(நா.தனுஜா)

அண்மையில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ இன்றி நடத்தப்பட்ட மத்திய வங்கி அதிகாரிகளுடனான கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கடுந்தொனியில் அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குகின்றார்.

அக்கூட்டத்தில் நிதியமைச்சர் இல்லாதது ஏன்? இவ்விடயத்தில் அவர்களுக்கு இடையிலுள்ள முரண்பாடுகள் என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, நாட்டின் பொருளாதாரத்தைத் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றலுள்ள, செயற்திறன் மிக்க ஒருவரிடம் நிதியமைச்சை ஒப்படைப்பதுடன் பொருளாதார மீட்சிக்கான சலுகை நிவாரணத்திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

ஐக்கிய  தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இன்றளவில் நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் இராணுவத்தினரின் பங்குபற்றுதல் வெகுவாக அதிகரித்து வருகின்றது. முன்னாள், இந்நாள் இராணுவ வீரர்கள் அங்கம் வகிக்கும் இரு விசேட ஜனாதிபதி செயலணிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. போரின் படையினரை ஈடுபடுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் தற்போது நிர்வாகத்தில் அரச அதிகாரிகளுக்கு மேலாக இராணுவத்தினருக்குப் பொறுப்புக்களும், அதிகாரங்களும் வழங்கப்படுவதென்பது ஜனநாயகத்தின் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதொன்றாகும்.

அதேபோன்று உலகலாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், ஏனைய நாடுகளின் அரசாங்கங்கள் பொருளாதார மீட்சிக்கான சலுகை அடிப்படையிலான செயற்திட்டங்களை அறிவித்து வருகின்றன.எனினும் எமது நாட்டில் அத்தகைய நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இவ்வாறான சலுகை அடிப்படையிலான முறையான திட்டங்கள் எவையுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை முன்கொண்டு செல்வது மிகவும் கடினமானதாகும்.

மேலும் அண்மையில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ இன்றி நடத்தப்பட்ட மத்திய வங்கி அதிகாரிகளுடனான கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கடுந்தொனியில் அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குகின்றார். அக்கூட்டத்தில் நிதியமைச்சர் இல்லாதது ஏன்? இவ்விடயத்தில் அவர்களுக்கு இடையிலுள்ள முரண்பாடுகள் என்ன? அதேபோன்று இவர்களுடைய அரசாங்கத்தில் எப்போதும் நிதியமைச்சு ஜனாதிபதி அல்லது பிரதமருக்குக் கீழேயே காணப்படுகின்றது. பொருளாதாரத்தைத் திறம்பட நிர்வகிக்கக்கூடிய வேறு எவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் இல்லையா? நாம் ஆட்சியிலிருந்த போது நிதியமைச்சை ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர போன்றவர்களிடம் வழங்கினோம். பிரதமர் அவற்றைக் கையகப்படுத்தி வைத்திருக்கவில்லை. எனவே பொருளாதாரத்தைத் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றலுள்ள, செயற்திறன் மிக்க ஒருவரிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்படுவதுடன் பொருளாதார மீட்சிக்கான சலுகை நிவாரணத்திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும்.

அத்தோடு மத்திய வங்கியின் ஆளுநரை ஜனாதிபதியே நியமிக்கின்றார். பின்னர் அவர்கள் சரியாக செயற்படவில்லை என்று கூறுகின்றார். எனின் நியமனம் குறித்த தனது தீர்மானம் தவறென்று அவரே ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறு பொறுப்பற்ற வகையில் செயற்படாமல் நாட்டின் நலனை முன்நிறுத்திய தீர்வொன்று அவசியமாகும்.