(எம்.ஆர்.எம்.வஸீம்)

சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் இடம்பெறும்போது முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளின் பிரகாரம் செயற்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கும் சூரிய கிரகணம் தொடர்பாக விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாளை மறுதினம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணமும் எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணமும்  ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நிகழவிருக்கும் சூரிய கிரகணம் உலகில் பல பாகங்களில் வலைய சூரிய கிரகணமாக தென்படும். 

அதேவேளை இலங்கையில் கொழும்பு நேரப்படி காலை 10:29 மணி முதல் பிற்பகல் 01:19 மணி வரை பகுதி சூரியக் கிரகணமாக  தென்படும் என அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜூலை மாதம் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிகழவிருக்கும் சந்திரக் கிரகணம் புறநிழல் சந்திர கிரகணம் எனவும் அது இலங்கைக்குத் தென்படாது என்றும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவவை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)

எனவே நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்படவிருக்கும் சூரிய கிரகணத்தை ஒருவர் நேரில் காணும்போது அல்லது கண்டவர்கள் பலரும் அறிவிக்கும் போது கிரகணத் தொழுகையை நிறைவேற்றலாம். கிரகணத் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்படுவது வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும் என்பதால் கிரகணத் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கை மற்றும் சமூக இடைவெளிபேணல் போன்ற விடயங்களில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கவனத்திற் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு பள்ளிவாசல் நிருவாகிகள் மற்றும் ஆலிம்களைக் கேட்டுக் கொள்கிறது.