாட்டாளரான அமரர் அண்ணாமலையின் மகள் திருமதி அனுஷியா சிவராஜாவுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது கட்சியின் மூன்றாவது பொதுச்செயலாளராக தேசிய சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜீவன். 

அமரர் ஆறுமுகன் கட்சியின் பொறுப்பை ஏற்ற பிறகு அவரது வேகத்துக்கும் அதிரடி செயற்பாடுகளுக்கும் ஈடு கொடுக்க முடியாது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் வெளியேறினர். ஆறுமுகனின் தலைமைத்துவத்தை குறை கூறினர். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றனர். எனினும் பின் வந்த மற்றும்  ஆரம்ப கால சிரேஷ்ட உறுப்பினர்களைக் கொண்டு  கட்சியை கட்டியெழுப்பினார் அவர். அதற்குப் பிரதான காரணமே அவரது ஆளுமையும்  நேர்பட பேசும் திறனும் அரசாங்கத்தின் உயர் மட்டத்தோடு அவர் கொண்டிருந்த நட்புமாகும். 

இந்த விடயங்களை மனதிலிறுத்தி அதற்கேற்றாற்போல்  தன்னை மாற்றிக்கொண்டு பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜீவன் இருக்கின்றார். அதற்கு கட்சியில் இருக்கும் சிரேஷ்ட மற்றும் ஏனைய உறுப்பினர்களின் அனுபவங்களைப் பெறுக்கொள்வது தவிர்க்க முடியாதது. அதாவது இனி அவர் அனுபவங்களைப் பெற்றும் கற்றுமே செல்ல வேண்டியுள்ளது. இப்படி ஒரு பொறுப்பு அவருக்கு கிடைக்கும் முன்பு கூறிய வார்த்தைகள் அந்த காலகட்டத்துக்கு பொறுத்தமாக இருக்கலாம். ஆனால் இப்போது அப்படியில்லை. இ.தொ.காவின் பொதுச்செயலாளராக இருப்பவருக்கு அரசியல் செய்ய வேண்டுமானால்  அக்கறை மட்டுமில்லை அனுபவமும் தேவை. அதை தேடி அவர் போகத்தேவையில்லை. தேர்தல் காலமும் அதற்குப் பின்னரான காலகட்டங்களும் அவருக்கு அதை பெற்றுத்தரும் ,உணர்த்தும்  எனலாம். 

எல்லாவற்றையும் விட தனது தந்தையின் அடிச்சுவட்டில் பயணிக்கும் அவருக்கு ,அவர் முகங்கொடுத்த சவால்கள் அனுபவங்களை புடம் போட்டாலே போதுமானது. இலங்கையில்  மலையக அரசியல் என்பது  இப்போதைய காலகட்டத்தில் தனித்துவமானது, வித்தியாசமானது, சவால்மிக்கது. இடறி விழுந்தாலும் எழ முடியாது. சாணக்கியமான முடிவுகள் ,நகர்வுகள் மூலமே எதிர்நீச்சல் போட முடியும். ஜீவனால் போட முடியுமா என்பதை தேர்தல் தான் பதில் கூறும்.