ஜனநாயக சோசலிச நாடாகிய இலங்கை ஜனநாயக சோசலிச சர்வாதிகார நாடாக மாறிக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆட்சி இந்த மாற்றத்திற்கு வித்திட்டிருக்கின்றது. இந்த மாற்றங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனநாயக நாட்டுக்கே உரிய சிவில் நிர்வாக நடவடிக்கைகள் ஊழல் மோசடிகளைக் காரணம் காட்டி பலவீனப்படுத்தப்படுகின்றன. பலவீனப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தப் பலவீனத்தை ஈடு செய்கின்றோம் என்ற போர்வையில் அரச நிர்வாகக் கட்டமைக்குள்ளே இராணுவம் வலிந்து புகுத்தப்படுகின்றது. இதற்கு இராணுவத்தின் முக்கிய பொறுப்பாகிய தேசிய பாதுகாப்பும் ஒரு முக்கிய காரணமாகக் காட்டப்படுகின்றது.

நேர்மையான இறுக்கம் மிகுந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே சிவில் நிர்வாகத்தில் பணி ஒய்வு பெற்றவர்களும் பதவியில் உள்ளவர்களுமாகிய இராணுவ உயரதிகாரிகள் நியமிக்கப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சிவில் அதிகாரிகளைப் போன்று இராணுவத்தினர் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடமாட்டார்கள் என்ற காரணமும் கூறப்படுகின்றது.

தேசத்தைப் பாதுகாப்பது முப்படைகளையும் உள்ளடக்கிய இராணுவத்தின் பொறுப்பு. அது, அதன் தலையாய கடமை. புருஷ லட்சணம் உத்தியோகம் - ஆணுக்குச் சிறப்பு தொழில் செய்வது என்பது போன்று பாதுகாப்பு வழங்குவதே இராணுவத்திற்கு உரிய லட்சணம். பொதுவான பாதுகாப்புக்கு அப்பால் அவசர நிலைமைகள் ஏற்படும்போதும், திடீரென ஏற்படுகின்ற தேசிய இடர் நிலைமைகளின்போதும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட வேண்டும். ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.

அதற்கான கடமைசார்ந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் இராணுவத்தினருக்குப் பயிற்சியளிக்கப்படுகின்றது. அதற்குரிய வளங்களும் வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படுகின்றன. மொத்தத்தில் அரசாங்கத்தின் ஓர் அங்கமாகவே அரச படைகளும் அவற்றின் செயற்பாடுகளும் வகுத்து, தொகுத்து உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரையறையை மீறுவது இராணுவத்திற்கு அழகல்ல. இராணுவத்தைத் தனது வசதிக்காக அரசு அந்த வகையில் பயன்படுத்துவது ஆட்சி நிர்வாகத்திற்கும்  நல்லதல்ல.

பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அங்கமாக இராணுவம் திகழ்கின்றது. முப்படைகளையும் கொண்டு நடத்துவதற்கான அதிகாரம் முப்படைகளின் தளபதியைச் சார்ந்திருக்கின்றது. நிறைவேற்று அதிகார வல்லமை கொண்ட ஜனாதிபதியே முப்படைகளின் தளபதி. இது அரசியலமைப்பு ரீதியான பதவி வழியிலான ஏற்பாடு.  

ஜனாதிபதி தேர்தல் என்ற மிக முக்கியமான தேர்தல் கட்டமைப்பின் கீழ், நாட்டு மக்கள் அனைவரும் நேரடியான வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகின்றார். அவரே நாட்டின் அதி உயர் அரச தலைவர். அந்த வகையில் அவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவராகவும் அவர்களுடைய நலன்களைப் பேணுபவராகவும் செயற்பட வேண்டியது அவசியம். அந்த விடயத்தில் நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய கடப்பாட்டை அவர் கொண்டிருக்கின்றார்.

ஆனால் அதற்கு மாறாக, முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் தனிமனிதராகிய ஜனாதிபதியின் அரசியல் தேவைகள், விருப்பு வெறுப்புகளுக்கு அமைவாகவே நாட்டின் இராணுவம் (முப்படையினரும் பொலிசாரும்) இயக்கப்படுகின்றது. இராணுவமும் அதற்கேற்ற வகையில் இயங்குகின்றது.

புதிய அரசாங்கத்தில் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளுக்குள்ளே இராணுவம் வலிந்து திணிக்கப்படுகின்றது. திணிக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன் கோத்தாபாய ராஜபக்ஷ தனக்கு இதமான முன்னாள் இராணுவ அதிகாரிகளையும், பணி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளையும் அமைச்சுக்களின் செயலாளர்களாகவும் முக்கிய சிவில் நிலை உயரதிகாரிகளாகவும் நியமித்துள்ளார்.

