(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டின் பிரதான விளையாட்டுச் சங்கங்கள் சிலவற்றில் நடைபெற்றுள்ள ஊழல் மோசடியை தடுப்பதற்காக விசேட மாநாடு ஒன்றை நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், குறித்த மாநாடு எதிர்வரும் 29 ஆம் திகதியன்று விளையாட்டுத்துறை அமைச்சில் நடத்தப்படவுள்ளது.

கடந்த காலங்களில் உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளின்போது  மேற்கொள்ளப்பட்டுள்ள போட்டி நிர்ணயம், பல்வேறு வகையான மோசடி குற்றங்கள் மற்றும் சட்ட விரோதமாக செய்யப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் குறிப்பிட்ட சங்கங்களின்  நற்பெயர்களுக்கு அபகீர்த்தி ஏற்பட்டது.

இதன்படி இலங்கையிலுள்ள பிரதான விளையாட்டு சங்கங்களான கிரிக்கெட், கால்பந்தாட்டம், ரக்பி, வலைப்பந்தாட்டம், மெய்வல்லுநர், சைக்கிளோட்டம், ஹொக்கி, கரப்பந்தாட்டம்,  கூரைப்பந்தாட்டம் ஆகிய சங்கங்களின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீர, வீராங்கனைகள் என அனைவரும் குறித்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்.

2019 இலக்கம் 24 இன் விளையாட்டுத்துறை விதிகளின் பிரகாரம் வீர , வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரால் எந்த மாதிரியான தவறுகள் இழக்கப்படும் என்பது குறித்து தெளிவுபடுத்துவதே இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.

இந்த மாநாட்டில் சட்ட மா திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன மற்றும் அரசாங்கத்தின்  சிரேஷ்ட சட்டத்தரணியான மனோஹர ஜயசிங்க ஆகியோர் உள்ளிட்ட சிலர் உரை  நிகழ்த்தவுள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கு அமைய இந்த மகாநாட்டை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேற்கூறப்பட்ட விளையாட்டு சங்க வீர, வீராங்கனைகள்  மற்றும் அதிகாரிகள் என அனைவரும் தவறாது சமுகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.