அறிமுக இயக்குனர் சலீல் கல்லூர் என்பவர் இயக்கத்தில் தயாராகும் ‘சாலமோன் 3டி’ படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விஜய் யேசுதாஸ் நடிக்கிறார்.

பிரபல பின்னணி பாடகராக அறியப்படும் விஜய் யேசுதாஸ், இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் தனா இயக்கத்தில் ‘படை வீரன்’ என்ற படத்தில் கதையின் நாயகனாகவும் உயர்ந்தார். தற்போது அறிமுக இயக்குனர் சலீல் கல்லூர் என்பவரது இயக்கத்தில் தயாராகும் ‘சாலமோன் 3டி’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இதுதொடர்பாக விஜய் யேசுதாஸ் பேசுகையில்,“ இந்தப் படத்தின் கதை மிகவும் எளிமையானது. கதையை இயக்குனர் விவரித்தபோது அதில் உள்ள திரில்லர் அம்சங்கள் பிடித்துப் போனதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்தப்படத்தில் நான் சர்ப்ஃரோஷ் என்ற கதாபாத்திரத்தில் தொழிலதிபராக நடிக்கிறேன். இசையை அதிகம் நேசிக்கும் இந்த தொழிலதிபருக்கு வாழ்க்கையில் ஏற்படும் புதிரான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. டுபாய், மலேசியா, குலுமனாலி, கேரளா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.” என்றார்.

விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.