இவர்களில் முதன்மை நிலையில் ஜனாதிபதியின் வலது கரமாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகிய பணி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன திகழ்கி;ன்றார். கட்டமைப்பு ரீதியாக அவருடைய நிர்வாகச் செயற்பாடுகளுக்கு உட்பட்ட இராணுவத் தளபதியின் தலைமையில் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள தேசிய இடர் நிலைமையை எதிர்கொள்வதற்கான செயலணி உருவாக்கப்பட்டு, செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதனையும்விட கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் இடங்களைக் கண்டறிந்து பராமரிப்பதற்கான செயலணியும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மதிக்கும் பண்பான ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குமான விசேட செயலணியும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் செயலணிகளின் தலைமைப் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமே வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த இரண்டு செயலணிகளுமே பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு நேரடியாக பொறுப்பு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இது ஜனநாயக நடைமுறைகளுக்கு முரணான ஏற்பாடு.

அரசியலமைப்பை அப்பட்டமாக மீறிய செயற்பாடு.

இதனால்தான் ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் என்ற அமைப்பினர், நாட்டின் ஜனநாயகமும் அரசியலமைப்பும் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவமதிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.  

ஜனநாயக முறைமைக்கு அமைவாக ஓர் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதுவே நாட்டின் ஆட்சி முறைமையை வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. அதுவே நாட்டின் அதி உயர் சட்டம். சட்டங்களுக்கெல்லாம் தாய்ச் சட்டம். அரச நிர்வாகத்தை வழிநடத்திச் செல்வதும் அதுவே. அந்தச் சட்டத்திற்குப் பணிந்து, உரிய கௌரவத்தை அளித்துச் செயற்பட வேண்டியது அனைத்து குடிமக்களினதும் கடமையாகும். தவிர்க்க முடியாத பொறுப்புமாகும்.

அரியலமைப்பிற்கு மதிப்பளித்து, அதனைப் பாதுகாக்கும் வகையில் விசுவாசமாகச் செயற்படுவோம் என்று அரச நிர்வாகப் பொறுப்புகளை ஏற்;பவர்களும், ஆட்சிப் பொறுப்பை ஏற்பவர்களும் தமது பதவிப் பிரமாணத்தின்போது. சத்தியப்பிரமாணம் செய்கின்றார்கள். இந்த சத்தியப்பிரமாணத்தை மீறக் கூடாது. அது மீறப்படக் கூடாதது.

ஏனெனில் நாட்டின் அதி உயர் சட்டம் என்பதற்கும் அப்பால் அசாங்கத்தின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கின்ற அடிப்படைச் சட்டமே அதுதான். அரசாங்கத்தின் கட்டமைப்புக்கள் அதன் அங்கங்கள் என்பவற்றுக்கிடையே நிலவுகின்ற தொடர்புகளைத் தீர்மானிப்பது அரசியலமைப்பின் முக்கிய பணியாகும். அதேவேளை, அவற்றுக்கிடையே ஏற்படுகின்ற முரண்பாடுகள், சந்தேகங்கள் போன்றவற்றைத் தெளிவுபடுத்தி அந்தந்த அம்சங்களின் வரையறுக்கப்பட்ட அதிகார எல்லைகளைத் தெளிவுபடுத்தி அவைகள் செவ்வனே செயற்படுவதற்கான வழித்தடத்தைக் காட்டுவதும் அரசியலமைப்பின் பணியாகும்.

முப்படைகளின் தளபதிகள், நாட்டின் புலனாய்வு துறைகளின் தலைமை அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகளை உள்ளடக்கிய ஜனாதிபதியின் விசேட செயலணியானது, அரசியலமைப்பை மீறிய செயல் வல்லமைக்கான அதிகாரங்களைப் பெற்றிருக்கின்றது. இது நாட்டின் பிரதமர், அமைச்சரவை, நீதி;த்துறை, பொதுச் சேவைக்கான கட்டமைப்பு மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அதிகாரங்களை மேவிச் செயற்படத்தக்க அதிகார அந்தஸ்தையும் பெற்றிருக்கின்றது.

ஒட்டு மொத்தத்;தில் ஜனநாயக ஆட்சியின் மூன்று முக்கிய துறைகளில் ஒன்றாகிய நிறைவேற்றதிகாரம் என்ற நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியின் மறு வடிவமாக அல்லது அதன் நிழல் வடிவமாக இந்த விசேட ஜனாதிபதி செயலணி அதிகாரங்களைக் கொண்டதோர் அரசியல் அமைப்பாக நியமிக்கப்பட்டிருக்கின்றது.

அரச நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்கனவே ஆட்சிச் செயற்பாடுகளை செம்மையாகக் கொண்டு நடத்துவதற்குரிய நிறுவனங்களும், அம்சங்களும் அரசியலமைப்பின் ஊடாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் மூன்றாவது அரசியலமைப்பாகிய இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசுக்கான அரசியலமைப்பில் சட்ட ரீதியான கட்டமைப்புக்களை இவைகள் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு அமைவாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் இதுநாள் வரையிலும் செயற்பட்டிருக்கின்றன.

ஆனால் எல்லையற்ற அதிகாரங்களைக் கொண்டதாக பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கும் பண்பான மற்றும் ஒழுக்கமுள்ள சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்த விடேச ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதையும், சட்டத்தை மதிக்கின்ற பண்பான ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதையும் ஒரே தர வரிசையில் கொள்ள முடியுமா என்பது குறித்து சமூகத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது.

நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைள் வேறு. சட்டத்தை மதித்துச் செயற்படுகின்ற ஒழுக்கத்தைக் கொண்ட சமூகத்தை உருவாக்குவது என்பது வேறு. சமூக ஒழுக்கம் என்பது காலம் காலமாகவும் வாழையடி வாழையாகவும் நாட்டில் கட்டிவளர்க்கப்பட்டு போற்றிப் பேணப்பட்டு வருகின்றது. இதில் புதிதாக உருவாக்குவதற்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

நாட்டில் போதைப் பொருட்களின் பாவனையும் கடத்தலும் விநியோகமும் கட்டுக்கடங்காமல் பெருகி இருக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக குற்றவியல் சட்டங்கள் என்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் என்றும் அபாயகரமான மருந்துகள் குறித்த சட்டம் எனவும் பல்வேறு சட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற கடமை ஒழுங்கின் கீழ் அந்தச் சட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

பாதாள உலகத்தினரும், போதைப்பொருள் கடத்தல்களும் கட்டுக்கடங்கமாமல் பெருகி அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்குமேயானால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களில் விசேட அம்சங்களை உள்ளடக்கி அவற்றை மறுசீரமைக்க வேண்டும். மறுசீரமைக்கப்படுகின்ற அந்தச் சட்டங்களை இறுக்கமாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது அந்தக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், அதன் ஊடாக வழிதவறியவர்களை சமூகத்தில் ஒழுக்கமுள்ளவர்களாக மாற்ற முடியும்.

போதைப்பொருள் பாவைனயும், கடத்தலும் மற்றும் பாதாள உலகத்தினரும் சமூகத்தில் ஒரு சிறிய பங்கினராகவே உள்ளனர். முழு சமூகமும் இந்த நிலைமைக்கு மாற்றமடையவில்லை. சமூகம் சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்கின்ற நற்பண்புகளைக் கொண்ட ஒழுக்கமுள்ளதாகவும் நாகரிகம் கொண்டதாகவும் திகழ்வதனால், அதனை ஒழுக்கமுள்ளதாக மாற்றுவதற்குரிய அவசியம் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களை மறுசீரமைக்க வேண்டுமாயினும்சரி, புதிய சட்டங்களை உருவாக்க வேண்டுமானாலும்சரி அதனை நாடாளுமன்றம் என்ற சட்டவாக்கத்துறையே செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பும் கடமையும் நாடாளுமன்றத்தையே சார்ந்திருக்கின்றது. அதற்கான உரிமைகளும் பொறுப்புக்களும் அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத்திற்கே வழங்கப்பட்டிருக்கின்றன.

நாடாளுமன்றம் என்ற சட்டவாக்கத்துறையின் நடவடிக்கைளை நிறைவேற்றதிகாரமாகிய நிறைவேற்று அதிகார வல்லமையைக் கொண்ட ஜனாதிபதி செய்ய முடியாது. செய்யவும்கூடாது. அவ்வாறு செயற்படுவது ஜனநாயகத்தின் முக்கிய மூன்று தூண்களுக்கிழையிலான அதிகார வலுச் சமநிலையைக் குலைத்துவிடும். அதிகார வலுவேறாக்கம் என்ற கட்டமைப்பின் கீழ் இந்த மூன்று துறைகளும் தம்மளவில் தனித்துவமானதாகவும், சுதந்திரமான செயற்பாட்டைக் கொண்டதாகவும் திகழ முடியாது.

இந்த மூன்று துறைகளில் ஏதேனும் ஒன்று மற்றையதின் செயற்பாடுகளில் மூக்கை நுழைத்தாலும் அல்லது அந்த அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் அது நாட்டின் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறிய செயற்பாடாகும்.

அதிகார வலுவேறாக்கம் பாதிக்கப்படுமானால், அது மீறப்படுமேயானால் ஜனநாயகம் வலுவிழந்து போகும். அங்கு சர்வாதிகாரம் தலையெடுத்துவிடும்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலணிகளின் உருவாக்கத்தின் மூலம்  இத்தகைய ஒரு நிலைமையே நாட்டில் உருவாகி இருக்கின்றது. நாடு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கின்றது. இந்தத் தேர்தலில் மூன்றிலிரண்டு அல்லது அதற்கும் அதிக அளவிலான பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி அரச தரப்பினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே தேர்தல் காலச் சூழலில் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் புறந்தள்ளுகின்ற செயற்பாடுகளில் அரச தரப்பினர் ஈடுபடுவது நல்லதல்ல. குறிப்பாக நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தனது அதிகார வல்லமையைக் கொண்டு அவ்வாறு செயற்படுவது – சர்வாதிகாரத்தை நோக்கி நகர முயற்சிப்பது பாரதூரமான எதிர்கால விளைவுகளுக்கே வழிவகுக்கும்.

பி.மாணிக்கவாசகம்