ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் பாதுகாப்பு பேரவையின் 2021 - 2022 காலப்பகுதிக்கான நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பேரவை வாக்களிப்பில் அளிக்கப்பட்ட 192 வாக்குகளில் 184 பெரும்பான்மை வாக்குகளை பெற்று பாதுகாப்பு பேரவையின் 2021 - 2022 காலப்பகுதிக்கான நிரந்தரமற்ற உறுப்பினராக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கையிலுள்ள  இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள  ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

பேரவையை வலுவாக்குவதில் இந்தியாவின் ஆளுமை மீது சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டினை இந்த வாக்களிப்பில் காணப்பட்ட வலுவான ஆதரவு காண்பிக்கின்றது.

1946 ஜூன் 26 ஆம் திகதி சான் பிரான்ஸிஸ்கோவில் ஐ.நா சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ள இந்தியா, ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பினராக இருந்து வருகிறது. தற்போது எட்டாவது தடவையாக பாதுகாப்பு பேரவைக்கு இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பேரவையின் செயற்பாடுகளுக்கு தனது உயர்ந்த அனுபவம் மற்றும் மரபினை இந்தியா வழங்குகின்றது.  

இந்த தலைமுறை எதிர்கொள்ளும் மிக மோசமான நெருக்கடியின் நிழலுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவை வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. இதனை சிறந்த  உலகமாகவும், சிறப்பான இடமாகவும் உருவாக்குவதற்கு சர்வதேச ஒத்துழைப்பையும் பல்தரப்பையும் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதனை சிந்திப்பதற்கு கொவிட்19 எமக்கு வழிவகுத்தது.  

மறுசீரமைக்கப்பட்ட பல்தரப்புக்கான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கின் அடிப்படையிலான வழிகாட்டலின்கீழ், பாதுகாப்பு பேரவையின் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பினை வழங்குவதற்கும், தற்போது காணப்படும் நெருக்கடி நிலை இந்தியாவுக்கு வாய்ப்பளித்துள்ளது.  

மறுசீரமைக்கப்பட்ட  பன்முக முறைமைக்கான  புதிய நோக்கு நிலை  என்ற தொனிப்பொருளின் கீழான ஐந்து முன்னுரிமைகளின் அடிப்படையில் இந்தியா வழி நடத்தப்படும். முன்னேற்றத்துக்கான புதிய வாய்ப்புக்கள், சர்வதேச பயங்கரவாதத்துக்கான வினைத்திறன் மிக்க பதில் நடவடிக்கை, பல்தரப்பு முறைமைகளின் மறுசீரமைப்பு , சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கான பரந்த அணுகு முறை, மற்றும் மனித தொடுதலுடனான தொழில் நுட்பம் உள்ளிட்ட இந்த ஐந்து முன்னுரிமை விடயங்கள் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந்த வருடம் நாம் அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவினையும் பின்னர் 2022 இல் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தையும் கொண்டாடும் நிலையில் பாதுகாப்பு பேரவையில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் உலகம் ஒரு குடும்பம் என்ற எமது பண்பினை உலகுக்கு கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குகிறது.