(நா.தனுஜா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசாரத்தின் போதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி அஞ்சலி நிகழ்வின் போதும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தனர்.

ஆனால் பிரதமர் அண்மையில் தோட்ட உரிமையாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது சம்பள உயர்வு பற்றி கவனஞ்செலுத்துமாறு மாத்திரம் கோரிக்கை விடுத்திருக்கிறார். அவ்வாறெனின் பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபாவைப் பெற்றுத்தருவதாக ஏன் வாக்களித்தார்கள் என்று இலங்கைத் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.யோகராஜா கேள்வி எழுப்பினார்.

இலங்கைத் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் சுரேஷ், தற்போது அதுபற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்த சங்கத்தின் தலைவராக ஹரீன் பெர்னாண்டோவும், பொதுச்செயலாளராக வடிவேல் சுரேஷும் செயற்படுவதற்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு பெறப்பட்ட பின்னரேயே நவீன் திஸாநாயக்க தலைவராகத் தெரிவானதுடன், நான் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டேன்.

வடிவேல் சுரேஷ் தொடர்பில் அனைவரும் நன்கறிவார்கள். ஆரம்பத்திலிருந்தே வெவ்வேறு தரப்பினரோடு மாறிமாறி செயற்பட்டுவந்த அவர், கடந்த 2018 அக்டோபர் அரசியலமைப்பு சதியின் போது மாத்திரமே பல தடவைகள் கட்சித்தாவலில் ஈடுபட்டார். இந்நிலையில் தற்போது ஹரீன் பெர்னாண்டோ அமைதியாக இருக்கும்போதும் வடிவேல் சுரேஷ் தொடர்ச்சியாக இதுபற்றி கருத்துக்களை வெளியிட்டு வருவதிலிருந்து, அவர் இலங்கைத் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தை தனது உடமையாக்கிக் கொள்வதற்கே முயற்சிக்கிறார் என்று எண்ணத்தோன்றுகிறது.

அடுத்ததாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசாரத்தின் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் ஒன்றும் சாத்தியமாகவில்லை. அவர்கள் உறுதியளித்துவிட்டு பின்னர் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று கருதுகிறார்கள் போலும். விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவிருப்பதுடன், அதன்போது மக்கள் தமது நிலைப்பாட்டைக் காண்பிப்பார்கள் என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.