2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுக் குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவில் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையில் 2011 ஆம் ஆண்டு மும்பை – வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இடம்பெற்றது.

இந்த போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாகவும் உலகக் கிண்ணம் பணத்திற்காக இந்தியாவிற்கு தாரைவார்க்கப்பட்டதாகவும் அது தொடர்பில் தம்மிடம் சகல ஆதாரங்களும் இருப்பதாகவும் அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த  மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரான K.D.ருவன்சந்திரவிற்கு அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனைக்கு அமைவாகவே விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.