(எம்.மனோசித்ரா)

தண்டனை பெற்ற பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணர்தன , சிறைச்சாலைகளில் உள்ள பாதாள உலகக்குழுவினருக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கெதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

சிறைச்சாலைகளில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம். தண்டனை பெற்ற பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம். சிறைச்சாலைகளில் உள்ள பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கெதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஊழல் மற்றும் பாதாள உலக குற்றவாளிகளுடன் தொடர்புகளை பேணிய சிறைச்சாலை அதிகாரிகள் மீது ஏற்கனவே நாம் விசாரணையை ஆரம்பித்துள்ளோம். 

இதுபோன்ற அதிகாரிகள் மீது தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுவதானது,  எங்கள் மீது பழி ஏற்படுவதை தவிர்பதற்கான நடவடிக்கை அல்ல. அதிகாரிகள் மீது  மிரட்டல் விடுப்பதற்காக இந்த விடயத்தை நான் கூறவில்லை. மாறாக தங்கள் கடமையை கௌரவமான  முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகின்றேன்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் ஊழலற்ற மற்றும் கௌரவமான சேவையை எதிர்பார்க்கின்றோம். பாதாள உலக குற்றவாளிகளிடம் சிக்காமல் ஊழலற்ற சிறைச்சாலைகள் முறைமையை உருவாக்குவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் தமது மனசாட்சிக்கு அமைய சேவையாற்ற வேண்டும்.

வெலே சுதா அல்லது கஞ்சிபானை இம்ரான் போன்ற திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களினால் வழங்கப்படும் பணத்தினை உங்களது குழந்தைகளின் உணவு மற்றும் கல்வித்தேவைகளுக்கு பயன்படுத்தி மரணப்படுக்கையின் போது உங்களது மனநிம்மதியை சீர்குலைக்க இடமளிக்க வேண்டாம். 

நீங்கள்  ஓய்வு பெறும்போது இதற்காக வருத்தப்படவேண்டிய நிலை ஏற்படும்.

நீதி அமைச்சின் கீழ் சிறைச்சாலை திணைக்களம் இயங்கினாலும், நாடு தழுவிய சிறைச்சாலைகளில் உள்ள 27,000 க்கும் மேற்பட்ட கைதிகள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதால், திணைக்களம் தொடர்பான விடயங்களில் தலையிடுவதற்கு எனக்கு உரிமை உள்ளது.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக விஷேட அதிரடிப்படை வீரர்கள்  உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஆபத்துக்களை எதிர்நேக்குகின்றனர். எதிர்கால சந்ததியினர் வாழ  குற்றச் செயல்களற்ற ஒரு சட்டபூர்வமான சூழலை உருவாக்குவதில் சிறை அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

உண்மையாக சேவை செய்யும் உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தல்களையும் சங்கடங்களையும் எதிர்கொள்வார்கள். ஆனால் அவர்களை பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சு இருப்பதால் அவர்களின் செயற்பாடுகளில் இருந்து ஒருபோதும்  பின்வாங்கமாட்டார்கள் என்றார்.