பழம்பெரும் நடிகரும், பிரபல மூத்த திரைப்பட நடிகை எம். என். ராஜம் அவர்களது கணவரும், திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவருமான ஏ.எல். ராகவன் இன்று சென்னையில் காலமானார். 

‘புதையல்’ என்ற படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில், நடிகர் சந்திரபாபுவுடன் இணைந்து முதன்முதலில் பின்னணி பாடி, பாடகராக அறிமுகமானவர் ஏ எல் ராகவன். அதே தருணத்தில் 1947ஆம் ஆண்டில் வெளியான ‘கிருஷ்ண விஜயம்’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். ‘விஜயகுமாரி’ என்ற படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானாலும், அந்த படத்தில் அவர் குமாரி கமலாவிற்காக பெண் குரலில் பாடலை பாடியிருந்தார்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘எங்கிருந்தாலும் வாழ்க...’ என்ற பாடலை பாடி பிரபலமானவர்.  ‘கல்லும் கனியாகும்’, கண்ணில் தெரியும் கதைகள் என்ற இரண்டு படங்களை தயாரித்து, தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர். திரையிசைத் துறையில் மேடையில் பாடும் இசைக்குழுவை உருவாக்கி, அதனை பிரபலப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிகை எம்.என் ராஜம் அவர்களை கரம் பிடித்து, அவருடன் இனிய இல்லறத்தை நடத்தி வந்த அவருக்கு இன்று காலை எழு மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை பலனின்றி காலையில் உயிரிழந்தார்.