(க.கமலநாதன்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் கடற்படை வீரருமான யோஷித்த ராஜபக்ஷவிடம் அனுமதியின்றி மேற்கொண்ட 50 வெளிநாட்டு பயணங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு கடற்படை தீர்மானித்துள்ளது. 

தற்போது யோஷித்த ராஜபக்ஷவிடம்  நிதி குற்றப்புலணாய்வு பிரிவினரின் விசாரணைகள்  முன்னெடுக்கப்படுகின்றன. அவை நிறைவடைந்ததும் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை  அறிவித்துள்ளது. இது குறித்து கடற்படை பேச்சாளர் கேப்டன் அக்ரம் அலி  வீரகேசரி இணையதளத்திற்கு தெரிவித்தாவது,

முன்னாள்  ஜனாதிபதியின் மகன் யோஷித்த ராஜபக்ஷ தற்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் மேற்கொண்ட மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றார்.

லெப்டினன் கொமாண்டர் வெலகெதர விவகாரத்தில் மாத்திரம் இராணுவ நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் யோஷித்தவின் விவாகாரத்தில் மாத்திரம் ஏன் மாற்றுப்போக்கை கடைப்பிடிக்கின்றீர்கள் என்பதே சகல ஊடகங்களினதும் கேள்வியாக உள்ளது. இவ்விருவரின் குற்றச் செயற்பாடுகளிலும் வேறுபாடுகள் உள்ளது. எனவே விசாரணை முறைகளும் வேறுபடுகின்றன.

எவ்வாறயினும் முப்படைகளின் தலைவர் என்ற வகையில் லெப்டினன் கொமாண்டர் வெலகெதர தொடர்பிலான முடிவுகளை ஜனாதிபதினாலேயே எடுக்கப்படும்.  ஆனால் யோஷித்த ராஜபக்ஷ மீதான விசாரணைகள் முன்னரும் இடம்பெற்றது.

இந்நிலையிலேயே கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி யோஷித்த சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் அதனையடுத்து பெப்ரவரி  28 ஆம் திகதி அவர் கடற்படையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டார். 

கடந்த காலங்களில் அவர்  கடற்படையில் சேவையாற்றிய போது 74 தடவைகள் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாகவும். அவற்றில் 24 தடவைகள் மாத்திரமே கட்டளை தளபதியின் அனுமதியுடன் சென்றுள்ளார் என்றும் தெரியந்துள்ளது.  மேலும் 50 பயணங்களை அனுமதிபெறாமல் சென்றுள்ளமை தொடர்பிலேயே அவர் மீது கடற்படை விசாரணைகளை  முன்னெடுக்கப்பட்டுத்திருந்தது.

இதனிடையே இவர் நிதிகுற்ற புலணாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதனால் கடற்படை விசாரணைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன .எனவே அவர் மீதான நிதிக்குற்றப்புலணாய்வு பிரிவினரின் விசாரணைகள் முற்றுப்பெற்றதன் பின்னர் கடற்படையின் விசாரணைகளுக்கு யோஷித்த முகம் கொடுக்க வேண்டும் என்றார்.